
புதுவிதமான மோசடி!
பெ ங்களூரில் வசிக்கும் உறவினர் ஒருவரிடம், அவரது, 'அபார்ட்மென்ட்'டில் புதிதாக குடியேறிய ஒருவர் நட்போடு பழகியிருக்கிறார்.
அந்த நபர், தன்னை ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர் என, அறிமுகப்படுத்தி கொண்டதால், அவர் மீது நல்ல மரியாதையும் வைத்திருந்திருக்கிறார், உறவினர்.
ஒருமுறை அந்த நபர், உறவினரிடம், புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருப்பதாகவும், அதற்கு முதலீடு தேவைப் படுவதாகவும் கூறியிருக்கிறார்.
உறவினரின் நம்பிக்கையை பெறுவதற்காக, போலியான ஆய்வறிக்கைகள், ஆய்வக புகைப்படங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களை காண்பித்துள்ளார்.
அதை நம்பிய உறவினர், மூன்று லட்ச ரூபாயை அவருக்கு முதலீடாக வழங்கியிருக்கிறார். அதன்பின், அந்த நபர், திடீரென குடியிருப்பை காலி செய்து, தலைமறைவாகி விட்டார்.
உறவினர் போலீசில் புகார் அளித்த போது, அவர்களது விசாரணையில், அந்த நபர், பலரை இதேபோல் ஏமாற்றிய மோசடிக்காரர் என்பதும், அவரது ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும் தெரிய வந்தது.
வாசகர்களே... புதியவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்புவதற்கு முன், அவர்களின் பின்னணியை முழுமையாக ஆராய்ந்து விடுங்கள். எந்த உதவியையும், உணர்ச்சிவசப்படாமல், துறை சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று செய்திடுங்கள்.
— மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.
நண்பரின் நல்லதொரு செயல்!
நண்பர் ஒருவர், தான் புதிதாக கட்டிய வீட்டுக்கு, புதுமனை புகுவிழா கொண்டாட நாள் குறித்தார். எனக்கு போன் செய்த நண்பர், 'விழாவிற்கு ஆடை எடுக்க டவுனிற்கு செல்கிறோம். நீங்களும் எங்களுடன் வாருங்கள்...' என்றார். அவருடன் ஜவுளிக்கடைக்கு சென்றேன்.
தன் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆடை எடுத்து தந்தார், நண்பர். எனக்கும், எனக்கு பிடித்த ஆடையை எடுத்து தந்தார்.
'கட்டட வேலை செய்தவர்களுக்கு ஆடை எடுத்து தரவில்லையா...' என்றேன்.
அதற்கு, 'பெயருக்கு அவர்களுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை எடுத்து தருவதில், எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால், அதை அவர்கள் கட்டுவதில்லை. வீட்டில் உள்ள முதியவர்களுக்கு தந்து விடுகின்றனர் அல்லது சிறிய ஜவுளிக்கடைகளில் அதை விற்று விடுகின்றனர். இதை கண்கூடாக கண்டேன்.
'எனவே, கட்டட மேஸ்திரி மற்றும் உதவியாளர்களுக்கும் ஒரு தொகையை சொல்லி, அந்த தொகைக்கு ஆடை எடுக்க சொன்னேன். அதற்கு மேல் பணம் செலுத்தி, உங்களுக்கு பிடித்த வேறு ஆடை கூட எடுத்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். நான் கூறிய தொகைக்கான, 'பில்'லை மட்டும் என்னிடம் தந்து, அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள சொன்னேன்.
'அவர்களும் அதன்படியே செய்தனர். கட்டட வேலை செய்தவர்கள் பலரும் வடநாட்டு இளைஞர்கள். 'வேட்டி, சட்டை தந்திருந்தால், உண்மையாகவே நாங்கள் அதை பயன்படுத்தி இருக்க மாட்டோம். அது வீணாக போயிருக்கும்...' என்றனர்.
'மற்ற நம்மூர் நபர்களும், இந்த ஐடியாவை பாராட்டினர்...' என்றார்.
'நாம் அவர்களுக்கு, ஏனோ தானோ என, கடமைக்கு ஆடை எடுத்து தருவது பயனளிக்காது. உங்களது இந்த செயல், ஒரு முன்னுதாரணம்...' என, பாராட்டினேன்.
— எம்.மொவன்குட்டி, கோவை.
இப்படியும் ஒரு சிக்கல்!
நடைபயிற்சி செல்லும் போது, தினமும், ஒரு இளம்பெண், நான் செல்லும் வழியில், எதிர் திசையில் நடந்து வருவார். நான், அந்த பெண்ணை பார்த்தவுடன், 10 அடிக்கு முன்பாகவே, இரண்டு மூன்று அடி இடைவெளி விட்டு, அந்த பெண்ணைக் கடந்து விடுவேன். இது, தினசரி நிகழ்வாக இருந்தது.
ஒரு மாதம் சென்றிருக்கும். நடைபயிற்சியின் போது எதிரே வந்தார், அந்த பெண். வழக்கம் போல் இடைவெளி விட்டு அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல முயன்றேன்.
அப்போது, 'ஐயா, ஒரு நிமிடம்...' என்ற, அந்த பெண், 'உங்களுக்கு பெண்களை கண்டால் பிடிக்காதா?' என்றார்.
'அப்படி எல்லாம் ஒன்றுமில்லை...' என்றேன், நான்.
மீண்டும், 'நானும் தொடர்ந்து ஒரு மாதமாகப் பார்த்து வருகிறேன். என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நான் வரும்போதெல்லாம், இரண்டடி நகர்ந்து சென்று என்னை பார்க்காமல், கடந்து செல்கிறீர்கள்.
'நான் அவ்வளவு அசிங்கமாகவா இருக்கிறேன். தங்களின் செயல் என்னை அவமானப்படுத்துவது போல் உள்ளது. வயதுக்கும், ரசிப்பதற்கும் தொடர்பில்லை. இனிமேலாவது அழகை ரசியுங்கள்...' என, அந்த பெண் கூற, அதிர்ந்து போய் நின்று விட்டேன்.
பெண்களை பார்த்தாலும், தப்பு; பார்க்காவிட்டாலும் தப்பாக இருக்கிறது என, நொந்து கொண்டேன்.
—உ.மு.ந.ராசன் கலாமணி, கோபிசெட்டிபாளையம்.

