/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!
/
கவிதைச்சோலை - உதிர்ந்து போன நட்புகள்!
PUBLISHED ON : ஆக 04, 2024

முட்களாக குத்தும்
விஷமிக்க வார்த்தைகள்
வலிமையான இதயத்தையும்
வலிக்கச் செய்யும்!
கள்ள கபடமில்லாமல்
சிரித்து பழகும்
உயர்ந்த குணம்
உள்ளத்தில் இல்லையென்றாலும்
மனங்களை ரணமாக்காமல்
சிந்தித்து பேச வேண்டும்!
* நெஞ்சை உலுக்கும்
நஞ்சு பேச்சுகள்
பிஞ்சு உள்ளத்தையும்
புரட்டி போடும் என்பதால்
நயமான வார்த்தைகள்
நரம்பில்லாத நாக்கிலிருந்து
புறப்பட வேண்டும்!
* சமுதாயத்திற்கு ஒத்துவராத
சபிக்கப்பட்ட வார்த்தைகளை
சபை நடுவில் பேசும்போது
சங்கடங்கள் முளைத்து
சந்தி சிரிக்க வைத்துவிடும்!
* சொந்த பந்தங்கள்மனம்விட்டு பேசுமிடத்தில்
விஷமத்தனத்தை சொருகி
உறவை விரிசலாக்கி
அப்பளம் போல நட்பை
நொறுங்க செய்ய வேண்டாம்!
* சகிக்க முடியாத வார்த்தைகளை
சம்பந்தமே இல்லாத இடத்தில்
சரியென நினைத்து
உளறி கொட்டும் போது
வெறுப்பை நாமாக
விலை கொடுத்து
வாங்க வேண்டியிருக்கும்!
* உயர்ந்த சிந்தனைகள்
உறவுகளை பிரிப்பதில்லை
உதிர்ந்துபோன நட்புகள்
லட்சியத்தை தொடுவதில்லை!
- எல்.மூர்த்தி, கோவை.