
ஆக., 3 - ஆடிப்பெருக்கு
நட்சத்திரம், திதி பார்த்து விழாக்கள் கொண்டாடப்படுவது தான் வாடிக்கை. ஆனால், தேதியின் அடிப்படையில் நடக்கும் ஒரே விழா என்றால், அது ஆடிப்பெருக்கு தான். ஆடி மாதம் 18ம் தேதி, இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்பவர்கள் பெரும்பாலும் புதுமணத் தம்பதியர் தான். தங்கள் தாலி பாக்கியத்திற்காக அவர்கள், இதை கொண்டாடுகின்றனர்.
சுமங்கலியாக இருந்தால் தான், கழுத்தில் தாலி தொங்கும். விதவிதமான நகைகளை அணிய முடியும். அலங்காரம் செய்ய முடியும் என, நினைக்கக் கூடாது.
கணவனின் நலன் மட்டுமே, தன் உயிர் மூச்சு என, ஒரு மனைவி எண்ணுவதே, உண்மையான சுமங்கலித்துவம். அது எப்படி என்பதை, ஒரு புராணக்கதை விவரிக்கிறது.
அந்த காலத்தில் பெண்கள், தங்கள் கணவனை எந்தளவுக்கு பேணி இருக்கின்றனர் என்பதை, இந்த கதை எடுத்துச் சொல்கிறது. உள்ளத்தை நெய்யாய் உருக வைக்கும் கதை இது.
வேலைக்கு போயிருந்தார், கணவர். கடும் வெயிலில் பணி செய்தார். களைத்துப் போய் வீடு வந்தார். தாகத்துக்கு எந்த ஒரு பானமும் குடிக்கவில்லை. ஏன் கை, கால் கூட அலம்பவில்லை. வந்தவர், மனைவியை அழைத்தார். அவளது அழகான முகத்தைப் பார்த்தார். அருகே அமர்ந்தார். அவளது மடியில் படுத்தார். அப்படியே அயர்ந்து துாங்கி விட்டார்.
தன் கணவன் துாங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள், மனைவி. சற்று அசைந்தாலும், அவர் எழுந்து விடுவாரோ என, மனதுக்குள் பயம்.
அப்போது, தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தது, அவர்களது குழந்தை. சற்று தள்ளியிருந்த அடுப்பில், நெருப்பு எரிந்து, தணல் மட்டும் கிடந்தது. அடுப்பை நோக்கி போனது, குழந்தை.
'ஏ குழந்தே! போகாதே...' என, சொன்னால் கூட, அந்த சப்தத்தில் கணவர் எழுந்து விடுவாரோ என, அவள் அமைதியாக இருந்தாள். இதற்குள் குழந்தை, நெருப்பருகே போய் விட்டது.
மனது பதைபதைத்தது. அவள் கண்களை மூடினாள். கை கூப்பினாள்.
'ஏ அக்னி பகவானே! நான், என் கணவரின் துாக்கம் கலைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, ஒரு பத்தினி கடைபிடிக்க வேண்டிய தர்மம். 'இந்த தர்மம் பொய்யானது, குழந்தையைக் காப்பாற்றும் பகுத்தறிவையும், நான் உனக்கு தந்திருக்கிறேனே...' என, என்னிடம் வசனமெல்லாம் நீ, பேசக் கூடாது.
'பதிவிரதா தர்மம் உயர்ந்ததா? உன் சுடும் சக்தி பெரியதா என்ற போட்டி துவங்கி விட்டது. நான் செய்வது சரியென்றால், என் குழந்தையை நீ சுடக் கூடாது...' என்றாள்.
நடுங்கி விட்டார், அக்னி பகவான்.
'இவளது பதிபக்தி எனும் வெப்பத்தின் முன்னால், என் வெப்பம் மிக சாதாரணமாகி விட்டதே...' என, எண்ணியவர், அப்படியே குளிர்ந்து விட்டார். குழந்தை தணலை எடுத்தது, உடம்பில் போட்டது. ஆனால் அது, பூப்போல குளிர்ந்து இருந்தது.
இந்த கலியுகத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை தான். ஆனால், கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும், அன்பு எனும் அழகு மலர்களை துாவிக் கொள்ளலாமே! அதற்கென்ன தடை!
என்ன கணவன்மார்களே... உங்கள் மனைவியை இனி, மாண்புமிகு மனைவியாக நடத்துவீர்களா?
தி. செல்லப்பா

