தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 31, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

சென்னை கடற்கரைக்கு, நீலக் கொடி அந்தஸ்து பெற வேண்டி, ஆங்காங்கு குடைகள் உட்பட, பல அலங்கார வசதிகள் ஏற்படுத்தி, அழகுப்படுத்தி இருந்ததை அறிந்து, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். மக்கள் சந்தோஷமாக, அக்குடைகளின் கீழும், சங்கு வடிவ இருக்கையில் அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். சுற்றிப் பார்த்த பின், விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரில் இருந்த கல் இருக்கையில் வந்து அமர்ந்தோம். நெருப்பில் சுட்ட சோளக்கதிரை வாங்கி வந்து, 'மொச்சு, மொச்சு' என கொறித்தபடி, மொபைல் போனில் எதையோ பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார், மாமா. எங்களுக்கு அருகில் இருவர், எதைப் பற்றியோ சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர். சைக்கிள் என்ற வார்த்தை அடிக்கடி இடம்பெற கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் பேசியதன் சுருக்கம் இதோ: ஒரு காலத்தில், வீட்டில் சைக்கிள் இருந்தாலே கவுரவமாக பார்க்கப்பட்டது. அதிலும், பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் பசங்க வந்தால், அவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள் என, சொல்வர்.

இப்போது லோன் கிடைக்கிறது என்பதற்காக கார் வாங்கிவிட்டு, பிறகு தான் ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், அப்போது சைக்கிள் ஓட்டத் தெரியாமல், சைக்கிள் வாங்கித் தரமாட்டார்கள், அப்பாக்கள். 'முதல்ல சைக்கிள் ஓட்டக் கத்துக்கோ... அப்புறம் பார்க்கலாம்...' என, பதில் வரும்.

சைக்கிளே இல்லாமல், எப்படி ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வது?

அதற்கு தான் வாடகை சைக்கிள் கடைகள் இருந்தன. இப்போதும் உலக அதிசயமாக ஏதோவொரு ஊரில் இருக்கின்றன. ஒருமணி நேரத்துக்கு அப்போதெல்லாம், 20 பைசா என்றிருக்கும். அதிலும், சின்ன சைக்கிள் கூட உண்டு.

கேரியர் வைத்த சைக்கிள், கேரியர் இல்லாத சைக்கிள், டைனமோ வைத்த சைக்கிள் என, வாடகைக்கு விடுவர். 'நோட்டுல பேரும், நேரமும் எழுதிட்டு எடுத்துட்டுப் போ...' என, விசிறியால் விசிறியபடி, தாத்தாவோ, பாட்டியம்மாவோ சொல்வர்.

உடனே, வாடகை சைக்கிள் எடுக்க வந்த சின்னப்பசங்க முதல் பெரியவர்கள் பலரும், 10:20 மணிக்கு சைக்கிள் எடுத்தால், 10:30 என்று எழுதுவர். அந்த, 10 நிமிஷம் இன்னும் கொஞ்சம் ஓட்டலாமே என்ற ஆசையின் வெளிப்பாடு தான்.

வாடகை சைக்கிள் எடுப்பவர்கள், நியூமராலஜிப்படி, குறிப்பிட்ட எண் கொண்ட சைக்கிள் வரும் வரைக்கும் காத்திருப்பர்.

'ஏழாம் நம்பர் வண்டி வெளியே போயிருக்குப்பா...' என, சொன்னால், அந்த சைக்கிள் வரும் வரைக்கும் காத்திருப்பர்.

இன்னும் சில காமெடிகளும் நடக்கும்.

சைக்கிளை எடுத்துக் கொண்டு, தெரிந்தவரிடம் அல்லது உறவினரிடம் பணம் கேட்கச் செல்வர். பணம் கிடைக்காத நிலையில், சைக்கிளை மீண்டும் ஒப்படைக்கவும் பணமிருக்காது. அதற்காக, நான்கைந்து நாட்கள் சைக்கிளை வைத்துக் கொண்டு சுற்றுபவர்களும் உண்டு. பிறகு பணம் வந்ததும் சைக்கிளை ஒப்படைப்பர்.

செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்கி விட்டாலே, பசங்களுக்கு தலைகால் புரியாது. அந்த வண்டியை துடைப்பது என்ன, தேங்காய் எண்ணெய் தொட்டு பாலீஷ் போடுவதென்ன, உப்புத்தாள் கொண்டு, வீல்கள் இரண்டையும் தேய்த்து பளிச்சென்று ஆக்குவதென்ன, என, எப்போதும் சைக்கிள் பற்றிய நினைவுகளுடனேயே இருப்பர்.

கடந்த, 80களில், 'ராலே' சைக்கிள் தான் கதாநாயகன். 'ராலே' சைக்கிள், கமல் என்றால், 'ஹெர்குலிஸ்' சைக்கிள், ரஜினி.

நடுவே, விஜயகாந்த், சத்யராஜ், மோகன், மாதிரி, 'அட்லஸ், ஹீரோ' என்றெல்லாம் சைக்கிள் பிராண்டுகள் இருந்தன.

'ராபின்ஹூட்' என்றொரு சைக்கிள். அதன், ஹேண்டில்பாரில் இருந்து சீட் வரை உள்ள துாரம், கம்பீரம் காட்டும். 10 முறை பெடல் செய்தாலே, 1 கி.மீ., துாரத்தை சுலபமாக தொடலாம் என, அந்த சைக்கிள் வைத்திருப்பவர்கள் பந்தா காட்டுவர்.

ஆனால், அந்த சைக்கிள் பாண்டிச்சேரியில் தான் கிடைக்கும் என, சொல்லிச் சொல்லி அலட்டிக் கொள்வர்.

டைனமோ இல்லையெனில், போலீஸ் பிடித்த காலமும் உண்டு. அபராதம் கட்ட வேண்டும். அதேபோல், சைக்கிள் செயின் அடிக்கடி கழன்று கொள்ளும் போது, அதை மாட்டுவதற்கு தனி பயிற்சி வேண்டும். ஒரு வழியாக மாட்டி முடித்ததும் பார்த்தால், கையெல்லாம் மையாகியிருக்கும்.

சைக்கிள் மருத்துவத்துக்கு, 'ஓவராயிலிங்' என, பெயர்.

சைக்கிள் பாகங்களை, அக்குவேறு ஆணி வேறு என, கழற்றி, ஆயிலில் ஊறப் போட்டு, அதைத் தேய்த்து, சுத்தம் செய்து, திரும்பவும் பொருத்தி, ஹேண்டில் பார் கைப்பிடி, சீட்டுக்கு முன்னே இருக்கும் பார் பகுதிக்கு ஒரு கவர், சீட்டுக்கு குஷன் கவர், இரண்டு வீல்களுக்கும் நடுவே கலர்கலராய் வளையம் என, சைக்கிளுக்கு அழகுப்படுத்துவது ஒரு கலை.

இன்னும் சிலர், சின்ன சின்ன மணிகளை, 'வீல் ஸ்போக்ஸ்' கம்பிகளுக்குள் வரிசையாக கோர்த்து விடுவர். டைனமோவுக்கு மஞ்சள் துண்டு அல்லது மெத்மெத்தென்று ஒரு கவர் மாட்டுவர்.

அப்போது சைக்கிளில் சிட்டாகப் பறந்து, எட்டெல்லாம் போட்டு, கெத்துக் காட்டுவோம். சைக்கிளில் இரண்டு பக்கமும், 'பெல்' வைத்து வித்தியாச ஒலி எழுப்புவர்.

மாற்றங்கள், வேகங்கள். சைக்கிளின் மதிப்பும், மரியாதையும், 'டூ-வீலர்'களால் குறைந்து விட்டன.

'என்னடா மாப்ளே, இன்னமும் சைக்கிளை ஓட்டிக்கிட்டிருக்கே. சைக்கிள் வாங்கும் பணத்தில், செகண்ட் ஹேண்ட்ல, எக்ஸ் எல் சூப்பரே வாங்கிடலாம்...' என்பர்.

அப்பா ஓட்டிய சைக்கிள், முதன் முதலில் வேலைக்கு சென்றபோது வாங்கிய சைக்கிள் என்பதெல்லாம், மியூசியம் போல் வீட்டில் வைக்கப்பட்டு, பிறகு அவற்றுக்கு இடமில்லை என, காயலான் கடைக்கு போடப்பட்டன.

இப்போதெல்லாம் ஒரு வீட்டில், ஆளுக்கொரு, 'டூ-வீலர்' இருக்கிறது.

குழந்தைகளுக்கும், பசங்களுக்கான குட்டியூண்டு சைக்கிள் கூட, பரிதாபமாக காட்சி தருகின்றன.

வாகனத்துக்கும், நமக்குமான பந்தமோ, சென்டிமென்டோ இப்போதெல்லாம் இல்லை.

'ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வண்டியை மாத்திட்டே இருப்பேன். அதான் நமக்கு கையைக் கடிக்காது...' என, தோள் குலுக்கி புத்திசாலித்தனம் காட்டத் துவங்கி விட்டனர்.

காலச் சுழற்சியில், தொப்பையை குறைக்கவும், சர்க்கரை அளவைக் குறைக்கவும் தினமும் சைக்கிளிங் செல்பவர்கள் அதிகரித்து விட்டனர்.

சைக்கிளுக்கும், நமக்குமான பந்தம், பால்யத்தில் இருந்தே, இரண்டறக் கலந்தது. எத்தனை, 'ராயல் என்பீல்டு'களும், 'யமஹா'களும் இருந்தாலும், நமக்கும், நம் உடலுக்கும் எனர்ஜியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கிற சைக்கிளை மறக்க முடியுமா?

- இப்படி ஆதங்கப்பட்டார், ஒரு பெரியவர். எனக்கும் அதே உணர்வு தான். உங்களுக்கு...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us