/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுயுடன் அழுத்தமான பதிவுகள்: என் திருமணத்தால் முடிவுக்கு வந்த கண்ணதாசன் - தமிழ்வாணன் மோதல்! (20)
/
அரிய ஆளுமைகளுயுடன் அழுத்தமான பதிவுகள்: என் திருமணத்தால் முடிவுக்கு வந்த கண்ணதாசன் - தமிழ்வாணன் மோதல்! (20)
அரிய ஆளுமைகளுயுடன் அழுத்தமான பதிவுகள்: என் திருமணத்தால் முடிவுக்கு வந்த கண்ணதாசன் - தமிழ்வாணன் மோதல்! (20)
அரிய ஆளுமைகளுயுடன் அழுத்தமான பதிவுகள்: என் திருமணத்தால் முடிவுக்கு வந்த கண்ணதாசன் - தமிழ்வாணன் மோதல்! (20)
PUBLISHED ON : மே 18, 2025

கவியரசு கண்ணதாசனும், என் தந்தை தமிழ்வாணனும் பல்வேறு விதங்களில் ஒற்றுமை தன்மை உடையவர்கள். கண்ணதாசன் கேட்டதற்கு இணங்க, அவரது, 'தென்றல்' இதழில் (1961) தமிழ்வாணன் எழுதிய சிறுகதை ஒன்று, இன்றளவும் என் சேமிப்பில் உள்ளது.
இருவரும் சந்திக்கும் போதெல்லாம், மிகவும் பிரியமாக பேசி கொள்வர். ஆனால், இவர்கள் இருவரும் தத்தம் கடைசி காலத்தில், ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றதையும், பத்திரிகைகள் வழியே, ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிக் கொண்டதையும், காலத்தின் கோலம் எனத் தான் சொல்வேன்.
இத்தகைய பேனா போர், உச்சகட்டமாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் தான், என் திருமணம். தன் தம்பி என்ற வகையில் கவியரசுவை, என் மாமனார் ராமநாதன், முறைப்படி அழைத்தார். அவரும், 'அவசியம் வர்றேண்ணே...' என்றும், சொல்லி இருக்கிறார்.
மறந்து விடப் போகிறாரே என, என் மூத்த மைத்துனர், ராம.சிதம்பரம், கவியரசுவின் வீட்டிற்கே சென்று, உடன் அழைத்து வர திட்டமிட்டார். என் தந்தையோ, கண்ணதாசனுக்கு அழைப்பு கொடுக்காமல் விட்டுவிட, இவர் வருவாரா, மாட்டாரா என்ற சஸ்பென்ஸ், என் மாமனார் வீட்டினருக்கு.
நடந்தவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நான், பெரிய தர்மசங்கடத்திற்கு உள்ளானேன்.
காரணம், கண்ணதாசனின் பிள்ளைகள் அனைவரும், என் பால்ய நண்பர்கள். பெரியவர்கள் இருவரும் இப்படி மோதிக் கொண்ட வேளையில், நான் எப்படி இவர்களை அழைப்பது? தந்தையிடம் இதுபற்றி பேச பயம்.
விழா மண்டபத்தில், எந்த வி.ஐ.பி., உள்ளே வருகிறார் என, நான் அடிக்கடி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, இனிய அதிர்ச்சி!
எம்.டி.ஜி., 140 அம்பாசிடர் காரில் வந்து, அசத்தலாக இறங்கினார், கண்ணதாசன். ஆஜானுபாகுவான உருவம். காஷ்மீர் சால்வை ஒன்றை போர்த்தியபடி, அவர் இறங்கியதும், 'இது போதும் எனக்கு...' என, எண்ணினேன்.
'அப்பா! கண்ணதாசன் வர்றார்...' என்றேன்; அருகில் நின்ற தந்தையிடம்.
'என்னது! கண்ணதாசனா...' தந்தைக்கும் அடங்காத வியப்பு!
ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தின் அமைப்பை அறிந்தவர்களுக்கு தெரியும். மணமேடைக்கும், வாசலுக்கும் இடையே முழுவதுமாக மேற்கூரை இடப்பட்ட 50 மீட்டர் பாதை உண்டு.
கண்ணதாசனை எதிர்கொண்டு வரவேற்க, வாசலை நோக்கி வேகமாக புறப்பட்டார், தந்தை. கண்ணதாசனும் எதிர்கொண்டு, பாதி வழியையும் தாண்டி வந்து விட்ட தமிழ்வாணனை பார்த்து, தம் வேகத்தை அதிகப்படுத்த, அது ஒரு சரித்திர காட்சி!
கடந்த இதழ்கள் வரை, ஒருவரை ஒருவர் தாக்கி எழுதிக் கொண்டவர்களா இப்படி எதுவுமே நடக்காதது போல் இருவரும் அன்பை பொழிகின்றனர்!
எப்படி இப்படியெல்லாம் பகைமை மறந்து, பக்குவப்பட்டவர்களாக நடந்து கொள்ள முடிகிறதோ இவர்களால்!
இருவரும் பேசி கொண்ட விதத்தை பார்க்க வேண்டுமே! நடிப்பற்ற சிரிப்பும், வெளிப்பட்ட வாஞ்சையும், இருவருக்கும் கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது என, எவருமே நம்ப மாட்டார்கள்.
தமிழ்வாணனுடன் நடந்த உரையாடல் முடிந்த பின், என் மாமனாரை பார்த்து, 'நல்ல சம்பந்தம் அண்ணே! மக நல்லா இருப்பா...' என்றார், கண்ணதாசன்.
கண்ணதாசன் என்றால், கவித்துவமாக பேசுவார் என, பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது உண்மையல்ல. காரைக்குடி தமிழ் அங்கங்கே தலைகாட்டும். இயல்பாகத் தான் பேசுவார்.
சாப்பிட சொன்ன என் தந்தையிடம், 'இல்லை, தமிழ்வாணன்! வயிறு சரியில்லை. நான் வீட்டில் போய் பார்த்துக்குறேன். உங்களுக்கு இன்னொரு மகன் இருக்கான்ல, அவன் கல்யாணத்துக்கு நிச்சயமா வந்து சாப்பிடுகிறேன்...' எனக் கூறி, விடைபெற்று சென்றார், கண்ணதாசன்.
காலம் வலியது. அடுத்த திருமணத்திற்கு இவர்கள் இருவருமே இல்லை.
தமிழ்வாணனின் மறைவிற்கு, கண்ணதாசன், தம், 'கண்ணதாசன்' இதழில் எழுதிய இரங்கல் செய்தி, அரிதான ஒன்று.
கண்ணதாசனின் இரங்கல் செய்தியில் இருந்த வாசகங்கள், நினைவில் இல்லையே தவிர, சாராம்சம் நினைவில் இருக்கிறது.
உத்தேசமாக அதை உங்களுக்கு சொல்கிறேன்...
'நானும், தமிழ்வாணனும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே வயதில் இருவரும் சென்னை நோக்கி பெரும் கனவுகளோடு புறப்பட்டோம். படாத கஷ்டமில்லை. எங்களை சமுதாயத்தில் நிலைப்படுத்திக் கொள்வது அவ்வளவு சுலபமாக இல்லை.
'இருவேறு பாதைகளில் பயணித்த நாங்கள், என்ன உயரம் தொட்டோம் என்பதை, உங்கள் கணிப்பிற்கே விட்டு விடுகிறேன்.
'சென்னையிலும், தி.நகரில் ஒரே பகுதியில் வசித்தோம். ஒருவர் வளர்ச்சியை மற்றவர் பொறாமையின்றி போற்றினோம். இந்த இளவயதில் அவர், இயற்கை எய்தியதை என்னால் ஏற்கவே முடியவில்லை.
'ஆனால், அவரது கடைசி காலத்தில் அவரோடு நான், முரண்பட்டு நின்றது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவரை விமர்சிக்க நேர்ந்தது குறித்து, உண்மையில் இப்போது வருந்துகிறேன்...' என்பதாக, அவரது இரங்கல் செய்தி அமைந்திருந்தது.
இந்த, 20 வாரங்களாக தமிழகத்தின் மகத்தான ஆளுமைகளோடு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்த போது, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திய, 'வாரமலர்' இதழ் வாசக அன்பர்களின் ஆதரவும், நல் வார்த்தைகளும், ஊக்க மொழிகளும் மறக்கவொண்ணாதவை.
பொது இடங்களிலும், மேடை சார்ந்த நிகழ்வுகளிலும், திருமண இல்லங்களிலும், என்னருகே வந்து, 'வாராவாரம் திகில் கதை போல, சஸ்பென்சுடன் முடித்து, அடுத்த வாரம் எப்பத்தான் வருமோ என எதிர்பார்க்க வைத்து விடுகிறீர்கள்...' என, சிலர் குறிப்பிட்டதையும், என்னால் மறக்க முடியாது.
நான் குறிப்பிட்ட ஆளுமைகளிடம், எனக்கு கிடைத்த மரியாதையும், அங்கீகாரமும் எனக்காக கிடைத்தவை என, நான் பெருமை கொண்டதே இல்லை. எத்தகைய பின்னணியில், இன்னாருடைய பிள்ளை என்பதாலேயே கிடைத்தவை அவை என்றே கருதுகிறேன்.
நம்மை இணைத்த, 'வாரமலர்' இதழுக்கு, என் இதய நன்றி என்றென்றும் உரியது.
— நிறைவுற்றது —
- லேனா தமிழ்வாணன்