/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: சிற்பி செதுக்கிய சுழலும் ஆயுதம்!
/
விசேஷம் இது வித்தியாசம்: சிற்பி செதுக்கிய சுழலும் ஆயுதம்!
விசேஷம் இது வித்தியாசம்: சிற்பி செதுக்கிய சுழலும் ஆயுதம்!
விசேஷம் இது வித்தியாசம்: சிற்பி செதுக்கிய சுழலும் ஆயுதம்!
PUBLISHED ON : ஜூன் 29, 2025

ஜூலை 4 - சுதர்சன ஜெயந்தி
பெருமாள் கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதிகளைத் தரிசித்திருப்பீர்கள். சக்கரத்தாழ்வாரை, சுதர்சனர் என்றும் சொல்வர். இவரது பின்பக்கம், யோக நரசிம்மர் இருப்பார்.
ஒரே கல்லில், முன்னும் பின்னுமாக இப்படி சிலை வடித்திருப்பர். திருமாலின் ஆயுதமான சக்கரத்தையே, சக்கரத்தாழ்வார் என்பர். இவர், ஆனி மாதம், சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
திருமாலின், வலதுகை சுட்டுவிரலில் நின்று சுழலும் இந்த ஆயுதம், மிகுந்த சக்தி மிக்கது. தன்னை எதிர்ப்பவரை அழித்து விட்டு, மீண்டும் திருமாலின் கரங்களிலேயே வந்து அமர்ந்து விடும். இந்த சக்கரம் பிறந்த வரலாறு சுவையானது.
தேவலோக சிற்பி விஸ்வகர்மா, தன் மகள் சஞ்சனாவை சூரிய பகவானுக்கு மணம் முடித்து வைத்தார். சூரியனின் வெப்பத்தை சஞ்சனாவால் தாங்க முடியவில்லை. இதனால், அவன், தந்தையிடம் தன் சிரமத்தை தெரிவித்தாள்.
சூரியனை வரவழைத்தார். விஸ்வகர்மா. ஒரு கூண்டில் மருமகனை அடைத்து வைத்து, அவரது வெப்ப சக்தியை குறைக்கும் வகையில், சூரியனின் உடல் பாகங்களை செதுக்கினார். அந்த பாகங்களில் ஒன்றை சக்கர வடிவிலும், ஒன்றை வேல் வடிவிலும் செதுக்கினார்.
இந்த ஆயுதங்கள். சிவனிடம் ஒப்படைக்கப்பட்டன. சக்கரத்தை திருமாலிடமும், வேலை, தன் மனைவி
பார்வதியிடமும் கொடுத்தார், சிவன். அந்த வேல், பார்வதியின் மூலம், அவளது மகள் முருகனுக்கு கொடுக்கப்பட்டது.
சக்தி மிக்க ஜலந்தரன் எனும் அசுரனை அழிக்க, சிவனால் உருவாக்கப்பட்டது. இந்த சக்கரம் என்றும். ஒரு வரலாறு உண்டு.
கிருஷ்ணாவதாரத்தின் போது, தன் எதிரியான சிசுபாலனின் தலையை கொய்ய, சக்கரத்தை பயன்படுத்தினார், திருமால், இதுபோல், பல அசுரர்களின் தலைகளை கொய்ய, இது பயன்பட்டது.
நரசிம்ம அவதாரத்தில், இரண்யனின் வயிற்றைக் கீற, திருமாலின் நகங்களில் வந்து அமர்ந்து கொண்டது, இந்த சக்கரம். தீயவர்களை இது அழிக்கும். செவ்வாய் கிரகத்தின் ஆற்றலை கட்டுப்படுத்தும் சக்தி, சக்கரத்தாழ்வாருக்கு உண்டு.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், கண்ணுக்கு தெரியாத வியாதிகளால் அவதிப்படுபவர்களும், சக்கரத்தாழ்வாரை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
சக்கரத்தாழ்வாரின் பின்னால் அமர காரணம் உண்டு. பக்தர்கள் யாருக்காவது ஆபத்து என்றால். பின்னால் இருக்கும் நரசிம்மர். 'உம்' என்று, 'சிக்னல்' கொடுப்பார். அவ்வளவு தான்... அந்த ஆபத்தை விளைவித்தவரின் தலையை கொய்து விடுவார். சக்கரத்தாழ்வார்.
மதுரை அழகர் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவர். கும்பகோணம் சக்ரபாணி கோவிலில், மூலவராகவே அருள்பாலிக்கிறார், இவர். இந்த கலியுகத்தில், சக்கரத்தாழ்வாரை வழிபட்டு, பாதுகாப்பான வாழ்வைப் பெறுவோம்.
- தி. செல்லப்பா