
விராட் கோலி, 'கெட்-அப்'புக்கு மாறிய, சிம்பு!
இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலி தன்னை மிகவும் கவர்ந்தவர் என்பதால் அவரைப் போலவே தாடி வைத்து தன், 'கெட்-அப்'பை மாற்றியுள்ளார், சிம்பு. அது மட்டுமின்றி, விராட் கோலியின் வாழ்க்கை வரலாறை படமாக்கினால் அதில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும், சில இயக்குனர்களிடம், 'ஸ்கிரிப்ட்' தயாரிக்குமாறும் கூறியுள்ளார், சிம்பு. அதோடு, அந்த படத்தில் கட்டாயமாக எனக்கு ஜோடியாக, த்ரிஷா தான் நடிக்க வேண்டும் என்றும் அவர் பெயரை முன்பதிவு செய்கிறார்.
— சினிமா பொன்னையா
கணவருக்கு நன்றி சொல்லும், சுவாசிகா!
வைகை, கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில், 'ஹீரோயின்' ஆக நடித்த மலையாள நடிகை சுவாசிகா, திருமணத்திற்கு பிறகு தமிழில் நடித்த, லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் பிசியாகி விட்டார். அதையடுத்து, சூரியுடன், மாமன் படத்தில் நடித்தவர் நடிப்புக்காக விருதுகளும் பெற்று வருகிறார். 'இதற்கு முக்கிய காரணம் என் கணவர் பிரேம் தான்...' என்று கூறும் சுவாசிகா, 'எனக்கு பின்னால் இருந்து அவர் என்னை உற்சாகப்படுத்துகிறார். அதனால் தான் திருமணத்திற்கு பிறகும் என்னால் சினிமாவில் சாதிக்க முடிகிறது...' என்று அவருக்கு நன்றி சொல்கிறார்.
— எலீசா
நயன்தாராவுக்கு அதிர்ச்சி கொடுத்த, ஷாருக்கான்!
ஷாருக்கான் நடித்த, ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில், 'என்ட்ரி' கொடுத்த, நயன்தாரா, டங்கி படத்திற்கு பின், அவர் நடிக்கும் புதிய படத்தை கைப்பற்ற தீவிரம் காட்டினார். அதற்கு, 'படப்பிடிப்பு துவங்கும் போது பார்க்கலாம்...' எனக் கூறியிருந்தார், ஷாருக்கான்.
இதனால், மீண்டும் ஷாருக்கானுடன் நடிக்கப் போகிறோம். தன் மார்க்கெட்டில் புதிய பரபரப்பு ஏற்படப் போகிறது என, அந்த அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்தார், நயன்தாரா. ஆனால், கடைசி நேரத்தில் அந்த படத்துக்கு ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்து, நயன்தாராவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்து விட்டார், ஷாருக்கான்.
எலீசா
ஜான்வி கபூரின் ஆசை!
ஹிந்தி படங்களில் நடித்து வரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்விகபூர், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து தமிழுக்கும் வரப்போகிறார்.
அதோடு தன் அம்மா ஸ்ரீதேவி தமிழில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படங்களை பார்த்து ரசித்து வரும், ஜான்வி கபூர், அதுபோன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னையும் நடிக்க வைப்பதற்கு தமிழ் இயக்குனர்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.
எலீசா
ரஜினி -- கமலிடம் 'கேங்ஸ்டர்' கதை சொன்ன லோகேஷ் கனகராஜ்!
கமலை வைத்து, விக்ரம் படத்தை இயக்கிய, லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினியை வைத்து, கூலி படத்தை இயக்கி வருகிறார். அடுத்து, ரஜினி - -கமல் இருவரையும் இணைத்து, ஒரு படம் இயக்க ஆசைப்பட்டவர், சமீபத்தில் அவர்களை சந்தித்து, 'கேங்ஸ்டர்' கதையை சொல்லி இருக்கிறார்.
ஆனால், அதை கேட்டு விட்டு நன்றாக இருப்பதாக சொன்ன ரஜினி மற்றும் கமல் இருவருமே, அந்த படத்தில் இணைந்து நடிப்பது குறித்து, எந்த பதிலும் சொல்லவில்லையாம். இருப்பினும், அவர்களிடமிருந்து நல்ல பதில் வரும் என, தான் காத்திருப்பதாக சொல்கிறார், லோகேஷ் கனகராஜ்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ஆரம்பத்தில் தான் நடிக்கும் கடைசி படத்தில், மற்ற அரசியல்வாதிகளை, 'அட்டாக்' பண்ணும் காட்சியோ, வசனங்களோ இருக்க கூடாது என்று இயக்குனருக்கு உத்தரவு போட்டிருந்தார், தளபதி நடிகர். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய கட்சியை, 'அட்டாக்' பண்ணும் வகையில் சில காட்சிகள் மட்டுமின்றி, 'டயலாக்'குகளையும் இணைக்குமாறு கூறி இருக்கிறார். தானே சீன், டயலாக்கை உருவாக்கியும் கொடுத்துள்ளாராம். அந்த குறிப்பிட்ட சீனில் அவர் பேசும், 'பஞ்ச் டயலாக்' தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பும் என்று அப்படக் குழுவினர் கூறுகின்றனர்.
சினி துளிகள்!
* விஜயின், ஜனநாயகன் படத்தில், பூஜாஹெக்டே கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், தற்போது, ஸ்ருதிஹாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பெரும்பாலும் நடிகர்கள், தாங்கள் நடித்த படம் வெற்றி பெற்று விட்டால், சம்பளத்தை உயர்த்தி விடுவர். ஆனால், சசிகுமாரோ, தான் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை உயர்த்தவில்லை என்கிறார்.
அவ்ளோதான்!