
புதுவித மோசடி.. உஷார்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய வீட்டுக்கு பக்கத்தில், புதிதாக வீடு கட்டி குடி வந்திருந்த நண்பருக்கு நிகழ்ந்த, மோசடி சம்பவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அது:
உறவினரின் பக்கத்து வீட்டுக்காரர், தன் புது வீட்டில், மாடித் தோட்டம் அமைக்க விரும்பி, அதற்காக வலைதளங்களில் ஆராய்ந்த போது, 'மாடித் தோட்ட ஆலோசகர்கள்' என, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த, 'வெப்சைட்' ஒன்றை பார்த்துள்ளார்.
அதிலிருந்த மொபைல் எண்ணில், அவர்களை தொடர்பு கொண்டு, தன் வீட்டில் மாடித் தோட்டம் அமைக்கவும், தனக்கு என்னென்ன செடி வகைகள் தேவை என்பதையும் கூறியிருக்கிறார். அப்போது அவர்கள், 'ஆன்லைன் லிங்க்'கை அவருக்கு அனுப்பி, அதன் மூலமாக, 100 ரூபாய் முன்பணம் செலுத்த கூறியுள்ளனர்.
குறைவான தொகை என்பதால், தயங்காமல் உடனே பணம் செலுத்தி உள்ளார். அதன் பின் அவர்கள், 'க்யூஆர்' குறியீட்டை அனுப்பி, அதை, 'ஸ்கேன்' செய்து, 'ஆர்டர்' விபரங்களை உறுதிப்படுத்த கூறியுள்ளனர்.
அந்த, 'க்யூஆர்' குறியீடு, ஒரு ஏமாற்று குறியீடு என்பதையும், அது மொபைலை, 'ஹேக்' செய்து, வங்கி 'ஆப் பாஸ்வேர்டு' மற்றும் ஓ.டி.பி.,க்களை திருடி விடும் என்பதை அறியாததால், அவர்கள் சொன்னது போலவே செய்திருக்கிறார்.
அடுத்த நொடியே, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட செய்தி வந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர்களை மொபைலில் தொடர்பு கொண்டபோது, அது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகே, 'ஆன்லைன்' மோசடியாளர்களால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், சைபர் கிரைம் போலீசில் புகார் தந்துள்ளார்.
வாசகர்களே... இப்படியும் புதுவித மோசடி நடப்பதால், எந்தவொரு, 'ஆன்லைன்' சேவைக்கும், 'க்யூஆர்' குறியீடு, 'ஸ்கேன்' செய்ய சொன்னால், உஷாராக இருங்கள். மேலும், அறிமுகமில்லாத நபர்களிடமும் முன் பணம் செலுத்துவதை தவிருங்கள்.
— ஆதித்த நிமலன், கடலுார்.
கைத்தொழில் ஆயுசுக்கும் கூட வரும்!
சமீபத்தில், வெளியூரிலுள்ள என் அத்தையின் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு, வீட்டு முற்றத்தில் புதிதாக வண்ணம் பூசப்பட்ட மர நாற்காலிகளும், மேஜைகளும் புதுப்பொலிவுடன் மின்னின. அதைப்பார்த்து வியந்து, அத்தையிடம், 'இவை புதுசா வாங்கின மாதிரி இருக்கே... எங்க வாங்கினீங்க? எவ்வளவு செலவாச்சு?' என்று வினவினேன்.
அதற்கு சிரித்தபடி, 'இதெல்லாம் புதுசு இல்லை. பழசு தான்...' என்று சொல்லி, வீட்டின் பின்புறம் அழைத்து சென்றார், அத்தை. அங்கே, 70 வயதை கடந்த முதியவர் ஒருவர், பழைய மரச்சாமான்களை சீர் செய்து, வார்னிஷ் பூசிக் கொண்டிருந்தார்.
'இவர் எங்க பகுதியில் திறமையான ஆசாரி. வயசானதால, முன்ன மாதிரி இவரால உழைக்க முடியலை. அதனால், இதுபோல பழைய மரச்சாமான்களை புதுப்பிக்கும் வேலை செஞ்சு, வருமானம் ஈட்டறாரு...' என்றார், அத்தை.
'பொறுமையும், கவனமும் இருந்தா, பழைய பொருளை பொக்கிஷமாக்கலாம். இந்த வேலையில, எனக்கு வருமானம் கிடைக்கிறது. கற்ற தொழிலை மறக்காதிருக்கிற சந்தோஷமும் கிடைக்குது...' என்றார், அந்த பெரியவர்.
— வெ.பாலமுருகன், திருச்சி.
இப்படியும் சம்பாதிக்கலாம்!
அண்மையில், நெருங்கிய உறவினரது மகனின் பிறந்த நாளை கொண்டாட, சிறிய ஹோட்டலுக்கு சென்றோம். அங்கே பிறந்த நாள், 'கேக்' வெட்டியவுடன், ஒரு இளைஞன், கிட்டார் வாசிக்க, ஒரு இளம் பெண், 'ஹாப்பி பர்த்டே...' என, பிறந்த நாள் பாட்டை பாடினார்.
பின்னர், பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதற்கிடையில், அந்த இளைஞனும், பெண்ணும் கிட்டாரில் நிறைய திரைப்பட பாடல்களின் சில சரணங்களை பாடினர். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. 'உங்கள் பாடல் நன்றாக இருக்கிறது. இந்த ஹோட்டலில் வேலை செய்கிறீர்களா?' எனக் கேட்டேன். அவர்கள் இருவரும், கல்லுாரியில் படிப்பதாக கூறினர்.
'இது போன்ற பிறந்த நாள் விழாக்கள் வரும் போது, நாங்கள் இருவரும் இங்கு வந்து பாடல்களை பாடுவோம். இதில் கிடைக்கும் வருமானம், எங்கள் படிப்பு செலவுக்கு கொஞ்சம் கை கொடுக்கிறது. 'இதுபோக, மற்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் நாங்கள் சென்று கலந்து கொள்வோம்...' என, 'விசிட்டிங் கார்டை' கொடுத்தனர்.
'படிப்பதற்கு கை கொடுப்பதாலும், பெற்றோரின் பாரம் குறையும் என்பதாலும், இப்படி பகுதி நேர வேலை செய்கிறோம்...' என்றனர். 'நன்றாக பாடுகிறீர்கள். நன்றாக படிக்கவும் செய்யுங்கள்...' என, பாராட்டி விட்டு வந்தேன்
— கா.பசும்பொன், மதுரை.