sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (9)

/

விண்ணையும் தொடுவேன்! (9)

விண்ணையும் தொடுவேன்! (9)

விண்ணையும் தொடுவேன்! (9)


PUBLISHED ON : மே 04, 2025

Google News

PUBLISHED ON : மே 04, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: புகழேந்திக்கும், சுபாங்கிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட, சுபாங்கியை அவள் போக்கில் செல்வதற்கு வழிவிட்டு, ஒதுங்கி விட முடிவு செய்தான், புகழேந்தி.

அன்று, தானே புகழேந்திக்கு சாப்பாடு பரிமாறுவதாக கூறி, சாப்பிட சொல்கிறாள், சுபாங்கி. புகழேந்தி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எஸ்.பி., ஈஸ்வரி போன் செய்து, கயல்விழியின் குடும்பத்தைப் பற்றி, தான் விசாரித்து அறிந்த தகவல்களை கூற, பாதி சாப்பாட்டில் எழுந்து செல்கிறான், புகழேந்தி.

இது, சுபாங்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, சாப்பாட்டு தட்டை துாக்கி வீசி எறிகிறாள். சத்தம் கேட்டு உள்ளே வரும் டிரைவர் பழனியை, தரக்குறைவாக பேசி, கன்னத்தில் அறைந்து விடுகிறாள், சுபாங்கி. இதைப் பார்த்து கோபம் அடையும் புகழேந்தி, அங்கிருந்து சென்று விடுகிறான்.


புகழேந்தி வருவதற்கு முன்பாகவே வந்து, அலுவலகத்தில் காத்திருந்தார், ஈஸ்வரி. அறைக்குள் நுழையும் முன்பே அவளைப் பார்த்து, ''ப்ளீஸ் கம்...'' எனக் கூறி, தன் அறைக்குள் நுழைந்து, நாற்காலியில் அமர்ந்தான், புகழேந்தி; ஈஸ்வரியையும் உட்கார சொன்னான்.

''அடுத்து என்ன செய்யப் போறீங்க, ஈஸ்வரி?''

''அந்த பொண்ணுக்கு எப்ப நினைவு திரும்பும்ன்னு தெரியலையே, சார். அவங்க அம்மா பாடியை அடக்கம் செய்யணுமே.''

''அந்தம்மா எப்படி கிணற்றுக்குள்ள விழுந்தாங்க... தானாகவா... இல்ல...''

''தானாக விழ வாய்ப்பே இல்ல, சார். அடிச்சு துாக்கிப் போட்டிருக்காங்க.''

''யார்ன்னு விசாரிச்சீங்களா?''

''எல்லாரும் பயப்படறாங்க, சார். யாருமே வாயத் திறக்க மாட்டேங்கிறாங்க.''

''அப்ப என்ன செய்யலாம்?''

''அடக்கம் பண்ண வேண்டியது தான்.''

''ஏற்பாடு பண்ணுங்க.''

''பண்ணிடறேன்.''

''நானும் வரேன்.''

''சார், நீங்க எதுக்கு?''

''நாமெல்லாம் கூட இருந்தால் தான், இந்த மக்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் ஏற்படும். எதிர் ஆட்களுக்கு பயமும் வரும்,'' என்ற புகழேந்தியின் குரலில் இருந்த உறுதியும், இதுவரை கேட்டிராத கடுமையும், ஈஸ்வரியை மேலே பேச விடவில்லை.

''சரி, சார். ஏற்பாடு பண்ணிடறேன்.''

''எந்த குறையும் இல்லாம ஏற்பாடு பண்ணுங்க. மீடியாவுக்கு சொல்லிடுங்க. ஆனால், அந்தப் பெண்ணை பற்றின செய்தி மட்டும், எதுவும் வெளிவர வேண்டாம்.''

அடுத்த இரண்டு மணி நேரத்தில், பட்டாசும், வாண வேடிக்கைகளும், தாரை, தப்பட்டையுமாக அந்த தாயின் இறுதி ஊர்வலம் தயாராயிற்று. ரதம் மாதிரி அலங்கரிக்கப்பட்ட வண்டியில், உடல் கிடத்தப்பட்டது.

உடலின் பின்னால், மாவட்ட கலெக்டர் நடந்து வந்ததால், அத்தனை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். செய்ய வேண்டிய சடங்குகளை, அவர்களின் முறைப்படி, புகழேந்தியே செய்தான்.

'தாயே... குற்றம் செய்த பாதகர்கள் சார்பாக நான், தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தங்களின் குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக, தங்களின் பாதம் பணிகிறேன்.

'அனைத்தையும் ஈடு செய்யும் வகையில், தங்கள் மகளுக்கு உதவுவேன்; உறுதுணையாக நிற்பேன். இதை நிச்சயம் நிறைவேற்றுவேன். எவர் வரினும் நில்லேன். அஞ்சேன்...' என, இறந்து போன அந்த தாயிடம் மானசீகமாக உறுதி அளித்தான், புகழேந்தி.

ஆழ்ந்த பெருமூச்சோடு திரும்பியவனின் எதிரில் பத்திரிகையாளர்களும், 'டிவி' சேனல் நிருபர்களும், 'மைக்'கை நீட்டினர்.

''பெண்களுக்கும், முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தேவை. பாலியல் பலாத்காரங்கள் அதிகமாகி விட்டன. ஐந்து வயது சிறுமியை கூட விட்டு வைக்காத கொடுமை நிகழ்கிறது.

''இறந்து போன இந்த பெண்மணி எப்படி இறந்தார், யார் கிணற்றில் வீசினர் என்பதும் தெரியவில்லை. இவர், நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி. நரிக்குறவர்களின் தலைவனாக விளங்கிய, அன்பரசன் என்பவரின் மனைவி தங்கம்மா.

''முற்போக்கு சிந்தனையாளர், அன்பரசன். தங்கள் இன மக்களை உயர்த்த பாடுபட்டவர். இதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒருவேளை, தங்கம்மாவும் அதற்காகவே கொன்று கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம். அந்த அளவிற்கு ஜாதி வெறி முற்றிப் போயிருக்கிறது.''

அடுத்து, அங்கு கூடி நின்றிருந்த மக்களைப் பார்த்து தொடர்ந்தான்...

''நீங்கள் அனைவரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள். மக்களாகிய உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும், பெண்கள் இருக்கின்றனர் என்பதை மட்டும், ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு நிகழ்ந்தது நாளை, வேறு யாருக்காவது நிகழலாம் என்பதை மறக்காதீர்கள்,'' என, பேசி முடித்து, அங்கிருந்து கிளம்பினான், புகழேந்தி.

அன்று மாலை, அனைத்து செய்தித்தாள்களும் அவனைப் பாராட்டி இருந்தன. ஊடகவியலாளர்களும், மீடியாக்களும் கலந்துரையாடல்கள் வைத்தன. 'யு டியூபர்'கள், 'ஒரு மாவட்ட கலெக்டர் ஏன், இந்தப் பெண்மணி இறப்பிற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்...' என, கேள்வி எழுப்பினர்.

அனைவரும் சேர்ந்து அந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க இறங்கிய போது, கயல்விழி பற்றின செய்தி வெளிவந்து, பற்றிக் கொண்டது. அவளை பற்றிய முழு விபரமும் வெளியிட்டதோடு மட்டுமின்றி, மோப்பம் பிடித்து, மருத்துவமனை வாசலில் கூடினர், செய்தியாளர்கள்.

கேள்விப்பட்ட, ஈஸ்வரி அதிர்ந்து போனார்.

'காவல்துறை வெளியிடாமல் பாதுகாத்த செய்தி, எப்படி கசிந்து வெளிவந்தது?'

புகழேந்தியை தொடர்பு கொண்டாள்.

''சார், செய்தித்தாள்கள், 'டிவி' எல்லாவற்றிலும்...''

இடைமறித்து, ''பார்த்தேன்,'' என்றான், புகழேந்தி.

''என்ன சார் செய்யலாம்?''

''ஒன்றும் செய்ய முடியாது. அந்த பெண்ணை புகைப்படம் எடுக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.''

''எடுக்க விட மாட்டேன், சார். அப்படியே எடுத்தாலும் முகம் தெரியாமல் தான் போடுவர்.''

''அது கூட வேண்டாம்.''

''பார்க்கிறேன், சார். மீடியாவைப் பொறுத்தவரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது. நாம் தடுக்கில் புகுந்தால், அவர்கள் கோலத்தில் புகுவர்.''

''முயற்சி செய்யுங்கள்.''

''எஸ் சார்.''

ஆனால், ஈஸ்வரியால் எதையும் தடுக்க இயலவில்லை. கயல்விழி பற்றின அனைத்து செய்திகளும் வெளியாயின. முகம் மறைக்கப்பட்ட அவளது புகைப்படம், பேசு பொருளாயிற்று. புதரிலிருந்து அவளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய, புகழேந்தியை கொண்டாடினர்.

'டிவி' செய்தி, செய்தித்தாள்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்களிலும், கயல்விழியை காப்பாற்றியதும், தங்கம்மாவை அடக்கம் செய்ததும், புகழேந்தி தான் என்ற தகவல், மிகப்பெரும் செய்தியாக்கப்பட்டது. இது சம்பந்தமாக, முதல்வர், மொபைல் போனில் தன்னை கூப்பிட்டு பேசுவார் என, நினைக்கக் கூட இல்லை, புகழேந்தி.

'அந்தப் பெண்ணிற்கு வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்யுங்கள். அரசாங்கம் உங்களுடன் நிற்கும். நானும் துணை இருப்பேன். உங்களுக்கு என் பாராட்டுக்கள்...' என்றார், முதல்வர்.

அது கூட புகழேந்தியை குளிர்விக்கவில்லை. கயல்விழி அம்பலப்படுத்தப்பட்டதில், அவனுக்கு உடன்பாடில்லை.

அதற்குள் செய்தியறிந்த அமைச்சர், தன் மகள் சுபாங்கியை கூப்பிட்டு, கடிந்து கொண்டார்.

''ஏம்மா, உன் புருஷனுக்கு எதுக்கு இந்த விவகாரமெல்லாம்? ஒரு கலெக்டர் செய்ய வேண்டிய வேலையா இது? எவ எக்கேடு கெட்டுப் போனா இவருக்கென்ன வந்திச்சு? இவுரு யாரு அடக்கம் பண்ண? என்ன வேலை இதெல்லாம்?''

''யாரைப்பா அடக்கம் பண்ணினாரு? என்ன சொல்றீங்க நீங்க?''

''ஊரே பத்திக்கிட்டு எரியுது. நீ பிடில் வாசிச்சுக்கிட்டு உட்காந்திரு. ஒரு பேப்பர் விடாம, ஒரு நியூஸ் சேனல் விடாம, சமூக வலைதளங்களையும் பாரு.''

''இதோ பார்க்கிறேன்ப்பா.''

பார்த்த அவள் வயிறு எரிந்தது. கோபத்தில் கண்கள் சிவந்தன. மொபைல் போனில், புகழேந்தியை கூப்பிட்டாள்.

''வீட்டுக்கு வந்து பேசறேன்...'' என, இணைப்பைத் துண்டித்தான். இன்னும் ஆத்திரம் அதிகமாக, புகழேந்தியின் அப்பாவை அழைத்தாள்.

''உங்க மகன் செய்யிறதெல்லாம் நல்லாவா இருக்கு? ஏதோ ஒரு பொம்பள செத்தா இவருக்கென்ன? எதுக்காக இவரு போய் அடக்கம் செய்யணும்?''

''அதுல என்னம்மா தப்பு? தன் மனசுக்கு சரின்னு பட்டதைத்தான், புகழ் எப்பவுமே செய்வான்.''

''எப்பவுமே செய்யிறது வேற. இப்ப செய்யிறது வேற?''

''என்னம்மா வித்தியாசம்?''

''இப்ப அவரு, அமைச்சர் மருமகன். பெரிய இடத்துப் புள்ள. யாரோ, ஒருத்தியை துாக்கிக்கிட்டுப் போய் மருத்துவமனையில் சேர்த்ததும், அவ அம்மாவை அடக்கம் செய்ததும், எனக்கும், அப்பாவுக்கும் சரின்னு படல. இதெல்லாம் போலீஸ் வேலை; கலெக்டர் வேலை இல்லை. போலீஸ்கிட்ட சொன்னா அவுங்க பார்த்துக்கறாங்க.''

''மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் எங்ககிட்ட இல்லம்மா.''

''உங்களுக்கு போய் போன் பண்ணி சொல்றேன் பாருங்க. என் புத்திய செருப்பால அடிச்சுக்கணும்,'' எனக் கூறி, இணைப்பை துண்டித்து, புகழேந்தி வருகைக்காக, முகம் ஜிவுஜிவுக்க காத்திருந்தாள், சுபாங்கி.

''அம்மா... சாப்பிட வரீங்களா?''

''நான் கெட்ட கேட்டுக்கு அது ஒண்ணு தான் பாக்கி. எல்லாத்தையும் எடுத்து வந்து என் தலையில கொட்டுங்க,'' என, சுபாங்கி கூற, அங்கிருந்து ஓடியே போய் விட்டார், சமையற்கார பெரியவர்.

மூன்று கலெக்டர் மனைவிகளின் கீழ் பணிபுரிந்த அனுபவம், பெரியவருக்கு உண்டு. இதற்கு முன் இருந்த கலெக்டர் மிகவும் இளவயதினர், வட மாநிலத்தவர்; திருமணமாகாதவர். ஆகவே, எந்தப் பிரச்னையும் எழவில்லை.

அதற்கும் முன் இருந்தவர், நடுத்தர வயது. நல்ல அனுபவம் வாய்ந்தவர். அவர் மனைவி அமைதியானவர்; பொறுமைசாலி. நாட்கள் நல்ல விதமாகவே நகர்ந்தன. இப்போது தான் பெரும் சங்கடங்களை சந்திக்கிறார். ஒரு கலெக்டர் வீட்டில் இப்படியெல்லாம் நடக்கும் என்பதை, அவரால் நம்பக் கூட முடியவில்லை.

'ஒரு வேளை இந்தம்மா மந்திரியின் மகளாக இருப்பதால் தான், இத்தனை அகங்காரமும், திமிறும், ஏற்பட்டிருக்கிறதோ! பதவியும், பணமும் சேர்ந்து, 'தான்' என்ற கர்வத்தை வளர்த்திருக்குமோ...' என, நினைத்துக் கொண்டார்.

வாசலில் கார் சத்தம் கேட்கவே எழுந்து ஓடினார்.

பைல்களையும், ப்ரீப் கேஸையும் டவாலி எடுத்து வந்து வைத்து விட்டு போனதும், உள்ளே வந்தான், புகழேந்தி.

''ரொம்ப பசிக்குது பெரியவரே... சாப்பாடு போடுங்க,'' என, கைகழுவி வந்து உட்கார்ந்தான்.

படியிறங்கி வந்த, சுபாங்கி கடுகடுவென்றிருந்தாள்.

பெரியவர் தான் பரிமாறினார். எப்போதும் அன்பாக, பிரியமாக, பொறுமையாக பரிமாறுவார். சாப்பிடுபவர்களுக்கு ஒரு கரண்டி, அதிகமாக சாப்பிடத் தோன்றும். அடுத்த நாற்காலியில் உர்ரென்று உட்கார்ந்திருந்தாள், சுபாங்கி.

'ஐயா சாப்பிட்டு முடிக்கிற வரை இந்தம்மா அமைதியாக இருந்தால் பரவாயில்லை...' என, நினைத்தார், பெரியவர்.

ஆனால், சுபாங்கியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

''அடக்கம் பண்றது, முள்புதரில் கிடந்தவளைக் காப்பாத்துறதெல்லாம் உங்க வேலை இல்லை. அப்பா கூப்பிட்டு சத்தம் போட்டாரு. உங்க வேலையை மட்டும் கவனிக்க சொல்றாரு.''

''நானும் அதையே தான் சொல்றேன். உங்கப்பாவை அவர் வேலையை மட்டும் கவனிக்கச் சொல்லு.''

சடாரென்று சாப்பாட்டு மேஜையின் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்தாள், சுபாங்கி.



— தொடரும்இந்துமதி






      Dinamalar
      Follow us