/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து: அகோனி போரா அரிசி!
/
நம்மிடமே இருக்கு மருந்து: அகோனி போரா அரிசி!
PUBLISHED ON : ஜூன் 22, 2025

அகோனி போரா அரிசி இருந்தால், அடுப்பே இல்லாமல், 15 நிமிடத்தில் சோறு சமைக்கலாம்.
இந்தியாவின் மிக முக்கியமான உணவு, அரிசி. அதிலும், தென் மாநிலத்தில் அரிசி உணவு, மிகவும் பிரபலம். ஆனால், அசாமில் விளையும், அகோனி போரா அரிசி இருந்தால், சமைக்க கேஸ் அடுப்பு, குக்கர் மற்றும் அதற்கான நேரமும் தேவை இல்லை. மாயாஜால அரிசி, மென்மையான அரிசி என, அழைக்கப்படும் இந்த அகோனி போரா, நம் சோறாக்கும் முறையை முற்றிலும் மாற்றி அமைக்கிறது.
புழுங்கல் அரிசி வகையை சேர்ந்த இது, குறைந்த அமிலோஸ் உள்ளடக்கத்தை அதாவது, 4.5 சதவீதம் கொண்டது. மற்ற அரிசி வகைகளில், 20 - 25 சதவீதம் அமிலோஸ் உள்ளது. இது, தானியங்களின் கடினத் தன்மைக்கு காரணமாகிறது. இந்த அரிசியில், மிகக்குறைந்த அமிலோஸ் இருப்பதால், கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
குளிர்ந்த நீராக இருந்தால், இந்த அரிசியை, 45 நிமிடங்கள் ஊற வைத்தால், சாதம் தயார். சுடு தண்ணீராக இருந்தால், 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து, இலை போட்டு பரிமாறி விடலாம். மேற்கு அசாம் பகுதிகளில் அதிகளவில் விளைகிறது. அதிக புரத சத்துக்கள் நிறைந்தது. நான்கு, ஐந்து மாதங்களில் விளையக் கூடியது.
அகோனி போரா அரிசி எளிதில் ஜீரணிக்கக் கூடியது. குட்டையாக வளருவதால், வைக்கோல் உற்பத்தி குறைவாக இருக்கும். அத்துடன், அறுவடை மற்றும் பதப்படுத்தவும் மிகவும் எளிமையானது.
அசாமின் டிடாபோர் அரிசி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால், அகோனி போரா அரிசி, 1992ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது.
சமைக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும் அகோனி போரா அரிசி உண்மையிலேயே அனைவருக்கும் வரப்பிரசாதம் என்பதில் சற்றும் ஐயமில்லை.
— ம.வசந்தி.