
கூட்டமான இடங்களுக்குப் போகிறீர்களா... உஷார்!
சமீபத்தில், ஒருநாள் மாலை, பக்கத்து வீட்டு நண்பருடன், எங்கள் பகுதியில் உள்ள, பிரபலமான, 'ஷாப்பிங் மால்' சென்று, தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தேன்.
கூட்டம் நிறைந்த அந்த இடத்தில், ஒரு கடையில் பொருட்களை பார்த்துக் கொண்டிருந்த போது, ஓர் இளம்பெண் எங்கள் அருகில் வந்து, 'அண்ணா, உங்க பேன்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்துடுச்சு. அங்கே பாருங்க...' என, என்னிடம் சுட்டிக்காட்டினாள்.
'ஷாப்பிங்' பையை கீழே வைத்துவிட்டு, பேன்ட் பாக்கெட்டை, 'செக்' செய்தபடி, திரும்பி பார்த்த அந்த நொடி, வேகமாக என், 'ஷாப்பிங்' பையை எடுத்து, கூட்டத்தில் மறைந்து விட்டாள், அந்த பெண்.
அதிர்ச்சியடைந்த நான், அப்பெண்ணை தேடினேன்.
'இங்க இப்படித்தான். ஏதாவது விழுந்துடுச்சுன்னு சொல்லி, கவனத்தைத் திசை திருப்பி, பையை திருடிடுவாங்க. போன மாசம், என் மனைவியின் பர்ஸ் இப்படித்தான் போச்சு...' என்றார், அருகில் இருந்த ஒருவர்.
நண்பர்களே... 'மால்'கள் மட்டுமல்ல, கூட்டமான இடங்கள் எதுவாயினும், இது போன்ற திருடர்கள் திரிந்து கொண்டிருப்பர் என்பதால், விழிப்புணர்வோடு இருந்து, உடமைகளைக் காப்பாற்றி கொள்ளுங்கள்!
— வடிவேல் முருகன், நெல்லை.
புதுமை விழா!
என் உறவினர் ஒருவர் பணிபுரியும் நிறுவனத்தில், ஆண்டுதோறும், 'நினைவுகள் பகிரும் விழா' என்ற நிகழ்வை, நடத்துவது வழக்கம் எனக் கூறி, அதில் கலந்துகொள்ள, எனக்கு அழைப்பு விடுத்தார், உறவினர். நானும், அந்த விழாவுக்கு ஆர்வத்துடன் சென்றிருந்தேன்.
நிகழ்ச்சி துவங்கியதும், ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டனர்.
'இந்த விழாவின் நோக்கம், நம்மை வளர்த்தவர்களுக்கு நன்றி செலுத்துதல் தான். எங்கள் நிறுவன பணியாளர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபரைப் பற்றி, மனம் விட்டு இங்கே பகிர்ந்து, நன்றி தெரிவிக்கலாம்...' என்றனர்.
பணியாளர்கள் யாருக்கு நன்றி தெரிவிக்க காத்திருக்கின்றனர் என்பதை, முன்கூட்டியே கேட்டு வைத்திருந்தது, நிர்வாகம். அவர்கள் குறிப்பிடும் நபர், உயிரோடு இருந்தால், அவர்களை ரகசியமாகத் தொடர்பு கொண்டு, விழாவுக்கு அழைத்திருந்தனர். மறைந்துவிட்ட நபர் என்றால், அவர்களுடைய புகைப்படங்களை, 'பிரேம்' போட்டு கொண்டு வந்திருந்தனர்.
ஒவ்வொரு பணியாளரும் மேடையில், தங்கள் நினைவில் நிறைந்த, நன்றிக்குரிய நபரைப் பற்றி, நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தனர்.
பேச்சு முடிந்ததும், அவர்கள் குறிப்பிட்ட நபர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில், சிறு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மறைந்தவர் எனில், அவர்களின் புகைப்படகளுக்கு, மாலை போட்டு மரியாதை செய்தனர்.
இந்த விழா, வாழ்க்கையில் நம்மை உயர்த்தியவர்களை பாராட்டுவதற்கும், நன்றி உணர்வை வளர்ப்பதற்கும், ஓர் அற்புதமான வழியாக இருந்தது. இதுபோல், மற்ற நிறுவனங்களும் மனித உறவுகளைப் போற்றும், விழாக்களை நடத்தலாமே!
— ஆ.வீரப்பன், திருச்சி.
மண்ணை காப்பாற்றும் மரக்கன்று வியாபாரி!
எங்கள் வீதியில், தள்ளுவண்டியில் மரக்கன்றுகளை விற்றுக் கொண்டு வந்தார், ஒருவர். அவரை நிறுத்தி, மரக்கன்று வாங்கினர், சில முதியவர்கள்.
அவர் சொன்ன விலையை கொடுத்து, 'ஏம்ப்பா, எங்க காலத்துக்கு பின் வருங்கால சந்ததியருக்கு ஏதாவது விட்டுட்டு போக ஆசைப்படறோம். எதிர்காலத்துல மரங்கள் இல்லாமல், மழையும் வராமல், நல்ல காற்றும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படக் கூடாது.
'அதனால தான், மரக்கன்றை நட்டு வளர்க்க ஆசைப்படறோம். ஆனா, எங்களால குழி தோண்டி நட முடியாது. அதான் கவலையா இருக்கு...' என்றனர், அவர்கள்.
'கவலைப்படாதீங்க, நானே நட்டு தர்றேன்...' என்றார், மரக்கன்று வியாபாரி.
அதேபோல், கன்றை நட்டு, தண்ணீரும் ஊற்றியவர், 'நான் இந்த மரக்கன்றை லாபத்துக்காக விற்க வரலைங்க. என்னால முடிஞ்சதை இந்த உலகத்துக்கு செய்ய ஆசைப்பட்டு, இந்த வியாபாரத்துல இறங்கியிருக்கேன்.
'வாங்கறவங்க வீடுகளில் நானே நட்டும் கொடுக்கிறேன். அது எனக்கு மன நிறைவு கொடுக்குது. அதுக்காக, கூடவே கடப்பாரையும் கொண்டு போகிறேன். என்னோட பசியை போக்கற இந்த மண்ணுக்கு என்னால முடிஞ்ச சிறு உதவி...' என்றார்.
அவரின் உயர்ந்த எண்ணத்தை பாராட்டி, நானும் சில மரக்கன்றுகளை வாங்கி, அவரையே நட செய்தேன்.
— ஜெ.ரவிக்குமார், காங்கயம்.

