/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: கல்லைக் கடவுளாக்கிய சிறுவன்!
/
விசேஷம் இது வித்தியாசம்: கல்லைக் கடவுளாக்கிய சிறுவன்!
விசேஷம் இது வித்தியாசம்: கல்லைக் கடவுளாக்கிய சிறுவன்!
விசேஷம் இது வித்தியாசம்: கல்லைக் கடவுளாக்கிய சிறுவன்!
PUBLISHED ON : மார் 16, 2025

கல்லில் சிலை வடித்தால், அது கடவுள் தான். ஆனால், ஒரு கல்லையே தன் பக்தியால் கடவுளாக்கினான், ஒரு சிறுவன். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள பாலி என்ற கிராமத்தில் தான், இந்த அதிசயம் நிகழ்ந்தது.
கடலுார் அருகே, திருநாரையூரில் வசித்த நம்பியாண்டார் நம்பி, சிறுவனாய் இருந்த போது, விநாயகருக்கு நைவேத்யம் படைத்தார். விநாயகர் வந்து சாப்பிடவில்லை.
அழ ஆரம்பித்த சிறுவன், 'நீ வராவிட்டால் தலையை உடைத்துக் கொள்வேன்...' எனச் சொல்லி, சுவரில் தலையை மோதினான். அங்கே காட்சியளித்தார், விநாயகர்.
களங்கமற்ற பக்திக்கு கட்டுப்பட்டவர், விநாயகர். குழந்தைகளால் மட்டுமே அதை செலுத்த முடியும். இங்கே, நம்பி போல, மகாராஷ்டிராவில் பல்லால் என்ற சிறுவனும், தன் பக்தியால் விநாயகரை நேரில் வரவழைத்தான்.
மும்பையிலிருந்து, 145 கி.மீ., துாரத்திலுள்ள கிராமம், பாலி. இங்கே கல்யாண்- - இந்துமதி தம்பதியர் வசித்தனர். இவர்களது குழந்தைக்கு, பல்லால் என பெயரிட்டனர்.
பல்லால் என்ற சொல்லுக்கு சூரியன் என பொருள். தங்கள் மகன், சூரியனைப் போல உச்சத்தில் இருக்க வேண்டும் என, விரும்பாத பெற்றோர் யார்? பல்லாலும், தன் பெயருக்கேற்ப, விநாயக பக்தனாக இருந்தான்.
அவன், தன் சக நண்பர்களுடன் கற்களை எடுத்து, அவற்றுக்கு பொட்டு வைத்து, கிடைக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, விநாயகராகக் கருதி வழிபடுவான். விநாயகர் குறித்த கதைகளை நண்பர்களுக்கு சொல்வான்.
ஒருமுறை, ஒரு பெரிய கல்லை கண்டெடுத்த பல்லால், அதற்கு செந்துாரமிட்டு அலங்காரம் செய்தான். வழக்கம் போல், விநாயகர் குறித்த கதையை நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, பக்தி மயக்கத்தில் யாருக்கும் பசி எடுக்கவில்லை. இருளாகி விட்ட நிலையிலும் பேசிக் கொண்டிருந்தனர். இதுபற்றி பல்லாலின் பெற்றோரிடம், புகார் செய்தனர்.
பல்லாலைத் தேடி வந்த அவனது தந்தை, அவன் பெரிய கல் முன் அமர்ந்து தியானத்தில் இருந்ததைக் கண்டார். அவனை எழுப்பினார். அவனோ அசையக் கூட இல்லை.
கோபத்தில், அவன் முன்னிருந்த பூஜைப் பொருட்களை கலைத்து விட்டார். மகனை, ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தார். இது எதுவுமே தெரியாமல், தியானத்தில் மூழ்கியிருந்தான், பல்லால். கண் விழித்து எழுந்த பிறகு தான், இப்படியெல்லாம் நடந்தது தெரிந்தது.
அவன் வருத்தத்துடன், விநாயகரிடம், 'நீ தடைகளைக் களைபவன். என் பூஜைக்கு, என் தந்தையாலேயே தடை. நீ தான் இதற்கு தீர்வு தர வேண்டும்...' என, மனமுருகி வேண்டினான்.
விநாயகரும் அங்கு மனித வடிவில் வந்தார். சிறுவனைத் தொட்டார். அவன் புத்துணர்ச்சி பெற்றான்.
தங்கள் ஊரில் தங்க வேண்டும் என்ற பல்லாலின் கோரிக்கையை ஏற்ற விநாயகர், அவனது பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு, பல்லாலீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குளத்து நீர், விநாயகர் அபிஷேகத்துக்கு மட்டுமே பயன்படும் என்பதால், அதில் இறங்க அனுமதியில்லை.
மும்பை மற்றும் புனேயிலிருந்து, 111 கி.மீ., பாலிக்கு செல்ல, பஸ் மற்றும் கார் வசதி உள்ளது.
தி. செல்லப்பா