
பெண்கள் குழுவின் பயனுள்ள சேவை!
எங்கள் பகுதியை சேர்ந்த, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களும், பலதரப்பட்ட தொழில் செய்யும் பெண்களும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒன்றிணைந்து, அருகிலுள்ள ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று, தங்களின் திறன்களை பயன்படுத்தி, தன்னலமற்ற சேவை செய்து வருகின்றனர்.
இவர்களில், ஆசிரியைகள், குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி, கதை சொல்லல் மற்றும் பாடல் பயிற்சி அளிக்கின்றனர். 'பியூட்டி பார்லர்' வைத்திருக்கும் பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக சிகையலங்காரமும், எளிய, 'மேக்-அப்' மற்றும் மெகந்தி போட சொல்லி தருகின்றனர்.
தையல் பணியாற்றும் பெண்கள், புதிய ஆடைகள் தைத்துக் கொண்டு போய், இலவசமாக வழங்குவதோடு, தையற்பயிற்சியும் கொடுக்கின்றனர். சமையல் தெரிந்த பெண்கள், சத்தான உணவு தயாரித்து பரிமாறுவதோடு, சமையல் குறிப்புகளையும் பகிர்ந்து, சுயமாக உணவு தயாரிக்க பயிற்சி அளிக்கின்றனர். கைவினைப் பொருட்கள் செய்யும் பெண்கள், எளிய கைவினைப் பயிற்சி அளித்து, அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கின்றனர். தோட்டக்கலை தெரிந்தவர்கள், இல்லத்தில் காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டம் அமைக்க உதவுகின்றனர்.
இவை தவிர, முதியோருக்கு மனநல ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இத்தகைய பயனுள்ள சேவைகள், ஆதரவற்றோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கின்றன.
வெவ்வேறு பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரும் இதுபோல் செய்ய முன்வரலாமே!
- வி. நர்மதா, உளுந்துார்பேட்டை.
கோவிலில் ஒரு பாடம்!
ச மீபத்தில், பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்றபோது, சில இளம் ஜோடிகள் கோவிலின் புனித சூழலை மறந்து, சிரிப்பு, கிசுகிசு, அத்துமீறிய நடத்தை என, மக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தனர்.
இதை சகிக்க முடியாமல், கோவிலுக்கு வந்த சிலர், அமைதியாக அவர்களுக்கு ஒரு வித்தியாசமான பாடம் புகட்டினர்.
ஜோடிகள் முன் நின்று, எல்லாரும் ஒன்று சேர்ந்து, 'கோவில் இடம் விளையாட்டு இடமல்ல...' என்று சத்தமாக சொல்லி, பக்திப் பாடலை கூட்டாக பாட ஆரம்பித்தனர்.
இதைக் கண்டதும், காதல் ஜோடிகள் வெட்கப்பட்டு, தலை குனிந்தபடி அங்கிருந்து உடனே வெளியேறினர்.
இதைப் பார்த்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
கோவில் புனிதம் காப்பது ஒவ்வொருவரின் கடமை. மற்றவர்களும் இப்படி நாகரிகமாக விழிப்புணர்வு அளித்தால், நல்ல மாற்றம் வரும்.
- ப. சிதம்பரமணி, கோவை.
மாறுமோ நெஞ்சம்!
என் தோழி வீட்டின் நவராத்திரி விழாவிற்கு பள்ளியில் பணிபுரியும் சக ஊழியர்களுடன் சென்றிருந்தேன். தோழி, வெற்றிலை பாக்கு, குங்குமச் சிமிழ், மஞ்சள் பொடி டப்பா, ரவிக்கைத் துணி என ஒவ்வொருவருக்கும் வழங்கினாள்.
எங்களுடன் பணி புரியும் ஒரு வயதான, மூத்த ஆசிரியை, கணவரை இழந்தவர்.
அவருக்கு கொடுப்பதற்காக எடுத்து வைத்த தாம்பூலத்திலிருந்து குங்குமச் சிமிழ், மஞ்சள் பொடி டப்பா ஆகியவற்றை எடுத்து விட்டு, அந்த ஆசிரியைக்கு கொடுக்கச் சொல்லி, உள்ளே போய் விட்டார், தோழியின் மாமியார்.
தோழிக்கு தர்ம சங்கடமாகி விட்டது.
உடனே அந்த ஆசிரியை, அவள் மாமியார் தனியே எடுத்து வைத்த குங்குமச் சிமிழிலிரு ந்து குங்கமத்தை எடுத்து, 'ஏய் பொண்ணுங்களா, உங்க எல்லாருக்கும் நான் குங்குமம் வச்சு விடறேன். ஒவ்வொருத்தரும் வரிசையில வாங்க.
'ஸ்கூல்ல பசங்களை வரிசையில வரச் சொல்லுவீங்க இல்லையா. இப்போ டீச்சருங்க எல்லாரும் வரிசையில வரலன்னா அடி...' என்று எங்கள் எல்லாருக்கும் குங்குமமிட்டு, சிரிக்க வைத்து, தன் வேதனையை மறந்து, அந்தச் சூழலை இனிமை ஆக்கினார். அ வர் சமயோசிதம் பாரட்டுக்குரியது.
இந்தக் காலத்திலும், தோழியின் மாமியார் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். மற்றவருக்கு மனவலியைத் தரும் இவர்கள் எப்போது தான் திருந்துவரோ!
- சிவகாமசுந்தரி, நாகமணி, சென்னை.

