/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: துரத்திப் பிடியுங்கள்!
/
கவிதைச்சோலை: துரத்திப் பிடியுங்கள்!
PUBLISHED ON : மே 25, 2025

எத்தனை குழப்பங்கள்
வந்தாலென்ன
அழுதிட நேரம் ஒதுக்காமல்
தீர்வுக்காக சிந்தியுங்கள்!
எத்தனை பிரச்னைகள்
நேர்ந்தாலென்ன
அஞ்சிட சமயம் பார்க்காமல்
சமாளிக்க பழகுங்கள்!
எத்தனை வேதனைகள்
வதைத்தாலென்ன
புலம்பிட ஆட்கள் தேடாமல்
கடந்து போக நினையுங்கள்!
எத்தனை சச்சரவுகள்
சூழ்ந்தாலென்ன
பகைத்திட வார்த்தை விடாமல்
சமாதானம் கடைபிடியுங்கள்!
எத்தனை தோல்விகள்
தொடர்ந்தாலென்ன
விலகிட முடிவு எடுக்காமல்
துணிவாக முயலுங்கள்!
எத்தனை அவமானங்கள்
நிகழ்ந்தாலென்ன
முடங்கிட இடம் நாடாமல்
யாரென நிரூபியுங்கள்!
எத்தனை போட்டிகள்
முளைத்தாலென்ன
சிறிதும் நம்பிக்கை இழக்காமல்
திறமையை புடமிடுங்கள்!
எத்தனை ஏமாற்றங்கள்
கிடைத்தாலென்ன
அரிதான வாய்ப்பு நழுவாமல்
துரத்திப் பிடியுங்கள்!
- இந்திராணி ஆறுமுகம், புவனகிரி, கடலுார்.