/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: ஜெயந்தியான பிறந்தநாள்!
/
விசேஷம் இது வித்தியாசம்: ஜெயந்தியான பிறந்தநாள்!
PUBLISHED ON : செப் 14, 2025

செப்., 16 - சுக்கிர ஜெயந்தி
மனிதர்களின் பிறந்த தேதி அல்லது நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் அல்லது பிறந்தநாள் என்கிறோம். ஆனால், தெய்வங்கள் மற்றும் தேவர்கள், முனிவர்களின் பிறந்த நாளை, ஜெயந்தி என்கிறோம். ஜெயந்தி என, பெயர் வரக் காரணம் தெரியுமா?
பிருகு முனிவர்- - கயாதி என்ற காவ்யமாதா ஆகியோரின் புதல்வர், சுக்கிரன். ஆவணி மாதம் தேய்பிறை தசமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்த நாளில் பிறந்தவர்.
விழா எடுப்பவர்கள் திதிக்கே முக்கியத்துவம் தருவர். இவர், சிவனை எண்ணி தவமிருந்து, இறந்தவர்களை உயிர் பிழைக்க வைக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுக் கொண்டார். ஆனால், அசுரர்களுக்கு குருவாக இருந்து, இறந்து போன அசுரர்களை உயிர் பிழைக்க வைத்தார்.
வரத்தை தவறாகப் பயன்படுத்திய சுக்கிரனை விழுங்கி விட்டார், சிவன். மனம் திருந்திய அவரை, சிவன் மீண்டும் தன் வயிற்றில் இருந்து வெளிப்படுத்திய போது, சுக்கிலம் எனும் வெள்ளை நிறத்தில் வெளிப்பட்டார். இதனால், சுக்கிலன் என்ற பெயர் பெற்றார்.
இதுவே, சுக்கிரனாக திரிந்தது. சுக்ரம் என்றாலும், வெள்ளை அல்லது பிரகாசம் என்றே பொருள். வெள்ளை நிறத்தில் பளபளவென வெளிப்பட்டதால், வெள்ளி எனவும் அழைக்கப்பட்டார். வானில் வெள்ளி முளைத்தது என, சொல்வது இதனால் தான்.
சுக்கிரன் இருக்கும் தைரியத்தில், அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவலோகத்தை அவர்கள் கைப்பற்றி விடுவர் என்ற நிலை ஏற்பட்டது. இதை தடுக்க, தன் மகள் ஜெயந்தியிடம், தேவலோகத்தை கைப்பற்றாமல் இருக்க, சுக்கிரனை கட்டுப்படுத்தும்படி கூறினான், தேவர் தலைவன் இந்திரன்.
ஜெயந்தியும், சுக்கிரன் இல்லத்துக்கு சென்று, அவரிடம் நன்மொழிகள் பேசி, சேவை செய்து வந்தாள். இதை கண்டு மகிழ்ந்து, ஜெயந்தியை, தன் வாழ்க்கை துணையாக ஏற்றார், சுக்கிரன்.
வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டு, தேவலோகம் பக்கம், 10 ஆண்டுகள் வரை தலை காட்டாமல் இருந்தார். பிறகு, மனைவியின் அனுமதியுடன் அசுரர்களின் கையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தார். தன் கணவரின் அன்புக்கு கட்டுப்பட்ட, ஜெயந்தி, இதற்கு அனுமதி அளித்தாள்.
தன் மேல் மனைவி கொண்ட பாசத்தால், சுக்கிரன், தன் பிறந்த நாளை தன் மனைவி இல்லாமல் கொண்டாட மாட்டார். இதனால், அவரது பிறந்த நாள், சுக்கிர ஜெயந்தி ஆனது. மற்ற தெய்வங்களும் ஜெயந்திக்கு மரியாதை அளிக்கும் வகையில், தங்கள் பிறந்த நாளையும் ஜெயந்தி என்றே அழைத்தனர்.
ஜெயந்தி என்றால், வெற்றி என, அர்த்தம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும், ஒரு பெண் இருக்கிறாள் என்பது கூட, ஜெயந்தி என்ற சொல்லை அனுசரித்து தான்!
கணவனும், மனைவியும் கருத்தொருமித்து இருந்தால், வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பதே, சுக்கிர ஜெயந்தி விழா நமக்கு அளிக்கும் செய்தி.
தி. செல்லப்பா

