/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: முயற்சி என்னும் மூச்சு!
/
கவிதைச்சோலை: முயற்சி என்னும் மூச்சு!
PUBLISHED ON : மே 04, 2025

எழ முயற்சிக்கும்
விதைகள் தான்
விருட்சமாக வளர்கின்றன!
ஓட முயற்சிக்கும் தண்ணீர் தான்
ஓடையாக உருவெடுத்து
நதியாக ஓடுகிறது!
நீர் தேட முயற்சிக்கும் வேர்கள் தான்
ஆலமரத்தை ஆயிரம் காலம்
நிற்க வைக்கிறது!
கற்கால மனிதனின்
சிக்கி முக்கி முயற்சி தான்
நெருப்பை கண்டுபிடித்தது!
சிலந்தியின் விடாமுயற்சி தான்
ராபர்ட் புரூசின்
வெற்றிக்கு வழிகாட்டியது
வாழ்க்கைக்கு ஒளியூட்டியது!
மின்மினிப் பூச்சியின்மின்னும் முயற்சியில் தான்
அந்த இனமே அடையாளம் தெரிகிறது!
மீண்டும் மீண்டும் வரைய நினைக்கும் விரல்கள் தான்
ஓவியங்களை உருவாக்குகின்றன
உண்டு விட்டு உறங்குகிற விரல்கள்
வீக்கம் கண்டு வீணாகின்றன!
முயற்சி இல்லாத கற்பாறைகள்
நகர்ந்து போனதாக வரலாறு இல்லை
தகர்ந்து போனதாக சரித்திரம் உண்டு!
முயற்சி என்னும் மூச்சில் தான்
மனித குலம்
முன்னேறிக் கொண்டிருக்கிறது!
முயற்சிப்போருக்கு
வானம் வசப்படுகிறது - அவர்களை
உலகம் கொண்டாடுகிறது!
- என்.ஆசைத்தம்பி, ஆவடி.தொடர்புக்கு : 98411 66883

