sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமண மண்டபங்களில் திருட்டைத் தடுக்க...

நண்பரின் மகன் திருமணத்திற்கு, மண்டபம் ஒன்றை முன்பதிவு செய்ய சென்றிருந்தோம். எல்லாம் பேசி, முன்பணம் கொடுத்த பின், ஒரு தம்பதியை அறிமுகப்படுத்தினார், மண்டப மேலாளர்.

நாங்கள் புரியாமல் பார்த்தோம். 'இவர்கள் நம் மண்டபத்திற்கு பக்கத்திலேயே வசிக்கின்றனர். பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இருவரும், வீட்டிலேயே அப்பளம், வடகம், வத்தல் போன்றவற்றை தயாரித்து விற்கும் சுயதொழில் செய்து வருகின்றனர். இருவரையும் மண்டபத்தில் உள்ள மணமகன் அறைக்கும், மணமகள் அறைக்கும் தனித்தனி காவலாளியாக நியமித்து இருக்கிறோம். நீங்கள் திருமண மும்முரத்தில் இருக்கும்போது, மணமக்கள் அறைக்குள் யாராவது சந்தேகப்படும்படியாக சென்றால், இவர்கள் கண்காணித்து, உங்களை எச்சரிக்கை செய்வர். இதனால், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போகாமல் முழுமையாக தடுக்கப்படும்...' என்றார்.

மேலும், 'இவர்கள் திருமணத்தின் ஆரம்பத்தில் இருந்து, திருமண நிகழ்ச்சி முடியும் வரை, மண்டபத்தில் தேவையில்லாமல் எரியும் மின் விளக்குகள், மின் விசிறி போன்றவற்றை அணைத்து, பணத்தை மிச்சப்படுத்த உதவியாக இருப்பர்...' என்றும் கூறினார்.

அவர் கூறியது போலவே திருமண நிகழ்ச்சியில் அந்த தம்பதியரின் செயல்பாடு மிகவும் பாராட்டும்படியும், பயனுள்ளதாகவும் இருந்தது.

திருமண மண்டபங்களில் நடக்கும் திருட்டை தடுக்க இதுபோல், திருமண மண்டபத்தினரோ அல்லது திருமண வீட்டாரோ முயற்சி செய்யலாமே!

-  அ.பேச்சியப்பன், சென்னை.

ஒரே மேடையில் பல பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சி!

நண்பர் அழைப்பை ஏற்று, அவர் ஊரில் நடைபெற்ற கோவில் விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தேன்.

விழாவின் ஒரு பகுதியாக அன்று இரவு நாடகம் நடைபெற்றது. நாடகம் துவங்குவதற்கு முன், கடந்த ஆண்டில், பத்து மற்றும் பிளஸ்2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஏழ்மை நிலையில் கல்லுாரியில் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு உதவியாக, சிறு தொகையை வழங்கினர்.

அன்று நடக்க இருந்த நாடகத்தின் இடையே, உள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ஒரு மணிநேரம் நடைபெறும் என்று அறிவிப்பு செய்தனர்.

எல்.கே.ஜி., - யு.கே.ஜி., முதல் பிளஸ்2 வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இது அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது. இதுபற்றி நண்பரிடம் கேட்டேன்.

'பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்வமுள்ள சிலர், இவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் தன் திறமையை வெளிக்காட்டியதை பலரும் பாராட்டினர்; பெற்றோரும் இதை வரவேற்கின்றனர்...' என்றார், நண்பர்.

பள்ளி ஆண்டு விழாவின் போது, நம் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க முடியும். இங்கு அனைத்து குழந்தைகளின் நிகழ்ச்சிகளை ரசிக்க முடிந்தது. திறமையை வெளிக்காட்ட உள்ளூரில் மேடை அமைத்துக் கொடுத்தது முன் உதாரணமாக இருந்தது.

ஊர் விழாவின் போது, பல்வேறு பள்ளி மாணவர்களை இணைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்த விழா குழுவினர் ஆர்வம் காட்டலாம்; இது, ஒற்றுமையை வளர்க்கும்.

சோ.ராமு, திண்டுக்கல்.

விரக்தியை வீழ்த்துவோம்!

என் தோழியின் பெற்றோர், புறநகர் பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தனர். தோழியும், நானும் ஒரே கல்லுாரியில் படிக்கிறோம்.

ஒருநாள், இரவு கடையை மூடி, தோழியின் பெற்றோர் இருவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த மணல் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, இவர்கள் மீது மோதியதில், அப்பா, சம்பவ இடத்திலேயே இறந்து விட, தோழியின் அம்மாவுக்கு இரண்டு கால்களும் பறிபோயின.

என் தோழியையும், அவள் அம்மாவையும் பார்க்க அவர்கள் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, தோழியின் அம்மா, கணவன் இறந்தது, கால்கள் போனது மற்றும் மகளின் எதிர்காலம் ஆகியவற்றை எண்ணி கலங்கி, விரக்தியில் மனம் உடைந்து காணப்பட்டார்.

ஜவுளிக், கடையை காலி செய்து, மீதமிருந்த துணிகளை வீட்டில் வைத்திருந்தனர். இதை பார்த்த நான், 'ஆன்லைன் மூலம் துணிகளை விற்கலாமே...' என்று யோசனை கூறினேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, அதற்குரிய வழிமுறைகளை சொல்லி கொடுத்து, 'ஆன்லைனில்' ஜவுளிகளை விற்க ஏற்பாடும் செய்தேன். கடை வாடகை, சம்பளத்திற்கு ஆள், மின் கட்டணம் என, எதுவுமே இல்லாததால், குறைந்த லாபத்திற்கு விற்கச் சொன்னேன். ஜவுளிகளை வீடியோக்களாக பதிவு செய்து, அதை செயலியில் பதிவிட்டேன்.

முதலில் சுமாராக நடந்த வியாபாரம், இப்போது சூடுபிடித்துவிட்டது.

தோழியின் அம்மா, 'ஆர்டர்' எடுத்து வைப்பார்; மாலையில், கல்லுாரி விட்டு வந்து, அதை, 'கொரியர்' செய்வாள், தோழி.

எல்லாருக்குமே சில நேரங்களில் இடர்பாடுகள் வரும். அதையே நினைத்து வீட்டில் முடங்கினால், நம் வாழ்க்கை வீணாகிவிடும்.

பி.பொன் காவியா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us