/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: வயிறு வலிக்காக பிறந்த பாட்டு!
/
விசேஷம் இது வித்தியாசம்: வயிறு வலிக்காக பிறந்த பாட்டு!
விசேஷம் இது வித்தியாசம்: வயிறு வலிக்காக பிறந்த பாட்டு!
விசேஷம் இது வித்தியாசம்: வயிறு வலிக்காக பிறந்த பாட்டு!
PUBLISHED ON : அக் 26, 2025

அக்.,27 - கந்த சஷ்டி
வயிறு வலியா! 'ஐயையோ தாங்க முடியாதே...' என பயந்து, 'முருகா... என் வலியை அகற்ற மாட்டாயா...' என, கதறுபவர்களும் உண்டு. மற்ற பெண்களைப் போல, என் வயிறும் வலிக்காதா என்று, மகப்பேறு வேண்டி உருகுபவர்களும் உலகில் உண்டு. இந்த இரண்டுக்கும் மருந்தாய் இருப்பது தான், கந்த சஷ்டி கவசம்.
இந்தக் கவசமே, வயிற்று வலியில் தவித்து, முருகனால் குணம் பெற்ற கவிராயர் ஒருவர் பாடியது தான். பால தேவராயர் என்பது அவரது பெயர். இவர் பெங்களுருவில் வியாபாரம் செய்து வந்தார். முருக பக்தி காரணமாக பழனி மலைக்கு அடிக்கடி வந்தார். ஒருமுறை, இவர் பழனி மலையை கிரிவலம் வந்த போது, பல வகை நோய்களால் பீடிக்கப்பட்ட மக்களைக் கண்டு மனம் நொந்தார். இவர்களுக்கெல்லாம் விடிவுகாலம் வர வேண்டும் என, முருகப்பெருமானை வேண்டி, பாடியது தான், கந்த சஷ்டி கவசம்.
இந்தக் கவசம் பிறந்ததற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாலதேவராயர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருந்துகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவர் திருச்செந்துார் வந்து, முருகப்பெருமானை உள்ளம் உருகி வழிபட்டார். அப்போது, கந்த சஷ்டி விரத காலம். ஆறு நாட்கள் தங்கி விரதமிருந்து வழிபட்டார். தினமும் தியானத்திலும் ஆழ்ந்தார்.
கந்த சஷ்டியன்று முருகப்பெருமான் அவருக்கு காட்சியளித்து, வலியைப் போக்க அருள் செய்தார். இதையடுத்து ஈரோடு அருகிலுள்ள சென்னிமலைக்கு வந்த அவர், கந்த சஷ்டி கவசத்தை அங்கு தான் இயற்றினார்.
கவிராயரின் பிறப்பு, சஷ்டி கவசத்தை அவர் இயற்றியது குறித்த தகவல்கள் அனைத்தும் அனுமானங்கள் தான். எனினும், சஷ்டி கவசத்தை அவர் தான் இயற்றினார் என்பது உறுதி. ஏனெனில், 'பாலதேவராயன் பகர்ந்ததை' என்ற சஷ்டி கவச வரி, இதை நிரூபிக்கிறது.
கந்த சஷ்டி விரதம் பெரும்பாலும் குழந்தைப் பேறுக்காகவே அனுஷ்டிக்கப்படுகிறது. குழந்தை இல்லாத குறையை, பெரும் குறையாக கருதுவர் பெண்கள். எங்களுக்கும் வயிறு வலிக்காதா, என ஏங்குவர். ஆக, வயிறு வலிக்காகவே பிறந்த பாடல், கந்த சஷ்டி கவசம். இன்று தமிழகமெங்கும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத ஊர்களே இல்லை. இதை தினமும், 36 முறை ஆற அமர பக்திப்பூர்வமாகப் பாடினால், எந்த ஒரு செயலும் வெற்றி பெறும். நிதானமாக பாடினால், 36 முறை பாடி முடிக்க ஏழு மணி நேரம் ஆகும். இடைவெளி எடுத்துக் கொண்டும் பாடலாம்.
கந்த சஷ்டி காலத்தில் கவசம் குறித்த செய்திகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே!
தி.செல்லப்பா

