
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெருத்த அந்த ஆலமரத்தை சுற்றி, வட்டமாய் ஒரு மேடை இருக்கும். அதில் எப்போதுமே நாலு பேராவது உட்கார்ந்து, வெற்றிலையோடு, யாரையாவது மென்று கொண்டிருப்பர்.
எங்க ஊரு வாய்க்காலுக்கு தண்ணீர் வருமா, வராதா என்பதிலிருந்து, உலக நியாயம் வரை பேசப்பட்டு, பிழிந்து காய வைப்பர். நாலு பேர், மறுபுறத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பர்.
இன்று, ஆலமரத்தின் அடியில் நான்கைந்து பேர் மட்டுமே! எல்லாருமே பெரிய முடுக்கி விட்ட மீசையுடன் அமர்ந்திருந்தனர். அதில், என் தாத்தாவும் இருந்தார். சுற்றிலும் பார்த்தேன்.
எதிரே...
அட! இது தபால்காரர் தானே! அவர் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு முகிழ்த்தே கிடக்கும். இன்றோ களையிழந்து இருந்தது. 
''சரிப்பா, ஆரம்பிங்க. பொழுதேறுதில்லே,'' என்றார், ஒருவர்.
''ஆமா, நம்ம தபால்காரர் பத்தி சொல்லவே வேணாம். அவர் செஞ்சது, சாதாரண மனுஷன் செய்றது இல்லே. இந்த விஷயம் இத்தனை நாளா நம்ம கவனத்துக்கு வரலை. வந்தபின் சும்மாயிருக்கக் கூடாதுன்னு தான்,'' பேசியவர், அருகிலிருந்தவரை பார்க்க, அவர் துவங்கினார்.
''அதனாலே, நம்ம ஊர் பொது பணத்துலேருந்து தபால்காரர் செலவழிச்ச பணத்தை கொடுத்திடலாம்ன்னு முடிவெடுத்து இருக்கோம். தபால்காரரும் பெரிய சம்சாரி. குஞ்சும் குளுவானுமா பிள்ளைகள் இருக்கு,'' என்றார்.
கூட்டம் சந்தோஷமாய் ஆமோதித்ததில், சின்ன ஆதுரம் ததும்புவதாக எனக்கு தோன்றியது. 
தபால்காரர் முகத்தை ஏறிட்டேன். அதில் வேதனையும், மறுதலிப்பும் கிளை விட்டிருந்தது. 
அன்னத்தாய் இறந்து போய், மூன்றாம் நாள்! 
எங்கள் ஊரில் வசித்தவர் தான், அன்னத்தாய். சின்ன திண்ணை வைத்த வீடு. வீட்டின் பின்புறம் இருந்த நிலத்தில் காய்கறி தோட்டமும், கீரைப்பாத்தியும், கூடவே நாலைந்து ஆடுகள் உண்டு.
ஒரே மகன், வெள்ளியங்கிரி. அவனும் ராணுவத்திலிருக்க, அவ்வப்போது வந்து போவான். ஓரிரண்டு ஆண்டுகளாக, அன்னத்தாய் எப்படியேனும் மகனுக்கு கால்கட்டு போட்டுவிட முயன்று கொண்டிருந்தாள்.
ஊரென்றால் பெரிதாக ஏதுமில்லை. கொள்ளிடத்திலிருந்து பிரிந்து வரும் ஏரிப்பாசனம். அதனால், விவசாயம் தான்! சின்னதாக கிருஷ்ணன் கோவிலும், சிவன் கோவிலும், அய்யனார் கோவிலும் உண்டு.  மிஞ்சிப் போனால் பத்து, பன்னிரண்டு தெருக்கள். பெரும்பாலும் உறவுமுறைகளே!
எங்கள் ஊருக்கும், சுத்துப்பட்டு நாலைந்து ஊருக்குமே, ஒரே தபால்காரர் தான். எல்லாருமே அவருக்கு நல்ல பரிச்சயம். எல்லார் சுகதுக்கமும் அத்துபடி.
எல்லாருக்குமே வந்த கடிதத்தை படித்தும் காட்டுவார்; எழுதியும் தருவார். அதனால், எல்லா விஷயமும் தெரிந்தாலும் வாயைத் திறக்கமாட்டார். நல்ல மனிதர். தினமும் சைக்கிளில் வந்து பட்டுவாடா செய்து விட்டு, பக்கத்துாரில் உள்ள, தன் வீட்டுக்கு போய் விடுவார். 
இன்றைய பஞ்சாயத்துக்கு காரணகர்த்தாவும் இவர் தான். 
அன்னத்தாய்க்கு வரும் கடிதங்களை இவரே படித்துக் காட்டிவிட்டு, மறுநாளே அன்னத்தாய் சொல்ல, சொல்ல கடிதத்தை எழுதி போடுபவரும் இவரே!
அன்னத்தாயின் மகனும், மூன்று ஆண்டுகளாக ஊருக்கு வரவேயில்லை. தாயின் மனசு பூத்துப் போனது. மகன் முகம் பார்க்க தவித்தது. ஒருமுறை முகம் காட்டிவிட்டுப் போக சொல்லி, கடிதம் மேலே கடிதமாய் தபால் போட்டும் வரவில்லை. 
போன மாதம் வந்த பணத்தைக் கூட, கோபாவேசமாய் திருப்பியனுப்பி விடும்படி சொல்லி விட்டார், அன்னத்தாய்.
அப்போது, நானுமே இருந்தேன். தபால்காரர் தான் கெஞ்சி சமாதானம் சொல்லி மலையிறக்கினார். அப்புறம் அன்னத்தாய், தன் மகனின் கடிதங்களை குத்தி வைத்திருந்த கம்பியை எடுத்து வந்து வாசித்துக் காட்டும்படி கேட்டுக் கொள்ள, நான் தான் படித்து காட்டினேன். மகன் மீது அத்தனை அன்பு. 
முகமே, கனிந்த தீபம் போல விகசித்துக் கிடந்தது. 
அதன்பின் நான், டவுனுக்கு எங்கள் வீட்டுக்கு போய் விட்டேன். நான்கு நாட்கள் முன் தான் விடுமுறைக்கு திரும்ப, பாட்டி வீட்டுக்கு வந்தேன். 
வந்த மறுநாளிலிருந்தே களேபரம். அன்னத்தாய் இறந்து போய்விட, ஊரே  சேர்ந்து அவர் மகனுக்குத் தந்தி அனுப்பும்படி, தபால்காரரை கேட்க, அவர் மென்று முழுங்கி சொன்னது, பெரிய பூகம்பத்தை கிளப்பியது. 
அன்னத்தாயின் மகன், வெள்ளியங்கிரி மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே போரில் இறந்து விட்டாராம். அதற்கான ஆவணங்கள் வந்து சேர்ந்து விட்டதெனினும், அன்னத்தாய் இதை தாங்க மாட்டார் என்றெண்ணி, மறைத்து விட்டாராம், தபால்காரர். 
அன்னத்தாய்க்கு திருமணமாகி, பல ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன், வெள்ளியங்கிரி. ஒற்றைப் பிள்ளையிடம் உயிரையே வைத்திருந்த, அன்னத்தாய், இந்த செய்தியை கேட்டால், அதிர்ச்சி தாங்காது உயிரை விட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காக, தானே கடிதம் எழுதி போட்டு விட்டு, படித்தும் காட்டி வந்திருக்கிறார்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில், சொந்தப் பணத்தையே, வெள்ளியங்கிரி அனுப்புவது போல அனுப்பியிருக்கிறார். இப்போது தான், நான்கைந்து மாதங்களாக மகனுடைய, 'பென்ஷன்' வர, தான் அனுப்புவதை நிறுத்தி விட்டாராம். 
கூட்டத்தின் முன்னே இதையெல்லாம் சொல்லும்போது, நானும், தாத்தாவின் முதுகுக்குப் பின்னே நின்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
தபால்காரரின் மனசின் பரிசுத்தம், என்னைத் தாக்கியது. 
'யாரோ எவரோ என்றில்லாமல், இரண்டரை ஆண்டுகளாய் தன் சொந்தப் பணத்தையே தந்து, கடிதத்தையும் மறவாது போஸ்ட் செய்து, தாயைப் போலவே அன்பு செலுத்தும் குணம், யாருக்கு வரும்!' 
பெருமழையில் குளித்துக் களைத்துப் போன மருத நிலம் போல, கூட்டம் நெகிழ்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தது. 
அது தன்னை உசுப்பிக் கொண்டு நிமிர்ந்த சமயம். அன்னத்தாயின் ஈமக்கடன் யார் செய்வதென்ற கேள்வி எழுந்தது. அதையும் மனமுவந்து தானே செய்வதாக தபால்காரர் கூறி விட, என்னுள் விஸ்வரூபம் எடுத்தார், தபால்காரர். 
யாரோ ஒருவருக்கு ஈமக்கிரியை செய்ய, எத்தனை பெரிய மனசு வேண்டும் என, எனக்கு தோன்றியது.  
கூட்டமும் அப்படித்தான் உணர்ந்ததோ என்னவோ!
''எங்கம்மாவை நான் பார்த்ததில்லைங்க! ஆனா, இங்கிருக்கிற எல்லாருமே அம்மா தாங்க, எனக்கு. அதிலும், அன்னத்தாயி எனக்கு நிசமாலுமே அன்னத்தாய் தானுங்க. மதியம் இந்த ஊருக்கு வந்திட்டா, அன்னத்தாயி வீட்டுலதானுங்க சாப்பாடு. 
''சாப்பாடு நேரம் தவறி வந்தாலும் டீத்தண்ணியோ, மோரோ கொடுத்திட்டு, 'நீயும், வெள்ளியங்கிரி போல எனக்கு மகன் தானேப்பா'ன்னு, சொல்லுமுங்க. 'எம்மவன் தேசத்துக்காக காவல் காத்து சேவை செய்றான். நீயும், இந்த ஊருக்கு வேற ஒரு விதத்துல உபகாரமா இருக்கிறே. என் பையனுக்கு பசியாத்தறது தப்பா என்ன?'ன்னு சோத்தைப் போடுமுங்க. 
''என் பொஞ்சாதி, புள்ளைங்க எல்லாரையும் விசாரிக்குமுங்க. என் பொஞ்சாதியோட பிரசவத்தின் போது, அம்மா தானுங்க நாலு நாள் கூட இருந்தது, ஆஸ்பத்திரியிலே. அதும் உசிரை காப்பாத்தத்தான். இத்தினி அவதியும்! 
''நம்ம மருத்துவர் ஐயா தான், அன்னிக்கு எதேச்சையா சொன்னாருங்க. அன்னத்தாயி அம்மாளுக்கு அதிர்ச்சியை தாங்க முடியாதுன்னு. இதயம் ரொம்ப பலவீனமாய் இருக்கிறதா சொன்னாருங்க.  
''அ... அ... அதனால தான் மறைச்சுட்டேன். தப்பு தான்! பெரிய தப்பு தான். அந்த சமயம், போன உசிரோ போயிருச்சு. இந்த வயசான உசிரும், மனசுல குறையோட போகணுமான்னு தோணுச்சு. நான் செய்றது தர்மத்துக்கு முன்னே தவறா தோணலே! அதான் துணிஞ்சு மறைச்சுட்டேன். 
''ஒரு விண்ணப்பமுங்க... பெரிய மனசு பண்ணி பெரியவங்க எல்லாரும் நானே, அன்னத்தாயம்மாவுக்கு கடைசி காரியம் பண்ண அனுமதி கொடுக்கணும்,'' என, தலைகுனிந்து, கை கூப்பி நின்றார், தபால்காரர். 
கடைசியில், அவர் தான் கொள்ளி வைத்தார். 
இன்று மீண்டும் ஊர் கூட்டம்!
தபால்காரருக்கு அவர் செலவழித்த பணத்தைத் தந்து விடலாம் என்று...
''தப்பா நினைக்காதீங்கய்யா! தாய்க்கு கொள்ளி போட்டவனுக்கு காசை கணக்கு பண்ணித் தரலாமாய்யா? கொள்ளி வைக்கிற பாக்கியத்தை தந்த பொறவு, இப்படி காசைத் தந்து அவமானிக்கலாமா? வேணாம்யா!
''எப்பவும் போலவே நான், உங்க அன்புக்குரிய தபால்காரனாவே, இருக்கேன். அம்மாவுக்கு புள்ளை சம்பாதனையிலே குடுத்த காசாவே, நான் தந்தது இருக்கட்டும். நானும், அன்னத்தாயோட புள்ளை தான். எனக்கு இது போதும்...'' என, தபால்காரர் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, கிளம்பி விட்டார்.
துாரத்தே அவருடைய சைக்கிள் மணியோசை கேட்டது. 
என்னுள் அந்த தபால்காரரின் பாசமும், மனிதமும், நேசமும் கண்ணுக்கு புலப்படாமல் ஓடும் மறைமுக நதியாய், திரிவேணியாய் மண்ணுக்குள்ளே புதைந்தோடுவது போல, என்னுள்ளிலும் படிவங்களாய் தங்கியே விட்டது. 
அதன்பின், எத்தனை எத்தனையோ நடந்து விட்டது என் வாழ்விலும்!
தாத்தா, பாட்டி மறைவுக்குப் பின், படிப்பு, வேலை, திருமணம், குழந்தைகள் என, பல காரணங்களால், ஊரே பின்னுக்குப் போய் விட்டது. 
பல ஆண்டுகளுக்குப் பின், இதோ, இன்று தான் இந்த மண்ணை சுவாசித்து நிற்கிறேன். என் பெண்ணின் திருமணத்திற்காக, குலதெய்வ வழிபாட்டுக்கு அம்மாவுடனும், கணவருடனும் குடும்பத்தோடு ஊருக்கு வந்த போது, ஊரில் தென்பட்ட மாற்றங்களால் எனக்கு பெரும் தடுமாற்றம். 
ஊரே முகத்தை மாற்றிக் கொண்டிருந்தது. ஊரே பெரிதாகி விட்டது போல இருந்தது. நிறைய தோட்டங்கள் காணாமல் போயிருந்தது. சிவன் கோவில் பின்னாலிருந்த தென்னஞ்சோலையைக் காணவே காணோம். 
ஊர் நடுவே அந்த ஆலமரம்... அப்பாடி, இது மட்டும் காலத்துக்கு ஈடு கொடுத்து நின்றிருக்க, ஒரு பெரிய ஆசுவாசம். ஏதோ பால்ய கால சிநேகத்தை கண்டது போல! சுற்றி விழுது விட்டு பரந்து இருந்தது. 
அதைச்சுற்றியிருந்த மேடையைக் காணோம். காலத்தின் மாற்றம்! இப்போதெல்லாம் யாருக்கு தான் நின்று பேச நேரமிருக்கிறது. ஊரும், 'பிசி'யாகி விட்டதோ! 
எத்தனையோ முகங்கள் மறந்து போய்விட்டிருந்தாலும், அந்த தபால்காரரின் முகமும், குரலும் மட்டும் குபீரென்று உள்ளிருந்து எழுந்தது.
கரடுமுரடாயிருந்த மரத்தின் தண்டை கைகளால் தடவினேன். கண்ணீர் துளி கண்ணுக்குள் கூடு கட்டியது.
ஆலம் இலையொன்று என்னை அடையாளம் கண்டு குசலம் விசாரிப்பது போல, என் தலையில் விழுந்தது. 
அதை வலது கைக்குள் அடக்கி வைத்துக் கொண்டேன், ஒரு ஞாபக சின்னத்தைப் போல!
ஜே. செல்லம் ஜெரினா

