
கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி: டில்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை, காங்., - எம்.பி., ராகுல் புறக்கணித்து இருக்கிறாரே... யார் சொன்னது?
அவருக்கு அன்று காலை, 11:00 மணிக்கே, தேச பக்தி பிறந்து விட்டது! தன் கட்சி அலுவலகத்தில், அந்த நேரத்தில் கொடி ஏற்றினார். அவரது கட்சியினரும், 'கொட்டும் மழையிலும், ராகுல் கொடி ஏற்றினார்...' என, புளகாங்கிதம் அடைந்தனரே!
* எஸ்.செந்தமிழ்ச்செல்வி, காங்கேயம்: நெல்லையில் ஒரு மாணவி, கவர்னரிடம் பட்டம் வாங்க மறுத்து, துணைவேந்தரிடம் பட்டம் பெற்றுள்ளாரே...
தி.மு.க., பிரமுகரின் மனைவியான, ஜீன் ஜோசப் என்ற அந்த மாணவி, 'டமிலுக்கும், டமில் பீப்பிள்சுக்கும் அகைன்ஸ்டா கவர்னர் ஆக்ட் பண்ணுறாரு...' என, செந்தமிழில் பேட்டி கொடுத்தாரே... கவனித்தீர்களா?
ப.சோமசுந்தரம், சென்னை: 'தளபதி, தளபதி' என, விஜய் ரசிகர்கள் கத்துவதை, 'தலைவிதி, தலைவிதி' எனவும், 'டிவிகே, டிவிகே' என கத்துவதை, 'டீ விக்க, டீ விக்க' எனவும், தனக்கு கேட்பதாக, நாம் தமிழர் கட்சி சீமான் கிண்டலடிக்கிறாரே...
சீமான் பேச்சுக்களை கேட்கக் கூடும் இளைஞர்கள் கூட்டம், இம்முறை விஜய்க்கு ஓட்டு போடச் சென்று விடுவரோ என்ற பயம் ஒருபுறம்; தி.மு.க.,வின் போக்கிலேயே பேசுமாறு அத்தலைமையிடமிருந்து வந்த, 'அன்புக் கட்டளை' என்பது மறுபுறம் என, சீமான் ஜமாய்க்கிறார் போங்க!
வி.ரவீந்திரன், ஈரோடு: முதல்வர் ஸ்டாலின், சமீபகாலமாக தன் வலது கையில், 'சாமி கயிறு' கட்டியுள்ளாரே... பக்தி முற்றி விட்டதோ! ஓ... அது சாமி கயிறா?
நான் கூட, அவரது கட்சியைச் சார்ந்த, பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் போன்று, இந்த கையில் ஒரு ரிஸ்ட் வாட்ச், அந்த கையில் ஒரு ரிஸ்ட் வாட்ச் என, 'டபுள் வாட்ச் டக்ளஸ்' ஆக மாறி விட்டதாக நினைத்து, ஏமாந்து விட்டேன்!
* எஸ்.இந்திராணி, புவனகிரி: 'குற்ற வழக்கில் கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள், சிறை சென்ற 30வது நாளில், பதவி நீக்கம் செய்யப்படுவர்...' என்ற, புதிய சட்டத்திருத்த மசோதா குறித்து...
நம் நாட்டுக்கு, மிக அவசியமான சட்டம் இது; அமலுக்கு வந்தால், மிகச் சிறப்பு. 'இந்த சட்டம் அமலுக்கு வந்தால், நம் பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாதே...' என்ற பீதி, பல அரசியல்வாதிகளுக்கு, இப்போதே வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கி விட்டது; அதனால் வன்மையாக எதிர்க்கத் துவங்கி விட்டனர்!
ரா.ஸ்ரீநிவாசன், பெங்களூரு: தெரு நாய்கள், கர்நாடகாவில் ஜனவரி முதல் தற்போது வரை, 2.86 லட்சம் பேரை கடித்துள்ளன. அரசு இன்னும் அலட்சியமாக உள்ளது. இன்னொரு பக்கம், நாய்களை காக்கத் துடிக்கும் ஆர்வலர்கள், அவற்றுக்காக ஊர்வலம் நடத்துகின்றனரே... உங்கள் கருத்து என்ன அந்துமணியாரே...
முன்னாள் பிரதமர் இந்திராவின் இரண்டாவது மருமகள் மேனகா முதல், நாய்களுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தும் ஆர்வலர்கள் அனைவர் வீடுகளிலும், தலா, 20 தெரு நாய்களை அனுப்பி வைத்து, பராமரிக்கச் சொல்ல வேண்டும்! அப்புறம் தெரியும் சேதி!
என்.ஹேமலதா, உச்சிப்புளி: அந்துமணிக்கு வாசகர்கள் கேள்விகளே அனுப்பாவிட்டால், என்ன செய்வீர்கள்?
எனக்கு கேள்விகளே அனுப்பாமல், உங்களால் இருக்கவும் முடியாது; பதில் சொல்லாமல், என்னாலும் இருக்க முடியாது!
மு.நாகூர் மீரான், ராமநாதபுரம்: 'இந்தியர்கள் உப்பு அதிகம் சாப்பிடுவதால் பக்கவாதம், இதய பாதிப்புகள் ஏற்படும்...' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது குறித்து...
ஆமாம். நம் இந்திய உணவில், உப்பும், காரமும் கொண்ட வகைகளே அதிகம். ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் அதிகம் உபயோகிக்கிறோம். இது, இதய நலனுக்கு உகந்ததல்ல!