PUBLISHED ON : மே 25, 2025

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி, கந்தன், கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தான்.
அந்த ஊருக்கு, சன்னியாசி ஒருவர் வந்திருந்தார்.
கந்தனும் அவரை சென்று தரிசித்தான்.
'ஐயா! நான் சிறுவயதிலிருந்தே ஊமையாக இருக்கிறேன். எனக்கு பேசும் சக்தி வர, நான் எந்த கடவுளை வழிபட வேண்டும்?' என, சைகையால் கேட்டான்.
'நீ ஊமையாக இருப்பது, உன் விதி. அதை எந்த கடவுளாலும் மாற்ற முடியாது...' என, பதிலளித்தார், சன்னியாசி.
'ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்...' என, மீண்டும் கெஞ்சினான், கந்தன்.
வேறு வழியின்றி, தன் குடிலின் பின்புறம் சென்று, கழிவுநீரில் கிடந்த சிறிய கல்லை எடுத்து வந்து கந்தனிடம் கொடுத்தார், சன்னியாசி.
'இது கல்லல்ல. பேச்சு வரவழைக்கும் தெய்வம். இதை நீ முறையாக வழிபட்டு வந்தால், உனக்கு பேசும் சக்தி கிடைக்கும்...' என்றார்.
அந்த கல்லை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றான், கந்தன்.
அவன் சென்றதும், 'நான் எதைச் சொன்னாலும் நம்புகிறானே, இந்த முட்டாள். சாகும் வரை இவனுக்கு பேச்சு வரப்போவதில்லை. இனி, நம்மிடம் வந்து எந்த தொல்லையும் கொடுக்க மாட்டான்...' என்றெண்ணி, தனக்குத்தானே சிரித்துக் கொண்டார், சன்னியாசி.
முதலில், அந்த கல்லை நன்றாக கழுவி சுத்தப்படுத்தினான், கந்தன். அதற்கு வாசனை திரவியங்களை பூசி, சுத்தமான பீடத்தின் மேல் அதை வைத்தான்.
தனக்குப் பேச்சு சக்தி கொடுக்கும்படி, தினமும் அந்த கல்லுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தான். அந்த கல்லை, பேசும் சக்தி கொடுக்கும் கடவுளாகவே நம்பினான், கந்தன்.
ஆண்டுகள் கடந்தன.
அவனது உண்மையான பக்தியையும், முறையான வழிபாட்டையும், திடமான நம்பிக்கையையும் கண்டு வியந்த இறைவன், அந்த கல்லுக்கு சக்தியையும் கொடுத்தார். இதன் காரணமாகவே விரைவிலேயே அவனுக்கு பேசும் சக்தியும் கிடைத்தது.
கந்தன் பேசுகிறான் என்ற தகவல், ஊர் முழுவதும் பரவியது. அந்த கல்லை அதாவது, விக்ரகத்தை ஊரில் உள்ள அனைவரும் வந்து வழிபட்டு சென்றனர்.
இதையறிந்து, அந்த விக்ரகத்தை நேரில் வந்து தரிசித்தார், அந்நாட்டு அரசர். அங்கு, அந்த கடவுளுக்கு கோவில் ஒன்றை கட்ட உத்தரவிட்டார்.
இதை கேள்விப்பட்ட சன்னியாசி, 'கழிவுநீரில் கிடந்த கல், எப்படி கடவுள் ஆனார்...' என, வியப்படைந்தார்.
அப்போது வானில் ஓர் அசரீரி ஒலித்தது...
'முட்டாள் சன்னியாசியே... உனக்குத்தான் அது கல்; கந்தனுக்கு அதுதான் கடவுள்...' என்றது.
தன் தவறை உணர்ந்தார், சன்னியாசி.
எதை வழிபடுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வழிபடுகிறோம் என்பதே முக்கியம் என, அறிந்து கொண்டார்.
கடவுளை நாம் எந்த ரூபத்திலும் வழிபடலாம்; உருவமே இல்லாமலும் வழிபடலாம். கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான பக்தியை மட்டும் தான்.
அருண் ராமதாசன்