
பொறுப்பு கொடுங்கள்!
திருமணமாகாத அத்தை, என் பெற்றோர் இருக்கும் வரை, எங்களுடன் தான் இருந்தார். பெற்றோரின் காலத்துக்கு பின், அத்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்தோம்.
முதியோர் இல்லத்தில் இருந்து, 'அத்தையின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அவர்கள் இன்னும் நெடு நாட்கள் வாழ்வது கடினம், கடைசி நாட்களில் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியுமா...' என்றார், இல்லத் தலைவி.
அத்தையை வீட்டுக்கு அழைத்து வந்தேன். என் மகளுக்கு பிரசவம் ஆகி, ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. இரண்டாவது மகள், கல்லுாரியில் படித்து வந்தாள். திடீரென்று, அலுவலகத்தில், பயிற்சி ஒன்றுக்காக என்னை, டில்லிக்கு இரண்டு மாதம் செல்லுமாறு பணித்தனர்.
சமையலுக்கு ஒரு பெண்மணியை நியமித்து, வீட்டின் மொத்த பொறுப்பையும் அத்தையிடம் ஒப்படைத்து, டில்லி சென்றேன். பிரசவம் ஆன மகள், பேரனை கவனிப்பது மற்றும் இரண்டாவது மகளை கல்லுாரிக்கு அனுப்புவது, என் கணவர் அலுவலகம் செல்ல உதவியதுடன், எங்கள் வீட்டின் மாடி தோட்டத்தையும் பார்த்துக் கொண்டார், அத்தை.
பயிற்சி முடிந்து சென்னை திரும்பியவுடன், 'செக்-அப்'காக அத்தையை, இதய மருத்துவரிடம் அழைத்து சென்றேன். என்ன ஆச்சரியம், அவரின் இதயம் முன்பை விட, நன்றாக வேலை செய்வதாக கூறினார், மருத்துவர்.
'வயதானவர்களிடம் பொறுப்புகளையும், முடிவெடுக்கும் வாய்ப்புகளையும் தந்து, அவர்கள் மிக முக்கியமானவர்கள் என்ற உணர்வை மேலோங்கி நிற்கும் படி செய்ய வேண்டும். மேலும், இயற்கையுடன் இணைந்து, செடி, மரம் வளர்ப்பது, பூங்கா மற்றும் கடற்கரைக்கு செல்வது போன்றவற்றில் ஈடுபட வைத்தால், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பர்...' என்றார், மருத்துவர்.
வாசகர்களே... முதியோரை அலட்சியப்படுத்தாமல், மதிப்புடன் நடத்தலாமே!
— ஜெயஸ்ரீ மாதவன், கோவை.
நண்பரின் முன்னெச்சரிக்கை!
உறவினர் வீட்டு திருமண பத்திரிகை அடிப்பது சம்பந்தமாக பேச, அச்சகம் நடத்தி வரும் நண்பரை, சமீபத்தில் சந்தித்தோம்.
எங்கள் வேலை முடிந்தவுடன், கடையை பூட்டி, வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது, கணினியில் இணைக்கப்பட்டிருந்த, சி.பி.யூ., - யூ.பி.எஸ்., மானிட்டர், கீ போர்டு, வெப் கேம், ஸ்பீக்கர் மற்றும் பிரின்டருக்கான ஒயர்களை, தனியாக கழட்டி எடுத்து, அங்கிருந்த பீரோவில் வைத்து பூட்டி விட்டு வந்தார்.
அதற்கான காரணத்தை வினவினேன்.
'இங்கு எலித்தொல்லை அதிகம். எவ்வளவோ வழிகளில் முயற்சித்தும், அவற்றை கட்டுப்படுத்த இயலவில்லை. கணினி ஒயர்களை அடிக்கடி கடித்து வைத்து, ஆயிரக்கணக்கில் செலவு வைத்துக் கொண்டே இருந்தன. இது, எனக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது.
'நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, தினமும் கடையைப் பூட்டி புறப்படும் முன், இப்படி எல்லா ஒயர்களையும் கழட்டி, பீரோவில் பாதுகாப்பாக வைத்து விடுவேன். இப்போது எனக்கு எந்த செலவும் இல்லை; மன உளைச்சலும் இல்லை...' என்றார்.
இந்த நல்ல யோசனையை நாமும் பின்பற்றலாமே!
— எம்.முகுந்த், கோவை.
பயனுள்ள, 'புராஜெக்ட்!'
நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். பதப்படுத்திய விதைகளை, காகித உறையிலிட்டு, பெயர் எழுதிக் கொண்டிருந்தார்.
'விற்பனைக்காக விதைகளை தயார் செய்கிறீர்களா?' என்றேன்.
'இல்லை...' என்றவர், தொடர்ந்தார்...
'எட்டாம் வகுப்பு படிக்கும் மகளின் வகுப்பாசிரியை, சமையலுக்காகவும், சாப்பிடுவதற்காகவும் வாங்கிய காய்கறி மற்றும் பழ விதைகளை சேகரித்து, விதை நேர்த்தி செய்து காண்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
'பின் அதை, விதை பந்தாக மாற்றி, விடுமுறைக்கு வெளியூர் செல்லும் போது, சாலையோரங்களிலும், மண்வளம் மிக்க இயற்கை சூழலிலும், வீசியெறிந்தோ அல்லது விதையாக நட்டோ, தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து, ஆசிரியைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
'ஆசிரியையின் வழிகாட்டுதல்படி செய்பவர்களை, ஊக்கப்படுத்தும் விதமாக, சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவப்படுத்துவார். அவர் கொடுக்கும் உற்சாகத்தில் என் மகள், மா, நாவல், வேம்பு, புங்கன், எலுமிச்சை, கிச்சலி, சப்போட்டா, சீதாப் பழம் என, கிடைக்கும் விதைகளை பக்குவப்படுத்தினாள்.
'எங்கள் வீட்டு மண் தொட்டிகளில் ஊன்றி, நீர் விட்டு கண்காணிப்பாள். விதைகள் முளைவிட்டு, குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும், அக்கம் பக்க வீடுகளுக்கோ, எங்கள் இல்லம் வரும் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு, 'செடி வளர்க்க விருப்பமா?' என கேட்டு, கொடுத்தும் வருகிறாள்...' என்றார்.
விடுமுறையில், 'புராஜெக்ட்' என்ற பெயரில், தேவையற்றதை மாணவர்களை செய்யக் கூறி, அவர்களை வறுத்தெடுக்கும் இன்றைய சூழலில், வகுப்பாசிரியையின் வித்தியாசமான முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
— தி.பாலாஜி, திண்டிவனம்.