
எல்.என்.சிவகுமார், சென்னை: அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரிடம் இருந்த பேச்சாற்றலும், நகைச்சுவை உணர்வும் தற்போதைய தி.மு.க., தலைவர்களிடையே காண முடியவில்லையே...
எழுதிக் கொடுத்ததைப் பார்த்து படிப்பதற்கே, தப்பும், தவறும் செய்பவர்களிடம், நகைச்சுவையை எதிர்பார்க்க முடியாது. அது, சுயசிந்தனையில் தான் வரும்.
* செங்கல்வராயன் மன்னி, சென்னை: த.வெ.க., தலைவர் விஜய், தன், முதல் கட்சி மாநாட்டில், 'என் கட்சியில், வேறு கட்சியை விட்டு விலகிய தொண்டர்களையும், தலைவர்களையும் சேர்த்து கொள்ள மாட்டேன்...' என, சொன்னார். ஆனால், தற்போது, விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலகிய, ஆதவ் அர்ஜுனாவை சேர்த்து கொண்டிருக்கிறாரே...
வரும், 2026 தேர்தலை சந்திக்க, விட்டமின் 'ப' தேவைப்படுமே... அதற்காகத் தான், ஆதவ் அர்ஜுனாவுக்கு தன் கட்சியில் அடைக்கலம் கொடுத்துள்ளார்!
* கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: அடுத்த ஆண்டு தான், கூட்டணி குறித்து முடிவு செய்ய போவதாக, பொதுக்குழுவில் தே.மு.தி.க., கட்சியின் பொதுச்செயலர், பிரேமலதா கூறியுள்ளாரே...
விஜயகாந்த் உயிருடன் இருந்த போது கிடைத்த, மற்ற கட்சிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் இன்றும் தங்கள் கட்சிக்கு இருப்பதாக நம்பிக் கொண்டு, இவ்வாறு பேசுகிறார்!
தே.சந்தியா, விருதுநகர்: 'வட மாநிலங்களில் புத்தகம் வைத்து, 'நீட்' தேர்வு எழுதுகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மூக்குத்தி, தோடு ஆகியவற்றில், 'பிட்' எடுத்து சென்று, 'நீட்' தேர்வு எழுத முடியுமா...' என, சீமான் கேள்வி எழுப்பியுள்ளாரே...
மூக்குத்தி, தோடு ஆகியவற்றில் சிறிய, 'மைக்' பொருத்திக் கொள்வர். அதன் மூலம் பேசி, வெளியே இருப்பவரிடம் சரியான பதில் பெற்று எழுதுவர் என்ற விபரம் கூட தெரியாமல், 'பிட்' எடுத்து செல்வர் என நினைத்து, இவ்வாறு பேசியிருக்கிறார்!
கவிதா பாலாஜி கணேஷ், சிதம்பரம்: புற்றுநோய், இதய பாதிப்பு இந்த இரண்டும் அதிகரித்து வருகிறதே... என்ன காரணம்?
நம் வாழ்க்கை முறை மற்றும் உண்ணும் உணவு.
நாம் சாப்பிடும் அரிசி, எண்ணெய், காய்கறிகள் அனைத்தும், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் தெளித்து வளர்க்கப்படுகின்றன. மரபு மாற்று விவசாய பொருட்களும் அதிகரித்துள்ளது. இதனால் தான், பல நோய்கள் அதிகரித்து வருகிறது.
ஆர்.ஹரிகோபி, டில்லி: 'ஜெனரிக் மருந்துகளை மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். எந்த ஒரு பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது...' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே...
மிக சிறந்த உத்தரவு. இதன் மூலம், மக்கள் அதிக பயனடைவர். விலை அதிகமுள்ள பிராண்டுகளை வாங்காமல், மலிவான விலையில் கிடைக்கும் பிராண்டுகளை வாங்கி கொள்வர்!
வெ.துரைமுருகன், தென்காசி: 'நாங்கள் அனைவரும் இப்போதே எங்களின் ரத்த, 'குரூப் செக்கப்' செய்து தெரிந்து வருகிறோம். நாளை ஒருவேளை போர் நடந்தா, நம் நாட்டு வீரர்களுக்கு ரத்ததானம் செய்யணும்ல்லா, அதுக்குத்தான்...' என, பஞ்சாப் மாநில சீக்கிய இந்தியர்கள் கூறுவதை கேட்கும் போது, உங்களுக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது?
பஞ்சாப் மாநிலத்தவர்கள், காலம் காலமாக பல போர்களை சந்தித்தவர்கள். நம் ராணுவ வீரர்களின் அருமையை நன்கு அறிந்தவர்கள். அதனால், அவர்களுக்கு உதவ தயாராகின்றனர். மிகவும் பாராட்ட வேண்டிய செயல்!
செ.காமாட்சி, காங்கேயம்: முதியவர்கள், நகை மற்றும் பணத்திற்காக தொடர்ந்து கொல்லப்படுகின்றனரே...
பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள், தங்கள் துணைக்கு ஒருவரை உடன் வைத்து கொள்வது அவசியம். அப்படி செய்யாமல் இருப்பவர்கள் தான், கொள்ளையர்களால் குறிவைக்கப்படுகின்றனர்!
அ.ஸ்ரீராம் விஜய், நாமக்கல்: ஆபிசுக்கு வருவது, வீட்டில் இருப்பது எது தங்களுக்கு பிடிக்கும்?
தினமும் காலை, 9:00 மணிக்கு ஆபீசுக்கு வந்து விடுவேன். அதன் பிறகு வேலை வேலை வேலை தான். இரவு 9:00 மணிக்கு மேல், வீட்டிற்கு திரும்புவேன்!
பிரான்சிஸ்கா, சென்னை: ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்திய ஆடைகளை, மற்றவர்களிடம் கொடுத்து விடுவேன் என்கிறீர்களே, அந்த மற்றவர்கள் யார்?
நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன். அப்படி கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!