/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - எனக்கு கார் கதவை திறந்து விட்ட ரஜினி! (18)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - எனக்கு கார் கதவை திறந்து விட்ட ரஜினி! (18)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - எனக்கு கார் கதவை திறந்து விட்ட ரஜினி! (18)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - எனக்கு கார் கதவை திறந்து விட்ட ரஜினி! (18)
PUBLISHED ON : மே 04, 2025

என் மகன் அரசு ராமநாதனின் திருமண வரவேற்புக்கு வர இயலாத ரஜினி, என்னை தொலைபேசியில் அழைத்து, 'உங்கள் மகனையும், மருமகளையும் வாழ்த்த, நான், உங்கள் இல்லத்திற்கு வருகிறேன்...' என, சொன்னதும், நம்பமுடியாமல், 'நிஜமாவா சொல்றீங்க?' எனக் கேட்டேன்.
மாலை, 6:00 மணிக்கு வருவதாக கூறினார். பெருமை பிடிபடாமல் மிக சிலரை (41 பேர்!) வீட்டிற்கு வரவழைத்தேன். எங்கள் தெருவினர் அனைவருக்கும் தெரிந்து விடவே, அனைவரும் கூடிவிட்டனர்.
ஹீரோக்களாவது சொன்ன நேரத்திற்கு வருவதாவது... அதுவும் கேளம்பாக்கத்தில் இருக்கும் என் வீட்டுக்கு! மாடிக்கு போய் விட்டேன்.
மிகச் சரியாக, 6:00 மணி. கீழ்த்தளத்தின் ஆரவாரம் எனக்கு மேலே கேட்டது. மனைவியும், என் இளவல் ரவி தமிழ்வாணனும் ரஜினியை வரவேற்று அமரச் சொல்ல, ரஜினியோ உட்கார மறுத்து விட்டாராம்.
மறுபடி வற்புறுத்தி கூற, 'இல்ல! சார் வரட்டும்...' என, மறுபடி மறுத்திருக்கிறார், ரஜினி.
முக்கிய விருந்தினர் வருகை என்றால், 5:45 மணிக்கெல்லாம் நான், வரவேற்பறையில் தயாராக இருக்க வேண்டாமா? ரஜினியைப் பற்றிய என் கணிப்புத் தவறாகி விட, அவரை எங்கள் வீட்டிலேயே நிற்க வைத்த செயல், என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விட்டது.
ரஜினியின் இந்த பண்பு, திரையுலகில் வேறு யாரிடமும் பார்க்காதது.
அவசர அவசரமாக படிக்கட்டில் இறங்கி வந்து, கையைப் பிடித்துக் கொண்டு, 'ரொம்ப சாரி...' என, அசடு வழிந்தேன்.
'பரவாயில்லை, பரவாயில்லை...' என்றார்.
நாங்கள் இருவர் மட்டும் சோபாவில் அமர்ந்து உரையாட, எங்களை சுற்றி அனைவரும் பார்வையாளர்களாக நின்றனர்.
'மகன், மருமகள் எங்கே?' எனக் கேட்டதும், இருவரும் அவர் முன்னால் வந்தனர். ராகவேந்திரா படம் ஒன்றை திருமண அன்பளிப்பாக கொடுத்தார்.
'உங்களுக்கு மிகப்பிடித்த அரசியல் தலைவர், சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ என, ஒரு பேட்டியில் முன்பு சொல்லி இருக்கிறீர்கள். அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகம் இது. நீங்கள் படிப்பீர்கள் என வாங்கினேன்...' என்றான், மகன் அரசு.
ரஜினியின் முகத்தில் விளைந்த பூரிப்பை பார்க்க வேண்டுமே!
'கரெக்ட். எனக்கு இவரை ரொம்ப பிடிக்கும். எப்பவோ சொன்னதை எவ்வளவு ஞாபகமாக நினைவில் வைத்திருந்து, எனக்கு தந்திருக்கிறீர்கள். அவசியம் படிப்பேன்...' என்றார்.
புகைப்படம் எடுத்த தருணங்கள் தவிர, பிற நேரங்களில் அந்த புத்தகத்தை கையிலேயே வைத்திருந்தார்.
'கொடுங்க, காரில் வைத்து விடுகிறோம்...' என, கேட்டதற்கு, 'பரவாயில்லை...' என, மறுத்தவர், அதை மறந்தும் கீழே கூட வைக்கவில்லை.
மரியாதை நிமித்தமாக, நான் சில விஷயங்களை ஆரம்பித்து வைக்க, பேச்சுவாக்கில் அவர், ஒரு செய்தியை கூறினார்.
'இவ்வளவு இருந்தும், வாழ்க்கையில் எனக்கு ஒரு பெரிய ஏக்கம் உண்டு, லேனா சார்...' என்றார்.
'உண்மையாகவா?'
'ஆமா. என் தலைமுடி எல்லாம் கொட்டி போச்சு. 'விக்' வைக்காமல் எவ்வளவு ஆண்டுகளாக நடிச்சேன். இப்ப எல்லா படத்துலயும், 'விக்' வைச்சு விட்டுடுறாங்க...' என்றார், சற்றே தளர்ந்த குரலில்.
தன், 'இமேஜ்' பற்றி சற்றும் கவலை கொள்ளாத ரஜினியின் மனதிற்குள், இப்படி ஒரு ஏக்கமா! எனக்கு தெரிந்து இந்த விஷயத்தை எந்த காலத்திலும், எவரிடமும் வெளிப்படுத்தியது இல்லை. இதை அவர் சொன்னது, அவருக்கு என்னிடம் இருந்த நெருக்கத்தை உணர்த்தியதாகவே எடுத்துக் கொண்டேன்.
'என்னிடம் ஒருவித தனி நெருக்கம் காட்டுறீங்க, ரஜினி சார். எவர் வீட்டிற்கும் எளிதில் செல்லாத நீங்க, என் வீடு தேடி வந்திருக்கீங்க. என்னிடம் ஏன் இப்படி ஒரு தனிப்பிரியம்?' என்றேன்.
இந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவே இல்லை என்பது, அவரது முகக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
சில வினாடிகள் எடுத்துக் கொண்ட பின், 'எத்தனை நாளாக பழக்கம் உங்களோடு...' என்றார்.
இந்த வாக்கியத்திற்கு என்ன உட்பொருள் இருக்க முடியும் என்பதை, வாசகர்களாகிய உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். ஆனால், எனக்கு தோன்றிய உட்பொருள் ஒன்றை சொல்லட்டுமா?
புகழும், பொருளும் சேர்ந்ததும், பலரும் கொண்டாடுவர்; வந்து ஒட்டி கொள்வர். நீங்கள் அப்படி இல்லை. ஏற்றத்திலும், தாழ்விலும் எவ்வளவு நீண்ட (1978) நட்பு உங்களோடு...' என்பதாகவே, நான் பொருள் கொண்டேன்.
எங்களை சுற்றி காத்திருந்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டவராய், 'போட்டோ எடுத்துக்குவோமா...' என்றார்.
மற்றவர்கள் கேட்பதற்கு முன், இவர் முந்திக் கொண்டு கேட்டதும், வந்திருந்த பலருக்கும் இது, ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.
என் இளவல் ரவி தமிழ்வாணனின் மூத்த மகன், டாக்டர் ரமேஷ் ராமநாதனின் திருமணம் நிச்சயமானது.
'பெரியப்பா! எனக்கு ரஜினி ஒருவர் வந்தாப் போதும்...' என, டாக்டர் ரமேஷ், உறுதி காட்ட, நானும், மாப்பிள்ளையும், மாப்பிள்ளையின் தம்பி ரஞ்சித்தும், போயஸ் கார்டன் போனோம்.
போயஸ்கார்டன் வீட்டில் வெளி வராண்டாவில் அமர்ந்திருந்த, ரஜினி, எங்களைப் பார்த்ததும், எங்கள் கார் அருகே வந்து விட்டார். இதை அறியாமல் நான், காருக்குள் கலைந்து கிடந்த அழைப்பிதழ்களை சரி செய்து, ரஜினிக்கும், அவர் உதவியாளருக்கும் என, இரண்டை எடுத்து, கார் கதவுப் பிடியில் கையை வைக்கப் போக, அவரே கதவை திறந்து விட்டார். வெலவெலத்து விட்டது எனக்கு!
'சார், சார்! என்ன சார் நீங்க...' என, பதறி விட்டேன்.
திருமணத்திற்கு அழைத்தேன். மணமகனுக்கும், மணமகனின் தம்பி ரஞ்சித்திற்கும், தாம் அழகுற நிற்கும் சிலைகள் இரண்டை கொடுத்தார். அவருக்கு மிகப் பிடித்த, 'போஸ்' இது என, அவரே சொன்னார்.
பரிசுகள் கொடுத்தாச்சு! வரமாட்டார் என்றே கணித்தேன்.
மறுபடி எங்கள் கார் அருகே வந்து நின்று, காரின் கதவை சாத்தி, எங்களை வழியனுப்பி வைத்த எளிமையை என்னவென்று சொல்வேன்.
திருமணத்தன்று, ஏவி.எம்.ராஜேஸ்வரியில் பின்புறம் ஒரு கதவு உண்டு. இதன் வழியே ரஜினி மேடைக்கு வர, நான் அவரின் வருகையை மேடையில், 'மைக்'கில் அறிவித்தது, தவறாகி விட்டது.
சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும், இலைகளை விட்டு விட்டு எழுந்து, ரஜினியை காணும் ஆவலில், ஹாலுக்கு வந்து விட, 250 உணவு இலைகள் வீண். ஆம். மறுபடி அமர மறுத்து விட்டனர். இலை மாறி விட்டால் என்னாவது என்றனர்.
எங்கள் (வீட்டு) கல்யாணம், கலாட்டா கல்யாணம் ஆகிவிட்டது.
அடுத்த ஆளுமை, என் சின்ன மாமனார் கண்ணதாசன்!
என்னது! கவியரசு கண்ணதாசன் உங்கள் சின்ன மாமனாரா... என்னது இது! புதுக்கதையாக இருக்கு என்கிறீர்களா?
விளக்கம் அடுத்த வாரம்!
— தொடரும்.
- லேனா தமிழ்வாணன்

