
மு.சினேகப்ரியா, தேனி: 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, டில்லியிலும் வாசகர்கள் இருக்கின்றனரே, அந்துமணியாரே...
டில்லி மட்டுமல்ல; ஆஸ்திரேலியா, கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் வாசகர்கள் உள்ளனர்!
'தினமலர் - ஐ பேப்பர்' மற்றும் 'வெப்சைட்'டில் படித்து, நாளிதழுக்கான, 'இது உங்கள் இடம்' பகுதிக்கு மட்டுமல்லாமல், எனக்கும் கடிதம் மற்றும் கேள்விகளை, 'இ-மெயிலில்' அனுப்புகின்றனர்!
**********
ஜி.மனோகரன், சின்ன சேலம்: நீங்கள் பாத்ரூமில் குளிக்கும் போது, உங்களுக்குப் பிடித்த பாடல்களை, விசில் மூலம் இசைப்பீர்களா?
என்னிடம், 5,000 பாடல்கள் அடங்கிய, 'கார்வான்' ரேடியோ உள்ளது. அதையும் பாத்ரூமுக்கு எடுத்துச் சென்று, பாடல்கள் கேட்பேன்!
********
மு.நாகூர், ராமநாதபுரம்: 'புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க, தன் துறையில் நிதியோ, அதிகாரமோ இல்லை...' என, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறாரே...
தமிழக அரசின் உண்மையான நிதி நிலைமையை மனம் திறந்து கூறியுள்ளார்!
*******
* எம்.பி.தினேஷ், கோவை: மனித உடலில் உள்ள மின்சாரமே, பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ற, அமைச்சர் கணேசனின் கூற்று, பட்டாசு ஆலை தொழிலாளர்களை அவமதிப்பதாக உள்ளதே...
'தெர்மகோல்' புகழ் செல்லுார் ராஜுவுக்கு போட்டியாக உருவாகிறார். மக்கள், இவரையும் கலாய்ப்பது உறுதி!
********
* ஆர்.சாந்தி, மதுரை: 'தமிழகம் எப்போதும் டில்லிக்கு, 'அவுட் ஆப் கண்ட்ரோல்' தான்...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
அவர் பேச்சு, 'அவுட் ஆப் கண்ட்ரோல்' ஆகத்தான் போய் கொண்டிருக்கிறது!
*********
செ.சவுமியா, தருமபுரி: கடந்த, 2024 - 25ம் நிதியாண்டில், தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம், 48 ஆயிரத்து, 344 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாமே...
அதனால் தான், தமிழக அரசு இன்னும் மது ஒழிப்பை அமல்படுத்த முயற்சி எடுக்கவில்லை!
*********
எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்: யு.பி.எஸ்.சி., தேர்வில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக தமிழக மாணவர்கள், 57 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுபோல, 'நீட்' தேர்வை எதிர்ப்பதற்கு பதிலாக, அதற்கு அரசே பயிற்சி கொடுத்து மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கலாமே...
மாணவர்களின் நலனை யோசித்து, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையங்களை ஆரம்பிக்க வேண்டும். வெறும் வாய்ச்சவடால் பேச்சுகளால் ஒரு பயனும் இல்லை!

