
பா - கே
வேட்டியின் கீழ்பகுதியின் ஒரு முனையை கையில் துாக்கிப்பிடித்தபடி மேல் மூச்சு வாங்க, பதட்டமாக ஓடி வந்தார், 'திண்ணை' நாராயணன்.
'ஓய், நாணா... ஏன் இப்படி ஓடி வருகிறீர்?' என்றார், லென்ஸ் மாமா.
வியர்வை வழிய வந்தவரை, நாற்காலியில் அமர வைத்து, தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினேன், நான்.
ஐந்து நிமிடத்துக்கு பின், நிதானத்துக்கு வந்தார், நாராயணன்.
'என்னாச்சு, நாராயணன்?' என்றேன்.
'அதையேன் கேட்கிற மணி... நான் பாட்டுக்கு தெரு ஓரமா நடந்து வந்துட்டு இருந்தேனா... திடீரென, எங்கிருந்தோ முரட்டு தெரு நாய் ஒன்று, என்னை நோக்கி, நாலு கால் பாய்ச்சலில் ஓடி வந்தது. கையை ஓங்கியபடி துரத்தியும், எகிறி, எகிறி கடிக்க பார்த்ததுபா... பயந்து ஓடி வந்துட்டேன்.
'சமீபகாலமாக, நாய் கடிக்கு ஆளானவர்கள் பற்றி செய்தித்தாள்களில் நிறைய படித்துள்ளேன். இன்று, எனக்கு அந்த ஆபத்து வந்துடுச்சு. மயிரிழையில் தப்பித்தேன்...' என்றார், நாராயணன்.
அருகில் இருந்த, செய்தியாளர் ஒருவர், 'நாய்களின் இந்த வித்தியாசமான செயல்களுக்கு, விலங்கியல் நிபுணர்கள் என்ன சொல்லி இருக்கின்றனர் தெரியுமா?' எனக் கேட்டு, அவரே கூற ஆரம்பித்தார்:
நாய் வாலாட்டினா, அது நம்மகிட்ட தன்னுடைய நன்றியை தெரிவிக்கிறதா நினைச்சிக்கிட்டு இருக்கோம். அது, அப்படி இல்லைங்கறாங்க, விலங்கியல் நிபுணர்கள்.
ஒரு நாய், தன்னுடைய வாலை இந்த பக்கமும், அந்த பக்கமுமா ஆட்டிக்கிட்டிருந்தா அது பதட்டத்திலே கூட இருக்கலாம். நாய் நட்பா இருந்தாலும் வாலாட்டும். ஆத்திரத்திலே இருந்தாலும் வாலாட்டும். குழப்பத்திலே இருந்தாலும் வாலாட்டும். மகிழ்ச்சியா இருந்தாலும் வாலாட்டும். அதை நாம தப்பா புரிஞ்சிக்கிட்டு, அதுகிட்ட போய் மாட்டிக்கக் கூடாது.
எப்பவுமே நாய்கள், திடீர்ன்னு வந்து கடிச்சுடறதில்ல. கடிக்கறதுக்கு முன்னாடி, சில அறிகுறிகளை காட்டும். அதை சரியா புரிஞ்சிக்கிட்டோம்ன்னா தப்பிச்சிக்கலாம்.
ஒரு நாய், இன்னொரு நாயை நேருக்கு நேர் பார்த்து பல்லைக் காட்டினா, உன்னைவிட நான் பெரியவன்னு சொல்றதா அர்த்தம். அதனால, நீங்களும் அதுமாதிரி கிட்ட போய் சிரிக்கிறோம்ன்னு நினைச்சிட்டு பல்லைக் காட்டினா, உங்களை எதிரியா நினைச்சுடும்.
இன்னொரு விஷயம். தலையில தட்டினா நாய்க்கு பிடிக்காது. அது, தன்னை அடக்கறதாகவும், அச்சுறுத்துவதாகவும் நினைச்சிக்கும்.
சரி, அப்படின்னா புதுசா ஒரு இடத்துல அல்லது வீட்டுல நாய்க்குட்டியை பார்த்தா என்ன பண்றது?
நீங்க சும்மா இருங்க. அதுவா கிட்ட வரட்டும், அதுக்கப்புறம் அது முதுகில் தட்டலாம்.
ஒரு நாய் உங்களை நோக்கி ஓடி வரும்போது, நீங்களும் ஓடினால், அது உங்களை துரத்த ஆரம்பிச்சுடும். அசையாம சிலை மாதிரி நின்னுடுங்க. அது கிட்ட வராது.
ஒரு தெருவுல சின்ன பிள்ளைங்க நிறைய பேர் விளையாடிக்கிட்டு இருப்பதாகவும், அப்போது, சில நாய்கள் அங்கே ஓடி வருதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். எல்லாரும் ஓடினாங்க. அப்படி ஓடறப்போ ஒரு பையன், கால் தடுக்கி கீழே விழுந்துட்டான்.
துரத்திக்கிட்டு வந்த நாய்கள், கீழே விழுந்தவனை ஒண்ணும் செய்யாது. ஓடின பசங்களை துரத்திக்கிட்டு பின்னாலேயே ஓடும். அது தான் நாய்களோட சுபாவம்.
ஒரு நாய் நம்மளை நேருக்கு நேர் முறைச்சி பார்க்குதுன்னு வச்சிக்குங்க. நாமளும் அதை முறைச்சி பார்க்கக் கூடாது. நாம வேற பக்கம் பார்க்க ஆரம்பிச்சுடணும்.
ஒரு நாய் கடும் கோபமா இருந்தா, அதோட வால் உறுதியா நேராக நிக்கும்.
ஒரு நாய் பணிந்து போனா அல்லது பயந்து போனா அது, தன்னோட வாலை காலுக்கு நடுவே வச்சிக்கும்.
ஒரு நாய் நம்மளைப் பார்த்துப் பயந்ததுன்னா, அதனாலே நமக்கு ஆபத்தில்லேன்னு நினைச்சுக்க கூடாது. உங்களை பார்த்துட்டு ஒரு நாய் ஒதுங்கினா, நீங்க விலகிப் போயிடணும்ன்னு அர்த்தம்.
இதே மாதிரி சங்கிலியாலே கட்டிப் போடப்பட்டிருக்கிற நாயும், ஆபத்தானது தான். தொடர்ந்து கட்டிப் போட்டிருந்தா, காலப் போக்குல அது ஒரு மாதிரியா ஆயிடும்; பார்க்கிறவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பிச்சுடும்.
நாய்கள் தரையை தேய்த்து, பின்னங்கால் களால் மண்ணை உதைத்து வீசும். அப்போது அதன் உள்ளங்காலில் இருக்கிற சுரப்பிகளில் இருந்து, ஒரு திரவம் தரையில் பரவும். நாய் தன்னுடைய அனுபோகப் பரப்பை குறித்து வைக்கும் உத்தி அது.
நாய், பூனை இதெல்லாம் ஓடிவந்து உங்க கால்களிலே உடம்பை தேய்த்தால், 'ஆகா எவ்வளவு எஜமான விசுவாசம் இதுகளுக்கு...' அப்படின்னு எண்ணி ஏமாந்து போயிடாதீங்க.
உண்மையிலே உங்களை, அதுகளோட வளர்ப்பு பிராணியா மற்ற நாய், பூனைகளுக்கு அடையாளம் காட்டி வைக்கறதுக்காகத் தான், உங்க மேலே வாசனையை பூசி வைக்குது.
யானைகள், மரக்கிளைகளை ஒடிச்சு வைக்கும். தந்தங்களாலே மரத்தை கீறி வைக்கும்.
புலி, நகங்களாலே மரப் பட்டைகளை கீறி வைக்கும். இது எல்லாம் அடையாளச் சின்னங்கள். அதை பார்த்து மற்றது புரிஞ்சுக்கும்; அந்த எல்லைக்குள் வராது.
மேற்கூறிய ஏதாவது ஒரு காரணத்துக்காக, நாய் உங்களை துரத்தியிருக்கலாம் அல்லது நீங்கள் பூசியிருக்கும் பவுடர் அல்லது சென்ட் வாசனை அதற்கு பிடிக்காமல் இருந்து, உங்களை கடிக்க பாய்ந்திருக்கும்...
- என்று கூறி முடித்தார், செய்தியாளர்.
சமீபகாலமாக, தெருவில் சுற்றும் மாடுகளும் திடீரென, வழியில் போகிறவர்களை கொம்பால் குத்தி, துாக்கி வீசுவதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ என, யோசித்தேன், நான்.
ப
ஒரு அரசரிடம் விசித்திரமான ஒரு வழக்கு வந்தது...
'நான் இவரிடமிருந்து இடத்தை வாங்கினேன். இடத்தை உழுதேன். உள்ளிருந்து ஒரு புதையல் கிடைத்தது. அது விற்றவருக்கு தான் சொந்தம்...' என்றார், வாங்கியவர்.
'அதெல்லாம் முடியாது. இடத்தை நான் அவருக்கு விற்று விட்டேன். இந்த புதையல் அவருக்கு தான் சொந்தம்...' என, விற்றவர் சொல்ல, அரசருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
'நீங்கள் ஒரு வாரத்துக்கு பிறகு வாருங்கள்...' எனக் கூறி அனுப்பினார், அரசர். ஒருவாரம் கடந்ததும் மீண்டும் வந்தனர்.
இடத்தை விற்றவர், தனக்கு தான் புதையல் சொந்தம் எனச் சொல்ல, வாங்கியவரும், எனக்கு தான் சொந்தம் எனச் சொல்ல, 'ஒரு வாரத்தில் இப்படி மாறிவிட்டனரே... இது எதனால்...' என, யோசித்தார், அரசர்.
அப்போது அரசரிடம், 'இன்று காலையில் தான், கலிகாலம் பிறந்தது...' என்றார், மந்திரி.
'அந்த புதையல் இருவருக்குமே சொந்தமில்லை, அரசுக்கே சொந்தம்...' எனக் கூறிவிட்டார், அரசர்.
அடுத்தவனுடைய பொருளுக்கு, என்று அரசாங்கம் சொந்தம் கொள்கிறதோ, அன்றே கலி முற்றிலும் பிறந்து விட்டதாக அர்த்தம். இன்று வரை அதுவே தொடர்கிறது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

