
தொழிலில் முன்னேற வேண்டுமா?
சொந்த இடத்தில், சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார், நண்பர் ஒருவர். அவரது கடையில், காலை உணவாக, இட்லி, தோசை, பொங்கல் போன்றவை விற்றாலும், கூட்டம் குறைவாகவே இருந்தது.
தன் வியாபாரத்தை வளர்த்து, வருமானத்தைப் பெருக்க, மாற்று யோசனையில் இறங்கி, புது யுக்தியை கையாண்டார்.
அவர், 'மினி உணவு காம்போ' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதில், இட்லி ஒன்று, மினி தோசை, ஒரு வடை மற்றும் ஒரு கப் டீ அல்லது காபி ஆகியவை சேர்ந்த காம்போவை, வெறும், 50 ரூபாய்க்கு வழங்கினார்.
மதிய வேளையில், குறைந்த அளவு சாம்பார் சாதம், ரசம் சாதம், ஒரு பொரியல் மற்றும் வடை ஒன்று ஆகியவற்றை, 70 ரூபாய்க்கு விற்றார்.
இந்த, 'காம்போ' உணவு, வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் எளிய மக்களுக்கு ஏற்றவாறு இருந்தன.
இதுபற்றி நண்பரிடம் விசாரித்தேன்.
'இந்த, 'மினி காம்போ'வால், இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில், 6,000 ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது...' என்றார், நண்பர்.
அவர் கடைக்கு பக்கத்து தெருவில் பெரிய ஹோட்டல்கள் இருந்தாலும், இந்த மலிவு விலை, 'காம்போ' மக்களை கவர்ந்துள்ளது.
அவர் மனைவி, வீட்டில் தயாரிக்கும் முறுக்கு, பர்பி போன்ற பலகாரங்களையும் சேர்த்து விற்பனை செய்கிறார். இது, அவரின் தொழிலை மேம்படுத்த பேருதவியாக இருக்கிறது.
மாற்று யோசனையால், தன் டீக்கடையோடு கூடிய சிறிய உணவகத்தை வெற்றிகரமாக வளர்த்து, நல்ல வருமானமும் ஈட்டி வருகிறார்.
புதிய யோசனைகளை பயன்படுத்தினால், எந்தத் தொழிலிலும் முன்னேறலாம் என்பது தெளிவாகிறது அல்லவா!
— ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.
சிக்கனம் செழிப்பை தரும்!
வசதி படைத்த என்னுடைய தோழியின் மகன், தன்னுடன் பணி புரியும் ஒரு பெண்ணை வெகு நாட்களாக காதலித்து வந்தான். அந்த பெண்ணின் பெற்றோரும் வசதி படைத்தவர்கள். இவ்விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவர, அவர்கள் சம்மதத்துடன் சம்பிரதாயமாக பெண் பார்க்கும் படலம் நடந்தது.
அப்போது, பெண்ணும், மாப்பிள்ளையும் விதித்த ஒரு நிபந்தனை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதாவது, 'எங்கள் திருமணம் எளிய முறையில் ஒரு கோவிலில் நடக்க வேண்டும். எங்கள் திருமணத்திற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென நினைத்தீர்களோ, அந்த பணத்தை எங்கள் பெயரில் வங்கியில், 'டெபாசிட்' செய்து விடுங்கள்...' எனக் கூறினர்.
பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்து, இருவீட்டாரும் சேர்ந்து, 50 லட்ச ரூபாயை இருவர் பெயரிலும் வங்கியில், 'டெபாசிட்' செய்தனர்.
சில மாதங்களுக்கு பின், இருவரும் தாங்கள் சேமித்த, 20 லட்ச ரூபாயோடு, அந்த 50 லட்ச ரூபாயையும் சேர்த்து, 70 லட்ச ரூபாய்க்கு ஒரு தனி வீடு வாங்கினர். தற்போது, அதை கணிசமான தொகைக்கு வாடகைக்கு விட்டு, அப்பணத்தையும் சேமித்து வருகின்றனர். தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்ட அத்தம்பதியரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
—வ. ராஜராஜேஸ்வரி, சென்னை.
திருக்குறள் எளிதில் கற்க...
அலுவலக நண்பரை காண, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். பள்ளி அளவில் ஆண்டுதோறும் நடக்கும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொள்ள, திருக்குறளை மனப்பாடம் செய்ய சொல்லி, தன், ஐந்து வயது மகனை இம்சித்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.
இப்போது, மாணவர்களுக்கு விளையாட்டு போல் சொல்லிக் கொடுக்கும் முறை வந்து விட்டது. திருக்குறளை பாடமாக இல்லாமல், பாடலாக நடத்தினால், நன்றாக புரிந்து கொள்வர்.
திருக்குறளை இளம் வயதினர் தெரிந்து கொள்வது மிக நல்லது தான். அதற்காக ஒரே சமயத்தில் போட்டிக்காக, 20 திருக்குறளை மனப்பாடம் செய்யச் சொல்லி துன்புறுத்தலாமா?
திருக்குறளை தினம் ஒரு குறளாக, பொருளுடன் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்வதுடன், அவர்கள் வாழ்க்கை சிறக்க, நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும்.
புரிந்து கொள்வரா!
— வி.சுந்தரேசன், தேனி.