
ஊரிலிருந்து வந்திருந்தான், கண்ணன்.
பொண்ணுக்கு கல்யாணம் வைத்திருக்கிறானாம். சீர்காழியில் தான் கல்யாணம்.
'கண்டிப்பா நீ வரணும். பழைய நண்பர்களை எல்லாம் பார்க்கலாம்...' என, பழைய நண்பர்களின் தற்போதைய நிலை தோற்றம், மாற்றம் என, எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி விட்டு போனான்.
சீர்காழி என்றதும், எனக்கு நண்பர்களின் ஞாபகத்தை விட, அந்த ஒலி தான், என் காதுகளில் ஒலிக்கத் துவங்கியது. குதிரைகளின் குளம்பொலி. டக், டக், டக், டக்... கூடவே சலங்கை ஒலியும்.
இரவு உறங்க முடியவில்லை. என் காதுகள் மட்டும், அந்த இரட்டை ஒலி சத்தத்தை கேட்டுக் கொண்டே இருந்தன. என் படுக்கையை சுற்றி, அந்த வெள்ளைக் குதிரை, கழுத்து சலங்கை ஒலிக்க ஒலிக்க ஓடிக் கொண்டே இருந்ததில், வர வேண்டிய உறக்கம், தலைவலியாக மாறிக் கொண்டிருந்தது.
மெல்ல கண்களை உறக்கம் கவ்விய போது, காட்சிகள் கனவாக தெளிவாக தெரிந்தது.
'நான் தான் கம்பிக்கிட்ட உட்காருவேன்...'
'இல்ல நான் தான்...'
எனக்கும், என் தங்கைக்கும் வீட்டு வாசலில் ஒரு ரதம் போல் வந்து நின்ற குதிரை வண்டியும், தேசிங்கு ராஜாவின் குதிரையாய், பிடரி சரிய வெல்வெட்டாய் திமிறிக் கொண்டு நிற்கும் குதிரையும் பெரும் பிரமிப்பாக இருக்கும்.
'இந்தா, நீ கம்பிக்கிட்ட உட்காராதே. கீழே விழுந்திடுவே...' என, தங்கையை அம்மா பயமுறுத்த, அவள் விட்டுக் கொடுத்ததில் நான், கால்களைத் தொங்கப் போட்டு, குதிரை வண்டியின் பின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பயணிப்பேன்.
அடடா என்ன ஆனந்தம்?
இன்றைக்கு இருப்பதைப் போல் ஆட்டோ, கார் என, எதுவும் அன்று இல்லை. குதிரை வண்டி தான்.
அதிலும், எங்கள் தெருவில் வசித்த, கோவிந்தன் மாமாவின் குதிரை வண்டி தான், எங்க குடும்ப வாகனம்.
அந்த இனிய தேவ கீதமான, டக் டக் ஒசை, நாளைடைவில் எனக்குள் ஒரு மரண பீதியை ஏற்படுத்த துவங்கியது. எவ்வளவு பெரிய வேதனை?
அந்த வேதனை எனக்குள் ஏற்படும் என, தெரிந்திருந்தால், நான் அந்த காரியத்தை செய்திருக்க மாட்டேன்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையில் காரைத் தாண்டி நாலு கால் பாய்ச்சலில் ஓடும் குதிரை வண்டியைப் பார்க்கும் போது, வயிற்றில், சொரேர் என்ற உணர்வு ஏற்படும்.
ஓய்வாக உட்கார்ந்து கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் போது, சிறுவர்களை ஏற்றிக் கொண்டு, 'பீச்' மணலில் துள்ளி குதித்து ஓடும் குதிரையைப் பார்க்கும் போது, அப்படியே உயிரை வாங்கியதைப் போல் இருக்கும்.
சீர்காழிக்கு திருமணத்திற்கு அவசியம் போக வேண்டும் என, நான் நினைத்தது, கோவிந்தன் மாமாவை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.
'எப்படி இருப்பார் இப்போது?'
வாட்டசாட்டமாக மீசையை முறுக்கி, தலைப்பாகையை கட்டிக் கொண்டு, அவர் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தால், ராஜகுமாரனைப் போல் தான் இருப்பார். அந்த கம்பீரமும், அழகும் இப்போது இருக்குமா?
கிழவனாகி இருப்பார். அந்த குதிரை வண்டி ஒன்று தானே அவருடைய ஜீவிதம். குதிரை வண்டி வழக்கத்திலிருந்து ஒழிந்து விட்டதே. வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டிருப்பாரோ! அப்படியானால் அந்த குதிரை? விற்றிருப்பாரோ, இறந்திருக்குமோ?
குதிரை இறந்திருக்கலாம். ஆனால், அவருக்கு செய்த துரோகம் இறந்திருக்குமா?
'ச்சை, ஒரு ரெண்டு ரூபாய் பணத்தை, அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பாரா... வைத்துக் கொண்டிருந்தால், அவர் மனதில் என்னைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் இருக்கும். இன்று நான், பேங்க் மேனேஜர். எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லும் நிலை. ஆனால், அவர் மனதில்... ஏமாத்துக்காரன், துரோகி!'
கூனிக் குறுகிப் போனேன்.
ஒருமுறை மாதானம் மாரியம்மன் கோவிலுக்கு போய் விட்டு, பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு, கோவிந்தன் மாமாவின் குதிரை வண்டியில் வந்து கொண்டிருந்தான். உற்சாகமாக, குதுாகலமாக கம்பியைப் பிடித்தபடி பின்னால் அமர்ந்து காலாட்டிக் கொண்டு, டொக் டொக் என, வந்தது, ஒரு இளவரசனுக்குரிய மனநிலையை அனுபவிக்க வைத்தது.
வீடு வந்த பின் கூட, இறங்க மனம் வரவில்லை. மறுநாள் வரை அந்த அனுபவம், மனதில் டொக் டொக்கென ஓடிக் கொண்டிருந்தது. அவருடைய வீட்டைக் கடந்து செல்லும் போதெல்லாம், குதிரை லாயத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த வெள்ளைக் குதிரையை தொட்டுப் பார்க்கும் ஆசை மேலிடும்.
இரண்டு நாள் கழித்து அழைத்தாள், அம்மா.
'கோவிந்தன் மாமா வீட்டுக்குப் போய்ட்டு வாடா...'
'அய்... ஊருக்குப் போறோமாம்மா?'
'ஆமா, உனக்கு பள்ளிக்கூடம் போகவெல்லாம் வேண்டாம். சதா ஊர் சுத்தணும். அன்னைக்கு மாதானம் கோவிலுக்கு போயிட்டு வண்டியில வந்தோம்ல அதுக்கு, கோவிந்தன் மாமாவுக்கு காசு கொடுக்கலை. அப்பறம் தர்றேன்னு சொல்லியிருந்தேன்.
'இந்தா, இந்த ரெண்டு ரூவாயை எடுத்து போயி அவருக்கிட்ட கொடுத்துட்டு வா...' என, என் கையில் இரண்டு ரூபாய் தாளை திணித்தாள், அம்மா.
அப்போதெல்லாம், இரண்டு ரூபாய் என்பது, 200 ரூபாய்க்கு சமம். பாதி துாரம் வரை வெகு நேர்மையானவனாகத்தான் நடந்தேன்.
'இந்த பணத்தை கோவிந்தன் மாமாவிடம் கொடுத்து விட்டதாக பொய் சொல்லி விட்டால், இந்த இரண்டு ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம்?' என, மனம் கணக்குப் போட்டு கற்பனையில் மிதந்தது.
குச்சி ஐஸ், குருவி பிஸ்கட், கமர் கட், பள்ளிக்கூட வாசலில் விற்கும் வெள்ளை முறுக்கு, இலந்த பழம்... கணக்கு கூடிக்கொண்டே போக, அத்தனையையும் அனுபவித்தேன்.
அம்மாவை ஏமாற்றி விட்ட பின், கோவிந்தன் மாமாவை பார்க்கும் போதெல்லாம் ஓடி ஒளிய வேண்டியிருந்தது. இரண்டொரு முறை மாட்டிக் கொண்ட போது, 'டேய்... உங்கம்மா ரெண்டு ரூவா தரணும். வாங்கியா...' என்ற மிரட்டலுக்கு, 'சரி மாமா...' என்ற பதிலோடு சரி.
என்னைக்காவது அம்மாவிடமும், அவரிடமும் வசமாக மாட்டிக் கொள்வோம் என்ற பயத்திற்கும், படபடப்பிற்கும் முடிவு வந்தது.
அப்பாவிற்கு தஞ்சாவூருக்கு மாற்றல் வந்தது. விடு ஜூட். அதன் பின், அந்த ரெண்டு ரூபாய் மறந்தே போனது. ஆனால், உள்ளுக்குள் அது, விஷ விருட்சமாய் வளர்ந்து கொண்டே இருந்தது.
இப்போது, நல்ல வசதியுடன் இருக்கிறேன். ஆனால், எத்தனை தருமம் செய்தாலும் மனசாட்சி உறுத்திக் கொண்டேயிருந்தது. இது, ஒரு நல்ல வாய்ப்பு. திருமணத்தை முடித்துவிட்டு நேராக அவருடைய வீட்டிற்கு சென்று, அந்த பணத்தை கொடுத்துவிட வேண்டும்.
கையிலிருந்த பையை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். கத்தை கத்தையாக பணம். கிட்டதட்ட, 50 ஆயிரம் ரூபாய். அந்த இரண்டு ரூபாய்க்கு வட்டியும் முதலுமாக. கொடுத்துவிட்டால், ஒரு பெரிய நிம்மதி.
திருமணத்தில் கலந்து கொண்டு, விருந்து உண்டுவிட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து, பெரிய கோவில் தெருவிற்கு சென்றேன்.
நான் ஓடி, ஆடிய தெரு. நிறைய மாற்றம் கண்டிருந்தது. எல்லா வீடுகளும் மாடிக் கட்டடங்களாக மாறிவிட்டிருந்தது. அவருடைய வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்த போது, ஒருவர் கைக்காட்டியது ஒரு டீ கடையை.
கடையை நெருங்கிய போது, அது, கோவிந்தன் மாமாவின் வீடு என புரிந்தது. அதே கூரை வீடு. எந்த மாற்றமும் இல்லை. சிறிய மாற்றம், குடிசை வாசல், டீ கடையாக மாறியிருந்தது. வயதான ஒரு பெண்மணி, டீ ஆற்றிக் கொண்டிருந்தார்.
உற்றுப் பார்த்தபோது அது, கோவிந்தன் மாமாவின் மனைவி என்பது புரிந்தது.
அன்றைய காலங்களில், ஒரு ராணிக்குரிய மிதப்போடு அந்த வெள்ளைக் குதிரையை தடவிக் கொடுத்து கொண்டிருப்பார்.
அவ்வளவு அழகாக இருப்பார். இப்போது நரை விழுந்து, எல்லாம் முடிந்து போய்விட்டது என்பதை உணர்த்தியது. கடை சுவரில் மாட்டப்பட்டு ஒற்றை செம்பருத்தியை சுமந்திருந்தது, கோவிந்தன் மாமாவின் புகைப்படம்.
'கடவுளே... போய் சேர்ந்து விட்டாரா?'
''உட்காருங்க தம்பி. டீயா, காபியா?'' அதே கனிவு.
டீக்கு சொல்லிவிட்டு அமர்ந்தேன். மனம் கனத்துப் போயிருந்தது. கணவனை இழந்த பின், வருமானத்திற்கு வழியில்லாமல் டீ கடைப் போட்டிருக்கிறார்.
தேனாய் இனித்த டீயை குடித்து முடித்ததும், பக்கத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் போகும் வரை காத்திருந்துவிட்டு ஆரம்பித்தேன்.
''அம்மா, இந்தாங்க,'' என, நான் கொண்டு வந்திருந்த, 50 ஆயிரம் ரூபாய் கட்டோடு, தேனீருக்கான பணத்தையும் வைத்து நீட்டினேன்.
பணக்கட்டைப் பார்த்து அவர் அதிர்ந்து, ''என்னப்பா இது? டீ காசு ரெண்டு ரூவா தான். இவ்வளவு பணம் தர்றே?'' என, கண்களில் மிரட்சியுடன் கேட்டார்.
''அம்மா இது உங்களுக்கு சேர வேண்டிய பணம்மா,'' என, தொண்டையடைக்க சுவரில் மாட்டியிருந்த, கோவிந்தன் மாமாவைப் பார்த்தபடி, கடந்த கால என் ஏமாற்று வேலையை சொன்னேன்.
''என்னை மன்னிச்சுடுங்கம்மா. அறியா வயசுல தப்பு பண்ணிட்டேன். ஆனா, அதோட ரணம் நாளுக்கு நாள் பெரிசாகிட்டே வருது. இதை நீங்க வாங்கிக்கிட்டா, என் சாவு நிம்மதியாய் இருக்கும்,'' கண்ணீர் வழியத் துவங்கியது.
''நீ ராஜகுருவோட மகனா? உங்களைத்தாம்பா நானும் தேடிக்கிட்டு இருந்தேன். எந்த ஊர்ல இருக்கீங்கன்னு கண்டுப்பிடிக்க முடியலை.''
''பார்த்தீங்களாம்மா. நான் உங்களை ஏமாத்தினதை நீங்க மறக்கலை. இதை வாங்கிக்கங்கம்மா.''
''யப்பா, நானும் உனக்கு தர வேண்டியது ஒண்ணு இருக்குப்பா. இரு,'' என்றவாறே உள்ளே சென்றவர் திரும்பி வந்தபோது, கையில் சின்னஞ்சிறிய டப்பாவை அவனிடம் நீட்டினார்.
''இதை வாங்கிக்கப்பா.''
''என்னம்மா இது?''
''திறந்து பாருப்பா.''
புரியாமல் நான் அதை திறந்து பார்த்தபோது, கம்மலுடன் சேர்ந்த ஒரு தங்க ஜிமிக்கி.
''என்னம்மா இது?''
''இது உங்க வீட்டு நகைப்பா. நீங்க குதிரை வண்டியில வந்த போது, வண்டி குலுக்கல்ல விழுந்திருக்கு. லாயத்துல குதிரையை கட்டிட்டு, 'பெட்ஷீட்'டை உதறியபோது கிடைத்தது.
''தங்கம், திருப்பிக் கொடுக்க மனசு வரலை, மறைச்சுட்டேன். அந்த பாவத்துக்கு தண்டனை கிடைச்சுட்டு. ராஜா மாதிரி இருந்த குதிரை, நோய் வந்து செத்து போச்சு. குதிரை செத்த வருத்தத்துல அவரு மனசு ஒடைஞ்சு போய், 'ஹார்ட் அட்டாக்' வந்து போய் சேர்ந்துட்டார்.
''இந்த டீ கடையை வச்சு பொழப்பு நடத்தறேன். அவரு இறக்கும் போது, 'நாம பண்ணின பாவம் தான் இப்படி ஆவுது. அந்த குடும்பம் எங்கயிருந்தாலும் தேடி, இந்த ஜிமிக்கி கம்மலை கொடுத்துடு'ன்னு சொல்லி செத்துட்டார்.
''அதிலேயிருந்து சோத்துக்கே வழி இல்லாத நாள்ல கூட, நான் இதை வித்து திங்க நினைக்கலைப்பா. ஆண்டவன் தான் உன்னை இங்க வரவழைச்சிருக்கான். அறியாத வயசுல, ரெண்டு ரூபாயை நீ ஏமாத்தினது தப்பு இல்லைய்யா. நாங்க பண்ணினது தான் தப்பு. என்னை மன்னிச்சிடுப்பா,'' என, கண்ணீர் வழிய கை கூப்பினார், அந்தம்மா.
பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தேன், நான். சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு மவுனமாக கையிலிருந்த பணக்கட்டை, கோவிந்தன் மாமாவின் புகைப்படம் அருகில் வைத்துவிட்டு, அந்த டீ கடையை விட்டு வெளியேறினேன்.
ஆர். சுமதி