PUBLISHED ON : மே 24, 2026

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவகும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
கராத்தே மணி 'பிசி'யாக சினிமாவில் நடித்து கொண்டிருந்த சமயம். குணச்சித்திர வேடம் மற்றும் வில்லன் வேடம் என, எல்லா நாட்களிலும் படப்பிடிப்பு தான். படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சொல்லித்தரும் முறையில் சண்டை போட மாட்டார். இவராகவே கராத்தே நுணுக்கத்தோடு சண்டை போடுவார் என்று, இவரைப் பற்றி மற்ற சண்டை கலைஞர்கள் என்னிடம் சொன்னதுண்டு.
என்னுடன் நல்ல நட்புடன் பழகியவர் தான், கராத்தே மணி. இவர் நடித்த ஒரு படம் பற்றி நான் எழுதிய விமர்சனத்தில், 'ஆ... ஊ... என, கை அசைக்கிறார்...' என்று எழுதி விட்டேன்.
இதழ் வெளியான அன்று காலை அலுவலகத்திற்கு என்னிடம் சண்டை போட வந்துவிட்டார், கராத்தே மணி. நான் சற்று தாமதமாக அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.
கராத்தே மணி வந்து என்னை திட்டிக் கொண்டிருக்கும் தகவலை, வாசலிலேயே சொல்லி விட்டனர். என்னைப் பார்த்ததும், 'யோவ்... என்னய்யா இப்படி எல்லாம் நக்கல் பண்ணி எழுதுற...' என, நான் உள்ளே நுழைந்ததுமே கேள்வி கேட்டார், கராத்தே மணி. அலுவலகமே வேடிக்கை பார்த்தது.
'மன்னிப்பு கேட்டு அடுத்த இதழில் எழுது' என்று நிபந்தனை போட்டார்.
'நான் மன்னிப்பெல்லாம் போட முடியாது. ஆசிரியர் வந்ததும் பேசிட்டு சொல்றேன்...' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அலுவலக உதவியாளரிடம், கராத்தே மணிக்கு பிடித்தமான ஆரஞ்சு ஜூஸ் வாங்கி வரச் சொன்னேன். ஜூஸ் வந்ததும் வற்புறுத்தி குடிக்கச் சொன்னேன். அவருக்கு சற்று கோபம் அடங்கியது.
'மனதார இனிமே இப்படி எழுத மாட்டேன். சரியா...' என சொல்ல, அவரின் கோபம் மெல்ல குறைந்தது. அச்சமயம்
உள்ளே நுழைந்தார், ஆசிரியர் வலம்புரிஜான். கராத்தே மணியை பார்த்ததும், அவரை தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருவரும் என்ன பேசினரோ எனக்கு தெரியாது.
ஆசிரியர் என்னை உள்ளே அழைப்பதாக தகவல் வர, உள்ளே நுழைந்தேன். கராத்தே கலை பற்றி விரிவான பல தகவல்களை, மணியிடமிருந்து ஆசிரியர் கேட்டு குறிப்பெடுத்து வைத்திருந்தார்.
'ஒண்ணும் பிரச்னை இல்லப்பா. நானே அவரிடம் விளக்கமாக பேசிட்டேன்...' என்று ஆசிரியர் கூற, அலுவலகத்தை விட்டு கிளம்பிச் சென்று விட்டார், கராத்தே மணி. அவர் சென்றதும், என்னிடம், 'மன்னிப்பு கேட்க முடியாது என, பிடிவாதமா சொல்லிட்டியாமே. இப்படித்தான் இருக்கணும். நீ போய் உன் வேலையை பாரு...' என்றார், ஆசிரியர்.
சென்னை படப்பிடிப்பு தளங்களில் அப்போது திரும்பிய பக்கமெல்லாம் பரபரப்புடன் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் சிவாஜி கணேசனின் மகன், பிரபு. பெங்களூரில் படித்து முடித்த பிரபு, சித்தப்பா சண்முகத்திற்கு உறுதுணையாக இருந்து, சிவாஜி தோட்டத்தை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நடிகராக மாற்றியது அவரது சித்தப்பா, சண்முகம் தான்.
இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், பிரபு நடித்த
முதல் படம் சங்கிலி. அப்படத்தின், 'ஹீரோ'வான சிவாஜிக்கு உதவுகிற நண்பராக நடித்திருப்பார், பிரபு. சங்கிலி திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. ஸ்டுடியோவுக்கு பிரபுவுடன் சேர்ந்து செல்லலாம் என, காத்திருந்தார், சிவாஜி கணேசன்.
'நீங்க போங்கப்பா... நான் நேரடியா ஸ்டுடியோவுக்கு வந்துடறேன்...' என்று சொல்லி இருக்கிறார், பிரபு.
'முதல் நாள் ஒண்ணா சேர்ந்து போகலாம்ன்னா இவன் வரமாட்டேங்கிறானே... நடிக்க விருப்பம் இல்லையோ?' என்று யோசித்தபடி கிளம்பி விட்டார், சிவாஜி.
தன், 'மேக்-அப் மேன்' உடன் நேரடியாக, ராமாபுரம் தோட்டத்திற்கு போனார், பிரபு. அங்கிருந்த, எம்.ஜி.ஆரிடம், சிவாஜி மகன் வந்திருக்கும் தகவல் சொன்னதும், உடனே அழைப்பு வந்தது. உள்ளே சென்ற பிரபு, நெடுஞ்சாண்கிடையாக அன்றைய முதல்வர், எம்.ஜி.ஆர்., காலில் விழுந்து விட்டார்.
'என்னப்பா விஷயம்?' என, எம்.ஜி.ஆர்., கேட்சு, 'என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க, பெரியப்பா. இன்னைக்கு முதல் முதலாக படப்பிடிப்புல நான் கலந்துக்கிறேன்...' என்று, பிரபு சொன்னதும், மிக்க மகிழ்ச்சியுடன், உச்சி முகர்ந்து முத்தமிட்டு, வாழ்த்தியுள்ளார், எம்.ஜி.ஆர்., இதை அடிக்கடி சொல்வார், பிரபு.
நான் முதன்முதலாக அவரை சந்தித்தது ஏவி.எம்., ஸ்டுடியோவில், ராம நாராயணன் இயக்கிய, சூரக்கோட்டை சிங்கக்குட்டி திரைப்பட படப்பிடிப்பின் போது தான். அப்படத்தின் தயாரிப்பாளர், ஏவி.எம்.குமரன்.
என்னை, பிரபுவிடம் அன்று அறிமுகம் செய்து வைத்தவர் ஒளிப்பதிவாளர், என்.கே.விஸ்வநாதன். 'தாய்' இதழ், எம்.ஜி.ஆர்., நடத்தும் பத்திரிகை என்பதால், உடனே பேச ஆரம்பித்து விட்டார், பிரபு.
இப்படத்தில், பிரபுவுக்கு ஜோடி, சில்க் ஸ்மிதா. கவர்ச்சி வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த, ஸ்மிதா கதாநாயகியாக நடித்த படம். படப்பிடிப்பில், யாரிடமும் அதிகம் பேச மாட்டார், ஸ்மிதா. தான் உண்டு. தன் வேலை உண்டு என்று ஒதுங்கியிருப்பார். அவர் பேசும் தமிழ், தெலுங்கு கலந்து தான் இருக்கும்.
விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட, சில்க் ஸ்மிதா குறித்து, 'சிலுக்கின் மறுபக்கம்' என்கிற தொடர், 'தாய்' வார இதழில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தது. இதனால், ஸ்மிதா எனக்கு கொடுத்த மரியாதை அதிகம்.
பிரபுவிடம் பேசும்போது முதன் முதலில், சிவாஜி கணேசனை சந்தித்ததையும், மதுரையில், நான் பேட்டி எடுத்த முதல் நடிகர் அவர்தான் என்று சொன்னதையும் ஆச்சரியமாக கேட்டார். பேட்டிக்காக நான் போன நேரம், மதிய உணவு இடைவேளை.
வற்புறுத்தி சாப்பிடச் சொன்னார், பிரபு. அசைவ உணவில் என்னவெல்லாம் உண்டோ, எல்லாம் அங்கே இருந்தன. நான் சாப்பிட வெட்கப்படுவதை பார்த்ததும், 'எதுக்கு கூச்சம். நல்லா சாப்பிடுங்க!' என்றார், பிரபு.
குறிப்பாக, உள்ளான் தொக்கு, தென் மாவட்டங்களில் விரும்பி சாப்பிடும் ஒர் அசைவ உணவு. உள்ளான் என்பது ஒரு சிறிய நீர்வாழ் பறவை. இதை சிவாஜி, விரும்பி சாப்பிடுவார் என்பதால், தஞ்சாவூர் பகுதியில் இருந்து, சிவாஜி கணேசனின் மனைவி, கமலா அம்மா அதை வாங்கி வந்து, அவ்வப்போது சமைத்து தருவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். சூரக்கோட்டை
சிங்கக்குட்டி திரைப்படம் குறித்து, 'படப்பிடிப்பு தளத்தில்!' என்று இரண்டு பக்கம் கட்டுரை எழுதினேன். அப்படத்தின் தயாரிப்பாளர், ஏவி.எம்.குமரன் அவரது மகன்,
ஏவி.எம்.கே.சண்முகம் இருவரையும் பேட்டி எடுத்தும் எழுதியிருந்தேன்.
இயக்குனர், ஹரிஹரன் இயக்கிய, ஏழாவது மனிதன் வித்தியாசமான திரைப்படம். அதில் கதாநாயகனாக நடித்த, ரகுவரன் பற்றி நான் எழுதிய ஒரு வரி, அவருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
-தொடரும்- ஆர். பிரபாகரன்
