sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவோன் (11)

/

விண்ணையும் தொடுவோன் (11)

விண்ணையும் தொடுவோன் (11)

விண்ணையும் தொடுவோன் (11)


PUBLISHED ON : மே 18, 2025

Google News

PUBLISHED ON : மே 18, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: கயல்விழிக்காக, புகழேந்தி மிகுந்த சிரமம் எடுத்துக் கொள்வது, அவனது மனைவி சுபாங்கிக்கு பிடிக்கவில்லை. அதற்கேற்ப, சுபாங்கியின் அப்பாவும், 'இதெல்லாம் ஒரு கலெக்டர் செய்கிற வேலையா?' எனக் கேட்டு, உசுப்பேத்தி விட்டார். இதற்கிடையில், புகழேந்தியின் நண்பன், பிரபாகர், அவனை சந்திக்க, திருவண்ணாமலைக்கு வந்தான். தன்னுடன், பிரபாகர் நான்கு நாட்கள் தங்க இருப்பதை அறிந்து, மகிழ்ந்தான், புகழேந்தி. கயல்விழி பற்றி பிரபாகரிடம் சொல்ல, அவனும் அவள் மீது அனுதாபப்பட்டான்.

தீவிர சிகிச்சைக்கு பின், கண் விழித்த, கயல்விழியின் மனதில், ஆழமாய் பதிந்து போன அந்த காட்சியே விரிந்தது. பேருந்திலிருந்து தன்னை தரதரவென்று இழுத்து போனவர்கள், புதர்களுக்கு பின் துகிலுரித்தவர்கள், கைகளால் தடுத்துக் கொள்ள முயன்ற போது, கையை ஒடித்தவர்கள், கீழே தள்ளி உடல் மீது விழுந்து குதறியவர்கள்...

கண்களை மூடிக் கொண்டாள். விழியோரங்களில் அருவியாகப் பெருகியது, கண்ணீர்.

எத்தனை பேர்?

நான்கு பேரா, ஐந்து பேரா...

ஞாபகமில்லையே! அந்த கோரமுகங்கள்... நாய்களாய், பேய்களாய், நரிகளாய், சிங்கங்களாய் தெரிந்தனவே!

சிங்கம் கூட பசிக்குத் தான் வேட்டையாடும். ஆனால், இவர்கள்?

சட்டென்று அம்மாவின் ஞாபகம் வந்தது. அதற்குத்தானே கிளம்பினோம். இடையில் இத்தனையும் நடந்து விட்டது. அம்மாவுக்கு என்ன ஆகியிருக்கும்?

மீண்டும் அவள் கண் திறந்து பார்த்த போது, முதலில் தென்பட்டது, புகழேந்தி. அடுத்து, பிரபாகர். அதன் பின், ஈஸ்வரி மற்றும் டாக்டர்.

'இவர் டாக்டர், தெரிகிறது. யூனிபார்மில் இருக்கும் அந்தம்மா, உயர் போலீஸ் அதிகாரி என, தெரிகிறது. ஆனால், முதன்முதலில் கண்ணில்பட்ட கண்ணியமான அந்த முகம் யாருடையது? அவர் அருகில் நிற்பவர் யார்? இவர்களின் உருவமும், தோரணையும் மெத்தப் படித்தவர்களாக தெரிகிறதே. இவர்களுக்கு அம்மாவைப் பற்றி தெரிந்திருக்குமோ...'

மெல்ல பேச முயன்றாள். கடிபட்டு தடித்து வீங்கியிருந்த உதடுகளால் பேச முடியவில்லை. உடல் முழுவதும் மரண வலி.

அவள் முகத்தருகில் குனிந்து மெதுவாக, ''ஹவ் ஆர் யூ?'' மென்மையாக கேட்டான், புகழேந்தி.

கண்களை மூடித்திறந்தாள்.

''அ... அம்மா...''

புரிந்து கொண்டான், புகழேந்தி.

''அம்மா நல்லா இருக்காங்க. கவலைப்பட வேண்டாம்.''

அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த ஆறுதல் புரிந்தது.

''அ... ம்... மாவைப் பா... ர்க்... கணும்,'' என்றாள், மெல்லிய குரலில்.

''பார்க்கலாம். நிச்சயமாக பார்க்கலாம். கொஞ்சம் அமைதியாக இருங்கள்.''

''இப்பவே அம்மாவைப் பார்க்கணும்.''

சட்டென்று அவர்களின் பேச்சினுள் புகுந்தார், ஈஸ்வரி. அவள் தலையை மென்மையாக வருடி, ''கொஞ்சம் உடம்பு நல்லாகட்டுமா. நானே கூட்டிட்டுப் போறேன்.''

''அம்மாவை இங்க கூட்டிட்டு வாங்களேன்.''

''இந்த நிலமையில் அம்மா உன்னைப் பார்க்கிறது சரியில்ல. அவுங்க மனசு ரொம்ப சங்கடப்படும். அதனால், கொஞ்சம் அமைதியாக இரும்மா. உன் எதிர்ல, மாவட்ட கலெக்டர் நிக்கறாரு. அவர் நண்பரும் வந்திருக்காரு,'' எனக் கூறி, அந்த அறையிலிருந்து வெளியேறினார், ஈஸ்வரி.

அவள் காதில், மாவட்ட கலெக்டர் மட்டுமே விழுந்தது.

'கலெக்டரா... நம்ம மாவட்ட கலெக்டரா! அப்பா என்னை படிக்கச் சொன்ன பதவி. நான் ஆசைப்பட்ட பதவி...' என, நினைக்கையில், அத்தனை வலிகளுக்கு இடையிலும் அவள் முகம் மலர்ந்தது. கண்கள், துயரத்தையும், வேதனையும் மறந்து பிரகாசித்தன. உடலில் கொஞ்ச நஞ்சமிருந்த சக்தி முழுவதையும் சேகரித்து கைகூப்ப முயன்றாள்.

சட்டென்று கூப்ப முயன்ற அந்த கைகளை பற்றி, மென்மையாக பேசினான், புகழேந்தி.

''எந்த மரியாதையும் இப்போது வேண்டாம். உங்கள் உடல் நிலை சரியாக வேண்டும். நீங்கள் நல்லபடியாக எழுந்து நடமாட வேண்டும். அது தான் முக்கியம். பேசாமல் இருங்கள்.''

அவள் கையை மடித்து, போர்வை மீது வைத்து, ''நீங்க எதற்கும் கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம். எல்லாவற்றையும் நாங்க பார்த்துக்கறோம்,'' என்றான், புகழேந்தி.

பின்னர் அவளது பார்வை, பிரபாகரிடம் சென்றது.

''என் பேர், பிரபாகர். உங்க மாவட்ட கலெக்டரோட நண்பன். 'தென்னங்கீற்று' பத்திரிகையின் ஆசிரியர்.

'தென்னங்கீற்று...'

அவளது பார்வை பிரகாசமாயிற்று. உதடுகள் மெல்ல அசைய முயற்சித்தன. குனிந்து அவளது முகத்தின் அருகில் போய், மெல்லிய குரலில், ''நீங்கள் படிப்பீர்களா?'' எனக் கேட்டான், பிரபாகர்.

ஆம் என்பது போல் தலையாட்டினாள்.

''ரொம்ப சந்தோஷம். பிறகு பேசலாம். இப்போது அமைதியாக துாங்குங்கள்.''

புகழேந்தியை ஏறிட்டான். குனிந்து அவளுக்கு கேட்கிற குரலில், ''தென்னங்கீற்று பத்திரிகையில் நான் எழுதிய, கவிதை, கட்டுரைகளைப் படித்திருக்கிறீர்களா?''

''உங்க, 'ஸோல்... மேட்' கட்டுரை உட்பட எல்லாமே...''

மனம் குளிர்ந்தான்; அவனது பரவசம், முகத்தில் விரவியது.

'இவள் நல்ல படிப்பாளி. இந்த மாதிரி ஒரு பெண்ணிற்காக தான் ஏங்கியிருந்தான். ஆனால், அவனுக்கு கிடைத்தவள், நேர்மாறானவள். யார் இவ்வாறு மாற்றி மாற்றி போடுகின்றனர்? சீட்டுக்கட்டை கலைத்துப் போடுகிற மாதிரி, இது என்ன விளையாட்டு?'

அவனது ஆழ்ந்த மவுனத்தை கலைத்தான், பிரபாகர்.

''போகலாமா, புகழ்?''

''போகலாம்,'' என்ற புகழேந்தி, கயல்விழியிடம் விடை பெற்று, தலைமை டாக்டரை சந்தித்தனர்.

''கயல்விழி இப்போது எப்படி இருக்கிறார்?''

''ஷி ஈஸ் அவுட் ஆப் டேஞ்ஜர். சீக்கிரம் தேறிடுவார்.''

''நன்றி டாக்டர்.''

''இது எங்கள் கடமை.''

''இதை விடப் பெரிய கடமை ஒன்று, உங்களுக்கு இருக்கிறது, டாக்டர்.''

''சொல்லுங்கள்.''

''பத்திரிகைகாரர்களோ, மற்ற மீடியாக்களோ அவர்களை அணுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.''

''ஐ வில் டூ மை பெஸ்ட் சார்.''

''தாங்க் யூ டாக்டர்.''

வெளியில் வந்தவர்களை எதிர் கொண்ட எஸ்.பி., ஈஸ்வரியிடம், ''மீண்டும் நாளை வருகிறேன். அதுவரை இந்த பத்திரிகைகாரர்கள் யாரையும் அனுமதிக்காதீர்கள்,'' என்றான், புகழேந்தி.

''நான் பார்த்துக்கறேன், சார். கவலைப்படாதீர்கள்,'' என்றார், ஈஸ்வரி.

''தாங்க் யூ,'' என்ற புகழேந்தி, பிரபாகருடன் காரில் ஏறினான்.

மவுனமாக அமர்ந்திருந்தவனிடம், ''என்ன யோசனை, புகழ்?'' என்றான், பிரபாகர்.

''பிரபா, இயலாமையிலும், வலியிலும், வேதனையிலும் வெளிப்பட்ட புன்னகையே, காயம்பட்ட முகத்தை இவ்வளவு அழகாக்க முடியுமென்றால், எப்பேர்ப்பட்ட பேரழகி அவள். அந்த முகத்தைப் பார்த்துமா, இப்படியெல்லாம் செய்யத் தோன்றியது அவர்களுக்கு. அதற்கு எப்படி மனசு வந்தது?''

''வன்மம், வஞ்சகம், பெருங்கோபம், இயலாமை தான். வேறென்ன சொல்ல முடியும்?''

''அதெல்லாம் இல்லாத ஒரு உலகம் இருக்காதா, பிரபா?''

''இருக்கும். எப்போது தெரியுமா?''

''சொல்லு?''

''மனிதன் தனியாளாக இருக்கும் வரை. உலகத்தில் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருக்க வேண்டும். இரண்டாம் மனிதன், கூடவே கூடாது.''

இதைக்கேட்டதும், வாய் விட்டுச் சிரித்தான், புகழேந்தி. பிரபாகரின் உதட்டில் புன்னகை மட்டும் மலர்ந்தது. கூடவே ஒரு ஆழமான பெருமூச்சும் வெளிப்பட்டது.

''பாவம், அந்தப் பெண். இவளின் எதிர்காலம் என்னவாகும், புகழ்?'' வருத்தத்தோடு கேட்டான், பிரபாகர்.

''உடம்பு வலியை விட, இந்த மனோ வேதனை ரொம்பப் பெரிசு, பிரபா. தாங்கிக்கவே முடியாதது. அதை அவ எப்படி எடுப்பான்னே தெரியல.''

''நாம் அவளை அப்படியே விட்டுட முடியாது, புகழ். 'கவுன்சிலிங்' கொடுக்கணும். நல்லா நடமாட ஆரம்பிச்சதும், சென்னை கூட்டிட்டுப் போய், மனநல மருத்துவரை பார்க்கலாம்.''

''முதலில் உடல்நலம் தேறி எழட்டும். மற்ற எல்லாமே பிறகு தான்,'' என்றான், புகழ்.

''சரி, புகழ். நீ போய் உன் வேலைகளை கவனி. நான் காலாற கொஞ்சம் நடந்துவிட்டு, வருகிறேன்.''

பிரபாகரின் கால்கள் தானாக நடந்து சென்றன. பார்வை எதிலும் நிலை கொள்ளவில்லை. மனம் மருத்துவமனையின் கட்டிலில் கிடந்த உருவத்திடமே நிலைத்திருந்தது.

'சற்று தேறிய நிலையில் பார்க்கும் போதே நெஞ்சு பதறுகிறதே... முட்புதரில் அவள் கிடந்த கோலம், புகழேந்தியை எப்படி பாதித்திருக்கும்...' என, நினைத்து கொண்டான்.

'அத்தனை வலி, ரணம், சோகத்திற்கு இடையிலும் வரைந்து வைத்த சித்திரம் போல் இருக்கிறதே அந்த முகம்! கயல்விழி என்ற பெயருக்கேற்ற கண்கள்...' என, நினைத்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தவன், சட்டென்று நின்றான்.

'அது சரி... நான், ஏன் அந்தப் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்?'

அவனுக்குப் புரிந்தது, கயல்விழியின் களங்கமற்ற பார்வையில், தான் விழுந்து விட்டது. தன் மனதில் உள்ளதை, புகழேந்தியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தான், பிரபாகர்.

புகழும், தானும் கல்லுாரியில் ஒன்றாகப் படித்ததை நினைத்துக் கொண்டான். பி.எஸ்சி.,யோடு இவன், பத்திரிகைத் துறையில் நுழைந்து விட்டான்.

புகழேந்தி விடாது படித்து, முன்னேறி, யு.பி.எஸ்.சி., தேறி, பத்தாவது ராங்க் வந்து, நாலைந்து அரசாங்க உயர் உத்தியோகம் பார்த்து, இப்போது தான் கலெக்டராகி இருக்கிறான்.

ஆரம்பத்தில் கட்டுரை ஆசிரியனாக, கதாசிரியனாக இருந்து, உதவியாசிரியர் ஆகி, தான் மிகவும் விரும்பிப் படித்தும், எழுதியும் வந்த, 'தென்னங்கீற்று' பத்திரிகையின் ஆசிரியராக உயர்ந்துள்ளான்.

புகழேந்தியின் பெரும்பாலான கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் வெளியாவது, இவனது பத்திரிகையில் தான். ஏராளமான வாசகர்களை தேடி தந்ததும், இவனது பத்திரிகை தான்.

புகழேந்திக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் உண்டு. அதில் பாதிக்குப் பாதி, பெண் வாசகிகளே. எத்தையோ பேர், அவனை நேரில் பார்த்த பின், காதலாகி கசிந்துருகி உள்ளனர். அத்தனைப் பேரையும், தள்ளியே நிறுத்தியுள்ளான், புகழேந்தி.

அதையே தான் பிரபாவும் செய்வான். இவனை சுற்றி வந்த பெண்களைத் தள்ளி நிறுத்துவான். இந்த உலகத்தில் நல்லவனாக இருப்பதும், நல்ல பெயர் எடுப்பதும் மிகவும் கடினம். அதைவிட, அந்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வது, மிக மிக கடினம் என்பதை உணர்ந்திருந்த காரணத்தினாலேயே, பெண்கள் விஷயத்தில், புகழேந்தியை போல காத துாரம் தள்ளி நின்றான்.

காதல், கல்யாணம் என்பதெல்லாம் தன் வாழ்வில் நடக்க முடியாதவை. தனக்கு ஒத்துவராதவை என்றே நம்பிக் கொண்டிருந்தான். எனவே, அவன் தன் பத்திரிகையில் காதலாகிக் கசிந்துருகுகிற கதைகளையோ, கவிதைகளையோ வெளியிட்டதே இல்லை. அவ்வாறு எழுதுபவர்களை எழுத்தாளர்களாக மதித்ததுமில்லை.

இது சம்பந்தமாக ஒருமுறை புகழேந்திக்கும், தனக்கும் விவாதம் நடந்தது நினைவுக்கு வந்தது.

'ஏன் பிரபா காதலும் ஓர் உணர்வு தானே. எதற்காக அக்கதைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்?'

'காதல்ன்னா என்னன்னே தெரியாதவங்க, காதலைப் பத்தி எழுதினா எப்படிப் போடுவது?'

'சரி காதல்ன்னா என்னன்னு, நீ தான் சொல்லேன்?'

'எனக்கு காதல் அனுபவம் இல்லை. தெரியாத ஒன்றை, அனுபவிக்காத ஒன்றை என்னால் எழுதவும் முடியாது; ஏற்றுக் கொள்ளவும் முடியாது...'

'எல்லாவற்றையும் நாமே அனுபவித்துத்தான் எழுத வேண்டும் என்றால், இலக்கியமே பிறந்திருக்காது, பிரபா. மற்றவர்கள் அனுபவத்திலிருந்து நமக்கு ஏற்படும் உணர்வை நிச்சயம் நம்மால் எழுத முடியும்...'

'முடியும் தான்... ஆனால், சொந்த அனுபவம் போல் வராது...'

'வரும், பிரபா. உனக்கும் காதல் வரும். நீயும் காதலிப்பாய். அப்போது நீ எழுதுவாய். உன்னால் எழுத முடியும்...'

இப்படி பேசியது நினைவுக்கு வர, ஓடிப்போய், புகழின் வாயில் கைப்பிடி சர்க்கரை அள்ளிக் கொட்ட வேண்டும் போலிருந்தது, பிரபாவுக்கு.

'எஸ்... எனக்கு இப்போது காதல் புரிகிறது. என்னால், இனி காதலைப் பற்றி எழுதவும் முடியும். ஏற்றுக்கொள்ளவும் முடியும்...' என, நினைக்கையில், பூவாய் மலர்ந்தது, பிரபாகரின் முகம். - தொடரும்

பேக்கன்

பிராங்க்ளின்

சோலோன்

ஜி.டி.நாயுடு






      Dinamalar
      Follow us