
பரிகாரத்தால் வந்த பலன்!
புறநகரில் அமைந்திருந்த, உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அத்தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டினரும், அதிகாலையிலேயே எழுந்து, வாசல் சுத்தம் செய்து, வண்ண வண்ண கோலமிட்டு, ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் நிரப்பி, தத்தம் வாசலின் அருகில் வைத்திருந்தனர்.
மேலும், இட வசதிகேற்ப மூலிகை செடிகளையும், பழ மரங்களையும் பராமரித்து வளர்த்து வருகின்றனர். தெருவிலுள்ள நாய்களுக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வீடு என, ஆரோக்கியமான புதிய உணவை தருகின்றனர்.
அவ்வூரில், திருட்டு பயம் அறவே இல்லை. இவையெல்லாம் புதிய அணுகுமுறையாக இருக்கவே உறவினரிடம் இதுபற்றி கேட்டேன்.
அவ்வூரில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார், உறவினர்.
அக்கோவில் பூசாரியிடம், தன் மனக்குறைகளை சொல்லி, குறி கேட்டுக் கொண்டிருந்தார், பக்தர் ஒருவர்.
அதற்கு பூசாரி, ஆதரவற்ற மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு வாங்கி தர கோரியும், சில மரங்களின் பெயர்களை கூறி, அவற்றை வளர்க்க சொல்லியும், வாசலில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்கவும் கூறினார்.
அவ்வூரின், அழகு மற்றும் ஆரோக்கியம் இப்போது எனக்கு புரியவே, வியப்புடன் நின்றேன். தேவையற்ற பரிகாரங்களை கூறாமல், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற, நியூட்டனின் கருத்து படி, 'அன்பை கொடு, அன்பை பெறு' என்ற தத்துவத்தை பரப்புகிற, பூசாரியின் வழியே தெய்வத்தை உணர்ந்து மனப்பூரிப்புடன் விடைபெற்றேன்.
— கே.சத்யகணேஷ், கடலுார்.
குடியிருப்பில் சமையல் மேளா!
அண்மையில், என் நண்பர் வசிக்கும் குடியிருப்புக்கு சென்றிருந்தேன். நான் சென்றிருந்த சமயம், குடியிருப்பு பார்ட்டி ஹாலில், 'பபே சிஸ்டம்' முறையில் வைக்கப்பட்டிருந்த உணவுகளை, குடியிருப்புவாசிகள் அனைவரும் ருசித்துக் கொண்டிருந்தனர்.
அதுபற்றி, நண்பரிடம் வினவினேன்.
'எங்கள் குடியிருப்பில், மாதம் ஒருமுறை, 'சமையல் மேளா' கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். ஒவ்வொரு மாதமும் ஒரு பொருளை மையமாக வைத்து, அது சார்ந்த உணவுகளை சமைத்து, அனைவரும் சாப்பிட வைப்போம்.
'இதற்கு முன், சிறுதானிய மேளா, பருப்பு மேளா மற்றும் அரிசி மேளே என, பல மேளாக்களைக் கொண்டாடியுள்ளோம். இந்த மாதம், கீரை மேளா கொண்டாடுகிறோம். அதனால் தான், பலவகைக் கீரைகளால் சமைக்கப்பட்ட குழம்பு, துவையல், மசியல், அடை, வடை, தோசை மற்றும் சூப் என, பல்வேறு, 'ரெசிபி'களை சமைத்து வைத்துள்ளோம்.
'இதன் மூலம், குடியிருப்புவாசிகளுக்குள் அந்நியோன்யமான ஒற்றுமை வளர்வதோடு, அவர்களின் ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்பாக இருக்கிறது...' என்றார்.
நல்ல நடைமுறையை கடைபிடித்து வரும், அக்குடியிருப்புவாசிகளுக்கு, என் பாராட்டுக்களை தெரிவித்தேன்.
— வடிவேல் முருகன், நெல்லை.
பாராட்டுக்குரிய செயல்!
வாரச்சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி, என் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த, தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு மரங்களில் இருந்து முறிந்து விழுந்த துண்டுகள் சாலையெங்கும் சிதறிக் கிடந்தன. அதன் மீதே வாகனங்களை ஏற்றிச் சென்றனர், வாகன ஓட்டிகள்.
நடந்து சென்றவர்களும் மரக்கிளை துண்டுகளை மிதித்தபடி சென்றனரே தவிர, ஒருவரும் அந்த கிளைகளை அப்புறப்படுத்தவில்லை.
அச்சமயம் அந்த வழியே வந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், அவரது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த கிளைகளை எடுத்து ஓரமாக அப்புறப்படுத்தியவாறு வந்தார். எல்லாரையும் போலவே சென்ற நான், ஒரு நொடி சிந்தித்து, என்னுடைய வாகனத்தை திருப்பிய படி வந்து, அந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுடன் இணைந்து மரத்துண்டுகளை அப்புறப்படுத்தினேன்.
எல்லாவற்றையும் அப்புறப்படுத்திய பின், 'மற்றவர்களைப் போலவே நானும் சென்றிருந்தால், நீயும் என்னுடன் சேர்ந்து, இந்த சேவையில் இறங்கி இருக்க மாட்டாய். ஒருவரை பார்த்து மற்றொருவர் செய்வது தான் இப்போது வழக்கமாகி விட்டது. தாமே பொது சேவையில் இறங்கும் காலம் விரைவில் வந்தால்தான் நாட்டுக்கும், நமக்கும், நல்லது...' என்றார், அவர்.
காவல்துறை அதிகாரியின் சேவையைப் பாராட்டி, அங்கிருந்து கிளம்பினேன்.
— ஆர்.ராஜ்மோகன், விழுப்புரம்.