
விளம்பரமில்லா உதவிகள்!
எ ங்கள் பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலதிபருக்கு, திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகியும், குழந்தைப் பேறு இல்லை. இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என, கைவிரித்து விட்டனர், மருத்துவர்கள்.
உறவினர்களும், நண்பர்களும், உறவினர் குழந்தையையோ அல்லது ஆதரவற்ற குழந்தையையோ தத்தெடுத்து வளர்க்குமாறு, ஆலோசனை வழங்கினர். ஆனால், அவர், 'அது ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு மட்டுமே பயனளிக்கும்...' என, மறுத்து விட்டார்.
அதற்கு பதிலாக, ஏழ்மையில் வாடும் உறவினர்களுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் பணியைத் தொடர்ந்தார்.
அதோடு, சமீப காலமாக, எங்கள் பகுதியில் மிகவும் ஏழ்மையில் வாழும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோருக்கு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை, விளம்பரமின்றி வழங்குகிறார்.
தனக்கு குழந்தை இல்லையென வருந்தாமல், மற்றவர்களுக்கு தந்தையாக, உறவாக இருந்து உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்.
அவரது இந்த மனிதநேயப் பணி, அனைவராலும் பாராட்டப்படுகிறது. இவரைப் போன்றவர்கள், சமூகத்திற்கு ஒளி ஏற்றும் வழிகாட்டிகள் எனக் கூறலாம்.
- வி.ஆதித்த நிமலன், கடலுார்.
காரை, சர்வீசுக்கு விடப்போகிறீர்களா?
சர்வீஸ் விடப்பட்டிருந்த, என் நண்பரின் காரை எடுக்க சென்றோம். நண்பர் காரை சுற்றிப் பார்த்து விட்டு, சர்வீஸ் சென்டர் ஓனரிடம் கடுமையாக பேசினார்.
ஓனர், கடை பையனிடம் சத்தம் போட்டதும், ஒரு சக்கரத்தை எடுத்து வந்தான், அந்த பையன். அதில் இருந்த நம்பர் குறியீட்டை பார்த்த என் நண்பர், கடுமையாக எச்சரித்து, அதை தன் காரில் பொருத்த சொன்னார்.
விசாரித்ததில், பகீர் தகவல் தெரிய வந்தது. அதாவது, சர்வீசுக்கு விடும் இடத்தில், சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒரே மாதிரி மாடல் கார்களில் இருக்கும் நல்ல சக்கரத்தின், 'ரிம்'மை கழட்டி, தேவையானவர் காரில் மாற்றி விடுகின்றனர்.
சர்வீஸ் விடும் நபர்கள், சக்கரத்தின் இந்த மாற்றத்தை அறிய மாட்டார்கள். இதை அறிந்த நண்பர், தன் கார் சக்கரத்தில், 'ரிம்'மின் உட்புறம் பெயின்ட்டால் நம்பர் குறியீடு போட்டு வைத்திருந்தார். அதை மீண்டும், 'செக்' செய்யும் போது சக்கரம் மாற்றப்பட்டிருப்பதை கண்டுபிடித்து விட்டார்.
கார் சர்வீஸ் விடும் போது, இப்படி கவனமாக இருந்தால், சக்கரம் தப்பிக்கும்.
- கி.ரவிக்குமார், துாத்துக்குடி.
இப்படியும் செய்யுங்களேன்!
பொள்ளாச்சியில் வசித்து வரும் நண்பர் ஒருவர், கோவையில் வீடு கட்ட இடம் தேடினார்.
அதன்படி பழைய வீட்டுடன் கூடிய இடம் ஒன்று கிடைத்தது. அதை வாங்கி, பழைய வீட்டை இடித்து, புதிதாக வீடு கட்ட துவங்கினார்.
ஒருநாள், அவரது வீட்டை பார்க்க அவருடன் சென்றேன். அப்போது, அந்த தெருவாசிகள், நண்பரை பார்த்து தலையசைக்கவும், சிரிக்கவும், கையை காட்டுவதுமாக இருந்தனர்.
நண்பரிடம், 'இதற்கு முன், இந்த தெருவில் உங்களை யாருக்கும் தெரியாதே. அதற்குள் இவ்வளவு நபர்கள் உங்களிடம் அறிமுகமாகியுள்ளனரே...' என்றேன்.
அதற்கு, 'இங்கு வீடு கட்ட ஆரம்பித்த போது, பழைய வீடு இடித்த கல், மண் போன்றவைகளை சாலையில் குண்டும், குழியுமாக இருந்த இடத்தில் கொட்டி, அதை சமன் செய்து, வாகன போக்குவரத்திற்கு ஏற்றபடி மாற்றினேன்.
'மேலும், வீட்டில் இருந்த பழைய ஜன்னல், நிலை கதவு, செங்கல் என, பல பொருட்களை கேட்பவர்களுக்கு இலவசமாக தந்தேன். இதனால், இங்குள்ளவர்கள் என்னிடம் நன்கு பேசி, பழகி விட்டனர்.
'இது சின்ன விஷயமானாலும், இப்படி புதிய நபர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றுத்தரும் என, நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை...' எனக் கூறி, பெருமிதம் கொண்டார்.
அதை கேட்டு வியந்து போனேன், நான்.
புதிய இடங்களில் வீடு கட்டுபவர்கள், அந்த தெருவாசிகளுக்கும், தெருவிற்கும் பயனுள்ள விதமாக, எதையாவது செய்து, அந்த தெருவாசிகள் அன்பையும், ஆதரவையும் பெற்றால், நமக்கு பலவிதத்தில் உதவுமே!
— பி.என்.பத்மநாபன், கோவை.

