/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (15)
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (15)
PUBLISHED ON : ஆக 31, 2025

500 ரூபாயில் சிவாஜியின் கல்யாணம்!
ச னிக்கிழமை பிற்பகல், என் வீட்டுக்கு அருகிலிருந்த கடற்கரை பற்றி குறிப்பிட்டு, அங்கு போகலாமா என, சிவாஜியிடம் கேட்டேன்.
யோசிக்கவே இல்லை, சிவாஜி.
'என்ன டாக்டர், போகலாமான்னு கேக்குறீங்க. வாங்க போகலாம், கிளம்புங்கன்னு தானே நீங்க சொல்லி இருக்கணும்...' என, அமர்ந்திருந்தவர் எழுந்து, கடற்கரைக்கு புறப்பட்டு விட்டார்.
நாங்கள் இருவரும் கடற்கரைக்கு போய், சிறிது நேரம் காலாற நடந்தோம். அமெரிக்காவில் சனிக்கிழமை மாலை என்பது, கொண்டாட்டமான நேரம். அந்த நேரத்தில் நாங்கள், கடற்கரையில் இருந்தோம்.
அமெரிக்க மக்கள், தங்கள் வார இறுதி நாட்களை எப்படி ஜாலியாக கடற்கரையில் செலவிடுகின்றனர் என்பதை பார்த்து ரசித்து விட்டுத் திரும்பினோம். அந்த, 'பீச் விசிட்' சிவாஜிக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
சிவாஜியை எங்காவது அழைத்து சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினால், அன்று நடந்தவை குறித்து பேசுவார். அவரது கருத்துக்களை சொல்வார். அன்றும் அப்படி தான்.
வீடு திரும்பியதும், 'டாக்டர்! அந்த, 'பீச்'சுல எல்லாரும் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்தோம். ஒண்ணை கவனிச்சீங்களா? அங்கே ஆணோ, பெண்ணோ, குழந்தைகளோ, சின்னவங்களோ, பெரியவங்களோ ஒவ்வொருத்தரும் சந்தோஷத்தை, தங்கள் முகத்துல ஒவ்வொரு விதமா வெளிப்படுத்தினாங்க பார்த்தீங்களா? சந்தோஷம் ஒன்று தான்; ஆனா, ஒவ்வொரு முகத்திலும் அது வித்தியாசமா வெளிப்பட்டுச்சு...' என்றார்.
சிவாஜியின் கூர்மையான கவனிப்பு, என்னை ஆச்சர்யமடைய செய்தது. கடற்கரையில் ஒவ்வொருவரின் முக பாவத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். அதனால் தான் அவர், நடிகர் திலகமாக இருக்கிறார்.
எ ன் வீட்டில் சிவாஜி குடும்பத்தினர் தங்கி இருந்த போது, சில சமயம் அவருக்கு தெரிந்தவர்கள் யாராவது, சிவாஜியைப் பார்க்க வருவது உண்டு. அவர்கள் சிவாஜியிடம், 'எல்லாம் சவுகரியமாக இருக்கா?' என, சம்பிரதாயத்துக்காக அவரை கேட்பர்.
அவர் உடனே, 'நான் ஒரு வெள்ளை யானை மாதிரி! என்னை வெச்சு பார்த்துக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். நான் எங்கே போனாலும், என் கூடவே ஒரு சின்ன படையை அழைச்சிக்கிட்டு போவேன். எங்க எல்லாரையும் எல்லாராலும் சமாளிக்க முடியாது!
'ஆனால், நம்ம டாக்டர் விதிவிலக்கு. அவர் வீட்டுல இடம், வேலைக்கு ஆட்கள், இதர வசதிகள்னு ஒண்ணுக்கும் குறைவில்லை. அவர் வீட்ல ரொம்ப சவுகரியமா எங்க எல்லாரையும் தங்கவெச்சு, பாசத்தைப் பொழிஞ்சிடுவாங்க! அவங்க பாரம்பரியம் அப்படி! அவர் வீடு மாதிரியே, டாக்டர் மனசும் ரொம்பப் பெருசு...' என, உள்ளார்ந்த அன்போடு வாய் நிறைய பாராட்டுவார்.
எ ன் சிறு வயதில், சென்னையில், சிவாஜி நடித்த, 'வியட்னாம் வீடு' நாடகத்தைப் பார்க்க, நான் போனது குறித்து, இந்த தொடரின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன்.
சிறு வயது முதலே நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால், சினிமாவில் மிகவும், 'பிசி'யாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலும் கூட, அவர் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை.
'சினிமா என்ற மீடியத்தின் வீச்சு பிரமாண்டமானது. அதில் கிடைக்கிற பணம், புகழ் எல்லாம் அதிகம். ஆனாலும், சினிமாவில், 'பிசி'யாக இருந்த போதும், நீங்கள் நாடகங்களில் நடிச்சீங்க, என்ன காரணம்?' என, ஒருமுறை சிவாஜியிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில்...
'சினிமாவில் ஒரு காட்சியில் நடிக்கிறோம். அதில் ஒரு காட்சியில் நம் நடிப்பு ரொம்ப நல்லா இருந்தால், தியேட்டரில் படம் வெளியாகும் போது தான், ரசிகர்கள் பார்க்க முடியும். அவன் அப்போது தான் கைத்தட்டி, ஆரவாரம் பண்ணுவான்.
'தியேட்டரில் அவன் ரசித்து கைதட்டுவதை நம்மால் நேரடியாக பார்க்க முடியாது. ஆனால், நாடகத்தில் அப்படி இல்லை. அந்த காட்சியில் நடிச்சிக்கிட்டு இருக்கும் போதே கைத்தட்டுவாங்க. 'ஆன் தி ஸ்பாட்' ரசிகர்களோட பாராட்டை, நாம் நேரடியா பார்க்கலாம். உடனடியா பார்க்கலாம். அப்போ நம்ம மனசுக்குக் கிடைக்கிற சந்தோஷமே தனிதான்...' என, நாடக நடிப்பில் கிடைக்கும் உடனடி பாராட்டை குறிப்பிட்டார்.
'நான் சிறு வயதிலேயே நாடக கம்பெனிக்குப் போனவன். மேடையில் நடிக்கிற போதே ரசிகர்களின், 'ரியாக்ஷனை' நேரடியா பார்த்துப் பழகினவன். அந்த சந்தோஷம், நாடகத்துல மட்டும் தான் கிடைக்கும். தியேட்டர்ல கிடைக்காது. அந்த விட்ட குறை தொட்ட குறை தான், என்னை நாடக மேடை பக்கம் இழுக்குது...' எனச் சொல்லி நிறுத்தியவர், தொடர்ந்தார்...
'அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருக்கு. நாட்டுல நிறைய நாடக நடிகர்கள் இருக்காங்க. ஆனா, அவங்களுக்கெல்லாம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. சிவாஜி நாடக மன்றம் மூலமாக நாடகம் நடத்துவதால், அந்த நாடக நடிகர்களில் சிலருக்கு மேடையில் நடிக்க வாய்ப்பு கிடைக்குது. பணம் கிடைக்குது. அதனால சில குடும்பங்கள் பிழைக்குது...' என, மனம் திறந்து சொன்னார்.
'வியட்னாம் வீடு' மற்றும் 'தங்கப் பதக்கம்' போன்ற சிவாஜி நடித்த நாடகங்கள், சினிமாவாக வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் கூட, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அந்த நாடகங்கள் நடத்தப்பட்டன. அதில், சிவாஜியும் நடித்தார். சிவாஜி நடித்ததற்கு என்ன காரணம் என்பதை, இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சி வாஜியும், நானும் ஒருநாள் எங்கள் வீட்டு தியேட்டரில் ஜாலியாக ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, என் அம்மாவும், தங்கை கிருஷ்ணாவும், கமலா அம்மாவுடன் உட்கார்ந்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கிருஷ்ணா, சிவாஜி - கமலா அம்மா கல்யாணம் பற்றிக் கேட்டதும், கமலா அம்மா முகத்தில் வெட்கம்.
வெட்கப் புன்னகையுடன் கல்யாண கதையை சொன்னார்...
'கடந்த, 1952ல், பராசக்தி பட வேலைகள் நடந்துக்கிட்டு இருந்தது. அதே வருஷம் தான், எங்க கல்யாணம். மாமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு செஞ்சதும், சொந்தத்திலேயே என்னை முடிவு பண்ணிட்டாங்க.
'மே மாதம், 1ம் தேதி, சுவாமிமலையில் தான் கல்யாணம். பராசக்தி படம் மூலமாக மாமாவின் வாழ்க்கையில் விளக்கேற்றி வெச்ச பெருமாள் முதலியார், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், என்.எஸ்.கே., அவர் மனைவி டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், பராசக்தி பட டைரக்டர்கள் கிருஷ்ணன் - -பஞ்சு எல்லாரும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க.
'தமிழ் வாத்தியார் ஒருத்தர், திருக்குறள் படிச்சார். மாலை மாத்திக்கிட்டோம். அப்புறம் மாமா எனக்கு தாலி கட்டினாரு. ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வரவழைத்து, எல்லாருக்கும் விருந்து வைத்தோம். கல்யாணத்துக்கு மொத்த செலவே, 500 ரூபாய் தான்...' என்றார், கமலா அம்மா.
'என்ன, 500 ரூபாய் தானா?' என, ஆர்வமாய் என் அம்மா கேட்க, கமலாம்மா கல்யாண கதையை தொடர்ந்தார்...
'ஆமாம். அவ்வளவு தான் ஆச்சு. கல்யாணம் முடிந்ததும் அன்னைக்கே நாங்க சென்னை வந்தோம். கோடம்பக்கத்துல ஒரு வீடு பார்த்து வெச்சிருந்தாரு, மாமா. அங்க தான் எங்க வாழ்க்கை தொடங்கிச்சு. எங்க தலை தீபாவளி அன்னைக்கு, பராசக்தி படம் வெளியானது. அவரும், 'பிசி' ஆன நடிகர் ஆகிட்டாரு...' என, முடித்தார், கமலா அம்மா.
அ மெரிக்காவில் எங்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு பெண்மணி இருந்தார். சிவாஜி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டால் போதும், அவரை அக்கறையோடு கவனித்துக் கொள்வார், அந்த பெண்மணி.
அவருக்கு, டோரிஸ்டே என, செல்லப் பெயர் சூட்டினார், சிவாஜி. டோரிஸ்டே என்பது, ஒரு பிரபல ஹாலிவுட் நட்சத்திரத்தின் பெயர்.
சிவாஜி ஏன் அந்தப் பெயரை அவருக்கு வைத்தார்?
ஒரு வாரம் பொறுத்திருங்கள். சொல்கிறேன்.
— தொடரும்
எஸ். சந்திரமவுலி