
மொபைல் போனை பாதுகாப்பாக கையாளுங்கள்!
சமீபத்தில், என் வீட்டிற்கு வந்திருந்த, 'சைபர் க்ரைம்' பிரிவு அதிகாரியான உறவினருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, விழிப்புணர்வு தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அது...
'பொது இடங்களில் உள்ள, 'சார்ஜிங் ஸ்டேஷன்'களில், மொபைல் போனை, 'சார்ஜ்' செய்தால், 'ஜூஸ் ஜாக்கிங்' மூலம் ஹேக்கர்கள், 'ஸ்பைவேர்' என்ற கருவியை பொருத்தி, நம் வங்கி விபரங்கள், கடவுச் சொற்கள் மற்றும் புகைப்படங்களை திருடுகின்றனர்.
'சில அலுவலகங்களில் மொபைல்போனை வரவேற்பறையில் ஒப்படைக்கும் போது, மோசடி மென்பொருள் பொருத்தப்பட்டு, அழைப்புகள், செய்திகள் கண்காணிக்கப்படலாம். இது, தனிப்பட்ட மற்றும் பணி ரகசியங்களை ஆபத்தில் ஆழ்த்தும்.
'இதைத் தவிர்க்க, சொந்த, 'சார்ஜர்' அல்லது 'பவர் பேங்'கை பயன்படுத்த வேண்டும். பணியிடங்களில் மொபைலை ஒப்படைப்பதற்கு முன், கடவுச்சொல் பாதுகாப்பு, இரு கட்ட அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும். அறியப்படாத, 'ஆப்ஸ்' நிறுவப்படுவதை தடுக்க போனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். பொது, 'வை-பை' மற்றும் 'புளூடூத்' இணைப்புகளை தவிர்க்க வேண்டும்.
'மொபைல், 'ஆப்ஸ்' அனுமதிகளை, அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது. சந்தேகப்படும் போது, 'சைபர் க்ரைம்' உதவி எண், 1930ஐ அழைக்கலாம். உஷாராக இருந்தால், இந்த வில்லங்கங்களில் இருந்து தப்பிக்கலாம்...' என்றார்.
வாசகர்களே... பயணங்களிலோ, அலுவலகங்களிலோ, மொபைல் போனை பாதுகாப்பாக கையாளுங்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களையும், உங்கள் தகவல்களையும் காக்கும்.
— மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
புதுமையான முயற்சி!
சமீபத்தில், என் நண்பன் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்று நண்பனின் அப்பாவுக்கு சிரார்த்தம். முறைப்படி புரோகிதரை அழைத்து, ஹோமம் வளர்த்து, சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தான்.
புரோகிதர் மந்திரங்கள் கூறும்போது, மூதாதையர், பரம்பரை பெயர்கள் மற்றும் கோத்திரங்களையும் கேட்ட போது, முன்னோர்கள் பெயரை எழுதியிருந்த கார்டை கொடுத்தான், நண்பன்.
'லேமினேஷன் கார்டில்' ஒருபக்கம், தந்தை வழி முன்னோர்கள் பெயர் மற்றும் கோத்திரமும்; மறுபுறம், தாய் வழி முன்னோர்கள் பெயர், கோத்திரம் பெரிய எழுத்தில் எழுதியிருந்தது. புரோகிதரும் தவறில்லாமல் தடுமாற்றமில்லாமல், அதிலிருந்ததை படித்து, மந்திரம் சொன்னார்.
'நம்மிடம் புரோகிதர் கேட்கும் போது, சரியாக சொல்ல தெரியாமல் திணறுவோம். அதனால் தான் இந்த, 'லேமினேஷன் கார்டை' தயார் செய்தேன்...' என்றான், நண்பன்.
'இது நல்ல ஐடியா...' எனக் கூறி, நண்பனை பாராட்டினேன்.
வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக நானும், முன்னோர்கள் பெயரையும், கோத்திரத்தையும், 'கார்டில்' தயார் செய்து விட்டேன். என் வீட்டு விசேஷத்திலும் மிகவும் உதவியாக உள்ளது. 'லேமினேஷன் கார்டை' பத்திரமாக வைத்துள்ளேன்.
நீங்களும் இப்படி தயார் செய்யலாமே!
— ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
உறவுகளை வெறுக்க வேண்டாமே!
விவாகரத்தான உறவுக்கார பெண் ஒருவரை சமீபத்தில், வணிக வளாகம் ஒன்றில் சந்தித்தேன். தன் முன்னாள் மாமியாருடன், வணிக வளாகத்திற்கு வந்திருந்தார், அந்த பெண்.
மறுநாள் அவளை, மொபைல் போனில் அழைத்து, 'உன் முன்னாள் மாமியாருடன் உனக்கு என்ன வேலை?' என, கேட்டேன்.
அதற்கு, 'என் கணவரை தான் விவாகரத்து செய்துள்ளேன். என் மாமியாரை அல்ல. நான், கணவர் வீட்டில் இருந்த காலத்தில், என்னை, தன் மகள் போல கவனித்து கொண்டார், மாமியார். கணவரோடு தான் எனக்கு கருத்து வேறுபாடு; மாமியாருடன் இல்லை.
'என் மாமியாருடன் மட்டுமல்ல, என் நாத்தனார்களுடனும் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு உதவி என்றால், ஓடோடி போய் நிற்பேன். அதேபோல், அவர்கள் அனைவரும் உடனே வந்து விடுவர்.
'கணவரை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களுடைய உறவுக்காரர்களை வெறுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...' என்றாள்.
உறவுகளை பேணுவதில், அந்த பெண்ணின் வித்தியாசமான அணுகுமுறையும், அவளின் முன்னாள் கணவன் வீட்டாரின் நல்ல மனதும் என்னை நெகிழ வைத்தது.
— கே. கற்பகம், சென்னை.

