
பா - கே
அலுவலகத்தில் நுழையும் போதே, 'பார்க்கிங்' பகுதியில், லென்ஸ் மாமாவின் கார் நின்றிருந்தது. 'என்றைக்கும் இல்லாத அதிசயமாக, இன்று மாமா சீக்கிரம் வந்துவிட்டாரே...' என, எண்ணியபடி, உள்ளே நுழைந்தேன்.
லென்ஸ் மாமாவின் கேபினுக்குள், சினிமா பொன்னையாவும், இளைஞன் ஒருவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
என்னைப் பார்த்ததும், 'மணி... இவன் எங்க ஊர் பையன். துாரத்து சொந்தமும் கூட. சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, சென்னை வந்திருக்கிறான். இவனுக்கு ஏதாவது, 'அட்வைஸ்' செய்து உருப்படறதுக்கு வழி சொல்லுப்பா...' என்றார், சி.பொ.,
'ஓய், பொன்ஸ்... அவன் ஆர்வத்துக்கு, ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடாதீர். உமக்கு தெரிந்த இயக்குனர் யாரிடமாவது, சிபாரிசு செய்து, இவனை சேர்த்து விடுவியா... அதைவிடுத்து...' என, கடுகடுத்தார், மாமா.
'அங்கிள், சரியா சொன்னீங்க. இவரைப் போன்றவர்களால் தான், எங்களைப் போன்றவர்கள் முன்னுக்கே வர முடிவதில்லை. இதே போல் தான், ஹாலிவுட்டில் ஒரு காலத்தில் நடந்தது...' என்றான், இளைஞன்.
'அது என்ன கதை?' என்றார், மாமா.
கூற ஆரம்பித்தான், அந்த இளைஞன்:
ஹாலிவுட்டில் இருந்த சினிமா ஸ்டுடியோ ஒன்றிலிருந்து, பழைய குப்பைகளை எரிப்பதற்காக, லாரியில் எடுத்துச் சென்றனர். ஒரு வளைவில், லாரி திரும்பிய வேகத்தில், குப்பைக் காகிதங்களிலிருந்து, பைண்டு செய்யப்பட்ட கனமான கையெழுத்து பிரதி ஒன்று நழுவி, கீழே விழுந்துள்ளது.
அச்சமயம், சினிமா வாய்ப்பு கேட்பதற்காக, ஸ்டுடியோவுக்கு அந்த வழியாக வந்தனர், இரு இளைஞர்கள்.
கீழே விழுந்த கையெழுத்து பிரதியை எடுத்து பார்த்தனர். வில்லியம் டாலிஸ் என்பவர், 'ஏப் அண்டு எஸன்ஸ்' என்ற தலைப்பில், திரைக்கதை எழுதியிருந்தார்.
இருவரும், அக்கதையை முழுவதுமாக படித்தனர். அற்புதமான படைப்பாக இருந்தது. தன் கதையை படமாக்குவதற்காக, ஸ்டுடியோவுக்கு வந்து, யாரையோ சந்தித்து கொடுத்துள்ளார், டாலிஸ். அந்த படைப்பின் அருமை தெரியாதவன், அதை குப்பையில் வீசியிருக்கிறான்.
'சயின்ஸ் பிக்ஷன்' வகையைச் சேர்ந்த அக்கதையை எடுத்துக் கொண்டு, பல ஸ்டுடியோ வாசலை தட்டினர், இரு இளைஞர்களும். 'சயின்ஸ் பிக்ஷன்' கதைகள் பிரபலமாகாத காலம் அது.
பல இயக்குனர்களிடம் அக்கதையை சொல்லியும் ஏற்கப்படாததால், சொந்தமாக தயாரிக்க முடிவெடுத்தனர். மூலக்கதையை எழுதிய, டாலிஸை சந்தித்து, அனுமதி பெற முயன்றனர். வறுமையில் வாடிய டாலிஸ், எங்கேயோ போய்விட்டதாக, தகவல் மட்டுமே கிடைத்தது.
அதன்பின், எங்கெங்கேயோ கடன் வாங்கி, பல சிரமங்களுக்கு பின், அக்கதையை படமாக்கி வெளியிட்டனர். திரைக்கதையும், ஸ்பெஷல் எபெக்ட்ஸும் படத்தை, ஓஹோ என, ஓட வைத்தது; வசூலை வாரி குவித்தது.
இதுபோல தான் என்னிடமும் பல வித்தியாசமான கதைகள் உள்ளன. அரைத்த மாவையே அரைக்கும் கதையோ, ஜாதிய அடிப்படையானதோ, 'பயோகிராபி' கதைகளையோ பிடித்து தொங்கவில்லை, நான்.
சினிமாவுக்கு எடுப்படவில்லை என்றால், இருக்கவே இருக்கிறது குறும்பட பிரிவு. அதுவும் இல்லாவிட்டால், ஓ.டி.டி., தளங்கள், எங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும்.
கடைசி காலம் வரை இயக்குனராகவே குப்பைக் கொட்டுவது, என் எண்ணமல்ல. ஊரில் சொந்த நிலம் இருக்கிறது. என் ஆர்வத்துக்கும், எண்ணத்துக்கும் தீனிப் போட்ட பின், ஜெயித்தவனாக ஊருக்கு திரும்பி, விவசாயம் செய்வேன்.
சினிமா ஆர்வமுள்ள பிள்ளைகளுக்கு, என் அனுபவங்களைச் சொல்லி, அவர்களையும் வெற்றி பெற செய்வேன்.
- என்று கூறி முடித்தான், அந்த இளைஞன்.
இதைக் கேட்டதும், 'சபாஷ்டா ராஜா, உன் எண்ணபடியே நடக்கட்டும்...' என வாழ்த்தினார், லென்ஸ் மாமா.
அவனது பேச்சிலும், கண்களிலும் தெரிந்த தன்னம்பிக்கையும், நிச்சயம் இவன் ஜெயிப்பான் என, தோன்றியது. சி.பொன்னையாவிடம், 'உங்களால் முடிந்த உதவியை செய்து தாருங்கள்...' எனக் கூறி, அவனை வழி அனுப்பி வைத்தேன், நான்.
ப
உலகம் முழுவதிலும் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது, வணங்கும் முறைகளும், வரவேற்கும் முறைகளும், பல விதங்களில் வித்தியாசமாக உள்ளன. அவற்றில் சில:
* ஒருவரையொருவர் சந்திக்கும் போது, கைகூப்பி வணங்குவது இந்திய பழக்கம். ஆனால், இப்போது புதியவர்களை, நண்பர்களை சந்திக்கும் போதும் அல்லது பிரியும் போதும், நாம் அவர்களுடைய கையைக் குலுக்குகிறோம். இது, பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது
* அமெரிக்கர்களிடமும் கை குலுக்கும் பழக்கம் இருக்கிறது. தியோடர் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியானதும், வெள்ளை மாளிகையில் நடந்த விழாவின் போது, ஒரே நாளில், 8,513 பேருடன் கைகுலுக்கி, உலக சாதனையை ஏற்படுத்தினார்
* இஸ்லாமியர், 'அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)' எனக்கூறி, கையைத் துாக்கி சலாம் சொல்லி, கட்டித் தழுவி வரவேற்பர்
* சீனர்கள், எதிரில் இருப்பவரின் கையைப் பிடித்துக் குலுக்காமல், தங்களின் கைகளையே குலுக்கி கொள்கின்றனர்
* அமெரிக்காவில் உள்ள, கோஸ்டோரிகா பகுதி மக்கள், தங்களை சந்திப்பவர்களின் தோளை செல்லமாக தட்டிக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்
* வட ஆப்ரிக்காவில், நார்மாடி இனத்தை சேர்ந்தவர்கள், விருந்தினர் துாரத்தில் வரும் போதே, அவர் எதிரே வேகமாக குதிரையில் சென்று, நெருங்கியதும் சட்டென கைத்துப்பாக்கியால் அவரது தலைக்கு மேலே ஆகாயத்தை நோக்கி சுடுவர்
* மத்திய ஆப்ரிக்கவாசிகள் வரவேற்கும் போது, ஏதோ உதைக்கிற மாதிரி பாவனை செய்வர்
* ஜப்பானியர்கள், விருந்தினர் முன், குனிவதை மரியாதைக்குரிய செயலாக வழக்கத்தில் கொண்டிருக்கின்றனர். சாதாரணமாக, 5 டிகிரி முன்னால் குனிவது, குட் மார்னிங் மரியாதை. 90 டிகிரி குனிவது, மிகப்பெரிய மரியாதை என, ஜப்பானில் கருதப்படுகிறது
* ஸ்பானியர்கள் புதியவர்களை கண்டவுடன், கிள்ளி வரவேற்பதையே மரியாதைக்குரிய பழக்கமாக கருதுகின்றனர்
* பர்மியர்கள் மற்றும் எஸ்கிமோக்கன், ஒருவரை ஒருவர் முகர்ந்து பார்த்தும் அல்லது மூக்குக்கு மூக்கு உரசியோ வரவேற்கின்றனர்
* தலையில் இருக்கும் தொப்பியை தலையிலிருந்து எடுப்பதையே, பல நாடுகளில் மரியாதையாக கருதுகின்றனர்
* அநேக ஐரோப்பிய நாடுகளில் முத்தமிட்டு வரவேற்கும் பழக்கம் உள்ளது. ஆனால், முத்தமிடும் இடம் நபருக்கு நபர் வேறுபடும்
* தாய்லாந்தில் ஒரு பகுதியினர், பரஸ்பரம் இருவரும் ஒருவரது கையை மற்றவர் பிடித்து விரல்களை சொடுக்கி, ஓசை ஏற்படுத்தி வரவேற்பர்
* திபெத்தியரோ, ஏதோ சண்டைக்கு வருவது போல, முஷ்டியை மடக்கிக் கொண்டு வந்து வரவேற்கின்றனர்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!