/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: மூன்று நாள் குளிக்காதீர்கள்!
/
விசேஷம் இது வித்தியாசம்: மூன்று நாள் குளிக்காதீர்கள்!
விசேஷம் இது வித்தியாசம்: மூன்று நாள் குளிக்காதீர்கள்!
விசேஷம் இது வித்தியாசம்: மூன்று நாள் குளிக்காதீர்கள்!
PUBLISHED ON : ஜூலை 13, 2025

ஜூலை 16 முதல் 18 வரை சர்வநதி ரஜஸ்தலை
ஆடி 1 முதல், 3ம் தேதி வரை தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் குளிக்கக் கூடாது என, சட்டம் வகுத்திருக்கின்றனர், முன்னோர். அது மட்டுமல்ல, ஆறுகளில் தண்ணீரை முகரவோ, கால் கழுவ இறங்கவோ கூட தடை விதித்துள்ளனர். இது என்ன புதுமை!
வழக்கமாக, பஞ்சாங்கத்தில், ஆடி 1 முதல் 3 வரை, சர்வநதி ரஜஸ்வலை என, குறித்திருப்பர். சர்வநதி என்றால், எல்லா நதிகளும் என பொருள். ரஜஸ்வலை என்றால், மாத விலக்கு.
பெண்களுக்கு எப்படி மாத விலக்கு வருகிறதோ, அதுபோல நதிகளுக்கும் மாதவிலக்கு உண்டு. அனைத்து நதிகளையும் நாம் பெண்களாகவே பார்க்கிறோம். காவிரிப் பெண், தாமிரபரணி தாய், கங்கையம்மா... இப்படி பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலேயே நதிகள் உள்ளன.
விலக்கு நாட்களில், மற்ற பெண்கள் எப்படி விலகி இருப்பரோ, அதேபோல, நதி பெண்களும் தங்களை யாரும் தொடுவதை விரும்புவதில்லை. கோவில் அபிஷேகம், பிதுர் தர்ப்பணத்துக்கு கூட, இந்த நாட்களில் நதிகளில் தண்ணீர் எடுக்காமல், நம் முன்னோர் கட்டுப்பாட்டுடன் இருந்துள்ளனர். காலம் செல்ல செல்ல, இந்த வழக்கம் மறந்தே விட்டது.
நதிகளுக்கு மட்டுமல்ல, பெண் தெய்வங்களில் பார்வதி தேவிக்கும் விலக்கு நாட்கள் உண்டு. இதை சில கோவில்களில் விழாவாகவே எடுக்கின்றனர்.
அசாம் மாநிலத்தின், கவுகாத்தியிலுள்ள காமாக்யா அம்மன் கோவிலில், ஆண்டில் ஒருமுறை அம்பாளின் மாத விலக்கு நாட்களை, 'அம்புபாச்சி மேளா' என்ற பெயரில் விழாவாக எடுக்கின்றனர்.
'அம்புபாச்சி' என்றால், தண்ணீருடன் பேசுவது என பொருள். போதுமான மழை வேண்டி, இவ்விழாவை எடுக்கின்றனர். அம்பாளின் ஓய்வு காலத்தில், இதை கேட்டால், நிச்சயமாக இந்த வேண்டுதல் நிறைவேறுவதாக நம்புகின்றனர், பக்தர்கள்.
இந்த விழா நடக்கும் நான்கு நாட்கள், கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்பது, குறிப்பிடத்தக்கது. இந்த விழாவுக்கென முன்கூட்டியே, நாள் குறிக்கப்பட மாட்டாது. அம்பாளின் மாதவிடாய் காலம் மாறுபடும். பொதுவாக ஆனி, ஆடி மாதங்களில் இவ்விழா நடத்தப்படும்.
இதுபோல, கேரள மாநிலம், செங்கன்னுார் மகாதேவர் கோவிலிலுள்ள பகவதி அம்மனுக்கும் மாதவிடாய் காலத்தில், அம்பாள் சன்னிதி, நான்கு நாட்கள் அடைக்கப்படும். பின், அம்பாள் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, நதியில் நீராட்டுவர்.
இந்த நிகழ்ச்சிக்கு, 'திரிபுத் ஆராட்டு' என பெயர். இதற்கென நாள் குறிக்கப்படாது. எப்போது அம்பாளுக்கு மாதவிலக்கு வருகிறதோ, அதைப் பொறுத்து ஆராட்டு விழா நடக்கும்.
இவ்வாண்டு சர்வநதி ரஜஸ்வலை, ஆடி மாத பிறப்புக்கு முந்தைய நாளே துவங்குவதாக பஞ்சாங்கத்தில் உள்ளது. எனவே, ஜூலை 16 முதல் 18 வரை, நதிகளில் குளிப்பதை தவிர்த்து விடுங்கள்.
தி. செல்லப்பா