
ஜார்ஜ் வீட்டின் முன்புறம் நின்றிருந்த, ஜானவாச காருக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
முழங்கையை மடித்து வைத்து, அதில் இரண்டடி நீள கதம்பச் சரங்களைத் தொங்க விட்டு, காருக்கு முன்னும் பின்னுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கட்டிக் கொண்டிருந்தான், நாகு.
சில சரங்களுக்கு நடுவே, பூச்செண்டுகள் செருகினான். கூடவே, கத்தரிக்கோலும், கயிறும் கையுமாக ஒரு அரை டிராயர் உதவியாளன். வராந்தாவில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், ஜார்ஜ் சாமுவேல். 80வது வயதில், எப்போதாவது சில நாட்கள் இப்படி சுவாரசியம் வருவதுண்டு.
அதுவும் நாகு, முகூர்த்த நாட்களில், தனக்கு சொந்தமான இந்த ஜானவாசக் காரை அலங்காரம் செய்வதைப் பார்க்க அவருக்குப் பிடிக்கும்.
வீட்டின் உள்ளே கூடத்திலிருந்து, ''எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்ப, ஜார்ஜு. உள்ளே வந்து சாப்பிடு மேன்,'' என, அழைத்தாள், மனைவி எஸ்தர்.
எஸ்தரின் அப்பா, ஒரு ஆங்கிலோ இண்டியன். தன் உடம்பில் ஓடுவது, பிரிட்டிஷ் ரத்தம் என, எப்போதுமே, அவளுக்கு ஒரு கெத்து உண்டு.
மெல்ல எழுந்து, 'ஸ்டிக்' துணையுடன் உள்ளே போனார், ஜார்ஜ். வீட்டோடு தங்கி வேலை செய்யும் மேரியம்மா, டைனிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.
''இன்னைக்கும் சிக்கன் மட்டன் கிடையாதா, பேபி.''
''டாக்டர் சொன்னபடி தான் சாப்பாடு. முட்டை பொரிச்சிருக்கா, மேரி. சாப்பிடு,'' என்றாள், எஸ்தர்.
பெருமூச்சு விட்டபடி, சாப்பிட ஆரம்பித்தார்.
நாகுவிடம் இன்று உருளைக் கிழங்கு போண்டா கேட்டிருந்தார். கொண்டு வந்திருப்பான். 'எப்படி இவள் முன் கேட்டு வாங்கித் தின்பது...' என, யோசித்தார், ஜார்ஜ்.
''இன்னுமா அந்த நாகு, காரை அலங்காரம் செய்யறான். சாயங்காலம் ஊர்கோலமா? என்ன அவங்க கல்யாணமோ. மாப்பிள்ளையை கோட்டும், சூட்டும் போட்டு, கார்ல உக்கார வச்சு, சுத்திலும் கசகசன்னு குழந்தைங்க வேற,'' என்றாள், எஸ்தர்.
''ஏதோ அவங்க வழக்கம், பேபி.''
''அந்தக் காரை நிறுத்தி வைக்க, நீ நம்ம வீட்டு, 'ஷெட்'டை கொடுத்திருக்கே பாரு. என்னத்தைச் சொல்ல.''
இருபது ஆண்டுகளுக்கு முன், கஸ்டம்ஸில் வேலை பார்த்து, ஓய்வு பெற்ற, ஜார்ஜ், எப்போதோ வைத்திருந்த அம்பாசிடர் காருக்காக அமைக்கப்பட்டது, 'ஷெட்!' காரை விற்ற பின், காலியாக இருந்தது.
அந்த இடத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், சிகப்பு நிற ஜானவாச காரை எடுத்து வந்து, 'ஷெட்டில் நிறுத்திக்கிறேன், சார். என்னால் முடிஞ்ச தொகையை, நான் வாடகையா மாசா மாசம் தரேன், சார்...' என்றான், நாகமணி எனும் நாகு.
'என்னாலே, இதை பராமரிப்பு பண்ண முடியாதுப்பா. எனக்கும் வயசாயிடுச்சு. கால்லே அடிபட்டப்பறம், 'வாக்கிங்' போறதில்லே. உன் கடைக்கும் வரதில்லே. சர்ச்சுக்கு கூட, என் ப்ரண்ட் யாராவது வந்து கூட்டிட்டுப் போனாத் தான் போறோம்...' என்றார், ஜார்ஜ்.
'தெரியும் சார். நான் எதுனா டிபன் கொண்டு வந்து கொடுக்கட்டுமான்னு கேட்டாலும் வேணாம்னுட்டீங்க. நீங்க ஒண்ணுமே பண்ண வேணாம், சார். நான் அப்பப்ப வந்து தொடைச்சு, சுத்தம் செய்துக்கிறேன். வச்சுக்க இடம் மட்டும் கொடுங்க, சார்...' என்றான்.
அவர் யோசிக்கும் போதே, 'ஜார்ஜ், இப்படி வாயேன்...' என்றாள், எஸ்தர்.
மெல்ல எழுந்து போனார்.
ஜன்னலின் உள் இருட்டில் நின்றிருந்த, எஸ்தர் கிசுகிசுப்பான குரலில், 'அவங்க கல்யாணத்துல ஊர்வலம் போவுற வண்டிய, ஏன் நம்ம வீட்டுல நிறுத்தி வைக்கிறேங்குது அந்த ஆளு. யாரு அது?'
'நம்ம தெரு முனையிலே சின்னதா ஹோட்டல் இருக்கில்லே. அங்க சரக்கு மாஸ்டரா இருக்கிறாரு...'
'வடை, போண்டான்னு வாங்கிட்டு வருவியே, அந்தக் கடையா?'
மெயின் ரோட்டிலிருந்து பிரியும் இந்த கிளைத் தெரு முனையில், சாதா டீக்கடைக்கும் மேலான ஒரு சின்ன ஹோட்டலில் வேலை பார்ப்பவன், நாகு.
நடைப்பயிற்சி முடிந்து திரும்பி வரும்போது, நாகுவின் கடையில், டீ அருந்தி விட்டு வடையோ, ஏதாவதோ வாங்கி வருவார்.
நாலு வீடு தள்ளித்தான், ஜார்ஜின் சிறிய அரை கிரவுண்டு வீடு. ஒரிரு முறை அவருக்கு காய்ச்சலாக இருந்த போது, வீட்டுக்கே வந்து டிபன் கொடுத்து விட்டுப் போவான், நாகு.
எஸ்தருக்கு அந்தப் பண்டம் எதுவும் பிடிக்காது.
'என்ன எண்ணெய்யோ...' என்பாள். தின்ன மாட்டாள். ஜார்ஜ் சாப்பிடவும் அனுமதிக்க மாட்டாள்.
ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டிருந்தான், நாகு.
'வேலுார்லே எங்க பெரியப்பா வச்சிருந்த வண்டிங்க. கல்யாணங்கள்லே மாப்பிள்ளை பொண்ணு அழைப்பு ஊர்வலத்துக்கு, 'சப்-கான்ட்ராக்ட்' கேட்டாரு ஒருத்தரு. பசங்க படிக்கிறாங்க, மேல் வரும்படிக்கு ஆச்சுன்னு வாங்கிட்டேன்...'
'உனக்கு எத்தனை குழந்தைங்க?' என, உள் நிலைப்படியில் நின்று கேட்டாள், எஸ்தர்.
'ஒரு பொண்ணு, எட்டாம் கிளாஸ் படிக்குதும்மா. பையன் ஆறாம் கிளாஸ். எல்லாம் வேலுார்லே தான் இருக்காங்க...' என்றான்.
'நீ மட்டும் இங்கே இருக்கியோ?'
தனியார் பள்ளியின், 'ரிட்டயர்ட்' ஆசிரியை, எஸ்தர். முதுமை லேசாக கூனல் தந்த போதும், உயரமும், ஒல்லியுமாக கம்பீரமாகவே இருப்பாள். பள்ளி வாழ்க்கையின் கண்டிப்பு இந்த, எழுபதிலும் தொடர்கிறது.
'அங்கிட்டு ஒரு பிரைவேட் கம்பெனியில இருந்தேங்க. கம்பெனி மூடிட்டாங்க. இங்கே வந்து ஹோட்டல்ல வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேம்மா...' என்றான், நாகு.
மெயின் ரோடில் ஒரு பெரிய கல்யாண மண்டபம். இந்த கிளைத் தெருவின் பின்னால் உள்ள தெருவில், ஒரு பிள்ளையார் கோவில். இரண்டுக்கும் இடையே மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அவ்வப்போது போவதுண்டு. இப்போது அந்த, 'கான்ட்ராக்டை' நாகு எடுத்திருந்தான்.
காரை நிறுத்த இடம் தேடியவனுக்கு, ஜார்ஜ் வீட்டின் முன்பக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரை கண்ணில் பட, எப்படியோ அனுமதி வாங்கி விட்டான்.
ஹாங்காங்கில் குடும்பத்துடன் இருக்கும், ஜார்ஜின் மகன் ஒருமுறை வந்தபோது கூட, அந்த கார் ஒரு காட்சிப் பொருளாகத்தான் இருந்தது.
நேரம் கிடைக்கும் நாட்களில் வந்து, காரைத் துடைப்பான், நாகு. அந்த அரை மணி நேரமும், ஜார்ஜ் வராந்தாவில் உட்கார்ந்து அவனுடன் அரட்டை அடிப்பது வழக்கம்.
யாரும் பேச வராத, வெளியிலும் போக முடியாத தனிமைக்கு அவ்வபோது கிடைக்கும் பேச்சுத் துணை, நாகு தான்.
சில பாரம்பரியம் விரும்பிய குடும்பங்களிலிருந்து ஜானவாச அழைப்பு வரும் நாட்களில், கடைக்கு விடுப்பு சொல்லிவிட்டு, இப்படி வந்து அலங்காரம் செய்து, எடுத்துப் போவான்.
கோட் சூட் மாப்பிள்ளை, நெருக்கியடிக்கும் குழந்தைகள் சகிதம், இருட்டிய பிறகு இந்தத் தெரு வழியாக அந்தக் கார் ஊர்வலம் போகும்.
அனேகமாக நாகு தான், இரண்டாவது கியரில் மிக மெதுவாக ஓட்டிப் போவான்.
போகஸ் விளக்கு ஒளியில் பட்டுப் புடவைகள், நகைகள், கையில் ஏந்திய சீர் வரிசைகளுடன் பெண்கள் முன்னால் போவர். நாதஸ்வரம், சில சமயம் பாண்டு வாத்தியம் என, அந்த காட்சிகளை வாசல் அருகே சென்று ஆவலுடன் பார்ப்பார், ஜார்ஜ். எஸ்தரும் வராந்தாவில் வந்து நின்று பார்ப்பாள்.
'என்னா ரகளை...' என, முணுமுணுப்பாள்.
அன்று ஏனோ தளர்ந்து போய் வந்தான், நாகு. மிகவும் சோகமாக இருந்தான்.
''என்ன இன்னைக்கும் ஊர்வலம் இருக்குதா,'' என்றார், ஜார்ஜ்.
இல்லை என்பது போல் தலையாட்டினான்.
''எல்லாம் முடிஞ்சு போச்சு, சார்.''
''என்னாச்சு, நாகு.''
''கொஞ்ச நாளாவே எங்க ஹோட்டல் இருக்கிற பில்டிங்கை இடிச்சு, 'ப்ளாட்' கட்டப் போறதா பேச்சு நடந்துச்சு. இப்ப முடிவாயிடுச்சு. இன்னும், 10 நாள்லே எங்க கணக்கை முடிச்சு ஊருக்குப் போகச் சொல்லிட்டாருங்க, எங்க முதலாளி,'' என்றவாறு, வராண்டாப் படியில் சோகமாக உட்கார்ந்தான், நாகு.
''வேலுாருக்குப் போய் திரும்ப வேலை தேடணும், சார். 40 வயசுக்கு மேலே என்ன வேலை கிடைக்குமோ?''
''நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டா, இந்த வண்டிய இன்னா பண்ணப் போறே?'' அதட்டலாக வந்தது, எஸ்தரின் குரல். அவள் கவலை அவளுக்கு.
''இங்கியே யாருக்காவது வித்துட்டுப் போயிடுவேங்க. நாலைந்து பேரு கிட்டே சொல்லி வச்சிருக்கேன். நான் தான் என்ன செய்யப் போறேன்னு தெரியலே... வேலைக்கும் சில பேரு கிட்ட சொல்லி வச்சிருக்கேன்,'' என, கொஞ்ச நேரம் புலம்பிவிட்டுச் சென்றான்.
''இந்தாங்க உங்க போன் அடிக்குது,'' என, ஜார்ஜிடம் எடுத்து வந்து கொடுத்தாள், மேரி. 50 மைல் தொலைவில் இருக்கும், ஜார்ஜின் சகோதரி அழைத்திருந்தாள்.
''என் கணவர் விக்டருக்கு நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கோம், அண்ணே,'' அழுதாள்.
''அழுவாதே, நான்சி. நான் கிளம்பி வரேன்.''
காரில் பயணிக்கக் கூட, எஸ்தரின் உடல் நிலை இடம் தராது என்பதால், மேரியிடம் அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் நண்பர் மூலம் கார் ஏற்பாடு செய்து கிளம்பிப் போனார்.
ஒரு வாரம் கொஞ்சம் கவலையுடனேயே சென்றது. ஒரு வழியாக பிழைத்து விட்டார், தங்கை கணவர்.
ஐ.சி.யூ.,வில் இருந்து, சாதாரண வார்டுக்கு வரவே ஐந்து நாளானது. அப்புறம், 'அப்சர்வேஷன்' அது இது என, மேலும் ஒரு வாரம்.
வீட்டிற்கு வந்து, அவர் தெளிவாகிற வரை கிளம்பவில்லை, ஜார்ஜ். மூன்று வாரம் கழித்து, தங்கை மற்றும் அவள் கணவர் சொன்ன நன்றிகளை ஏற்று, வாடகைக்காரில் கிளம்பினார், ஜார்ஜ்.
தெரு முனை திரும்பிய போது பார்த்தார். நாகு வேலை செய்த ஹோட்டல், கட்டடத்தை இடிக்க ஆரம்பித்திருந்தனர்.
பெருமூச்சு விட்டார்.
வீட்டை அணுகியது, கார். அவர் வீட்டில், பெரிய கேட்டிலிருந்து தெருவிளிம்பு வரை, கார் வந்து போக சிமென்ட் பூசிய லேசான சரிவு ஒன்று இருக்கும்.
இப்போது அது சமன் செய்யப்பட்டு, அங்கே வினோதமான அலங்காரங்களுடன் சிறு பிளாஸ்டிக் படிகளுடன் கடை போல் ஒன்று இருக்க, அதன் திறப்பின் வழியே, நாகுவின் தலை தெரிந்தது. கூடவே ஒரு பெண்ணின் தலையும்.
சின்ன கேட் அருகே கார் நின்று, அவர் இறங்கும் போதே, சிரிப்புடன் ஓடி வந்தான், நாகு.
சாமான்களை எடுத்து உள்ளே கொண்டு போய் வைத்தான்.
''என்ன நாகு, என்னது இது? என்ன பண்றே, அதென்ன கடை?''
''இப்படி வந்து பாருங்க சார்.''
முப்பதுகளில் இருந்த அந்தப் பெண்மணியும் இறங்கி புன்சிரிப்புடன் நின்றாள்.
''என் மனைவி சந்திரா,'' என்றதும், கை கூப்பினாள்.
''என்னா பாக்குறீங்க. நம்ம வண்டி தான் சார், இது. ஒருத்தரு ஐடியா கொடுத்தாரு. 'காரையே ஒரு மொபைல் தள்ளு வண்டி டிபன் கடையா மாத்திப் பாரேன்'னாரு. சரின்னு ஒரு மாதிரியா ஐடியா பண்ணி, கதவெல்லாம் மாத்தி சீட் எடுத்துட்டு, ஒரு தகர டாப் போட்டு, சீரியல் பல்ப் எல்லாம் மாட்டி, தள்ளு வண்டி கடை மாதிரி ஆக்கிட்டேன்.
''எஞ்சின் இருக்கு. காலையிலேயும் சாயங்காலமும் மெயின் ரோட்டுப் பக்கம் போயிடுவேன். பசங்களை பாட்டி வீட்ல விட்டுட்டு, இவளையும் கொஞ்ச நாள் ஒத்தாசைக்கு வரச் சொன்னேன். பத்து நாளாகுது. கொஞ்சம் கொஞ்சமா, 'பிக்-அப்' ஆகிட்டு வருது சார்,'' என்றான், நாகு.
வியப்புடன் நின்றார், ஜார்ஜ்.
''அது சரி, இங்கே எங்க வீட்டு வாசல்ல ஏன் நிறுத்தி வச்சிருகே. வூட்லே அவங்களுக்குப் பிடிக்காதே.''
''நம்ம அம்மா தான் காரையே கடையா மாத்த, 'ஐடியா' கொடுத்து, இங்க வச்சுக்கவும் சொன்னாங்க. கொஞ்சம் முன் பணமும் கொடுத்தாங்க.''
நம்பவே முடியாமல் பார்த்தார், ஜார்ஜ்.
''ஆமா, நான் தான் சொன்னேன். பிள்ளை குட்டிக்காரனாச்சே. நல்லபடியா பிழைக்கட்டும்ன்னு. ஒரு முக்கியமான நிபந்தனை போட்டிருக்கேன். ரத்தக் கொதிப்பு இருக்கிற உனக்கு, எண்ணெய் பலகாரம் எதுவும் கொடுக்கக் கூடாது. கொடுத்தா இங்கே நிறுத்தி வைக்கக் கூடாதுன்னு. சரிதானே, நாகு,'' என்றார், எஸ்தர்.
''ஆமாங்க,'' என, தலையாட்டினான், நாகு.
பத்மினி பட்டாபிராமன்