sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (12)

/

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (12)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (12)

அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (12)


PUBLISHED ON : ஆக 10, 2025

Google News

PUBLISHED ON : ஆக 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழர்கள் ஏன் தமிழ் பேசுவதில்லை?

'டா க்டர், இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது, அவர்கள் தமிழில் பேசிக் கொள்ளாமல், இங்கிலீஷில் பேசிக் கொள்கின்றனரே... இதற்கு என்ன காரணம்?' எனக் கேட்டார், சிவாஜி.

'சிவாஜி! நீங்க சீரியசாக கேட்கறீங்களா? இல்லை, ஜோக்கா கேட்கறீங்களா?' எனக் கேட்டேன்.

ஏன் இந்த கேள்வி என்றால், சிவாஜி நிறைய நேரங்களில் நகைச்சுவையாக பேசுவார்; கேள்விகள் கேட்பார்.

'ஜோக் இல்ல டாக்டர். சீரியசா தான் கேட்கிறேன். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது, ஏன் தாய்மொழி தமிழில் பேசிக் கொள்வதில்லை? இதுக்கு நீங்க கண்டிப்பாக பதில் சொல்லணும்...' என்றார்.

'இங்கிலீஷ் தெரியும் என்பதை காட்டிக் கொள்ளவும், இங்கிலீஷ்ல பேசுவது கவுரவம்ன்னு, அவங்க நினைக்கிறதும் தான் காரணம்னு நினைக்கிறேன்...' என்றேன்.

'இல்லை டாக்டர். நீங்க சொல்றதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். உங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும். நீங்களும் முப்பது வருஷமா அமெரிக்காவுல இருக்கீங்க. ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். ஆனாலும், நீங்க இன்னொரு தமிழரைப் பார்த்தால், தமிழ்ல தானே பேசறீங்க, இங்கிலீஷ்ல பேசுறதில்லையே...' என்றார்.

உண்மை தான். நான் தமிழர்களை சந்தித்தால், தமிழ்நாட்டுக்கு வந்தால், தமிழ் தான். ஆங்கிலம் பேசுவதை தவிர்ப்பேன். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவேன்.

'டாக்டர், உங்களுக்கும், அமெரிக்காவில் வசிக்கிற தமிழர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்... தமிழ் எத்தனை பழமையான மொழி. எத்தனை இனிமையான மொழி. நம்மோட தாய் மொழி. அதை பேச தயங்கக் கூடாது.

'நீங்களும், இங்கே இருக்கும் மற்ற தமிழர்களும், வீட்டில் குழந்தைகளிடம், சக தமிழர்களிடம் எப்போதும் தமிழில் தான் பேசணும். உங்க வீடுகள்ல தமிழ் தான் ஒலிக்கணும்...' என, தமிழ் மேல் உள்ள பாசத்துடன் சொன்னார்.

என்னிடம் மட்டுமல்ல, அவர் பங்கேற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியிலும், தமிழில் உரையாடுவது குறித்து பேசினார், சிவாஜி.

'நீங்க எல்லாரும் தமிழ் எழுத படிக்க கற்று, பண்டிதர்களாக வேண்டும் என்றோ, பழந்தமிழ் இலக்கியங்கள் படித்து, தமிழ் புலமை பெற்று, புலவர்களாக விளங்க வேண்டும் என்றோ, நான் சொல்லவில்லை.

'உங்க வீட்டில் மற்றவர்களோடு குறிப்பாக, மனைவி, பிள்ளைகளோடு தமிழிலேயே பேசுங்கள். சக தமிழர்களுடன் தமிழில் பேசுங்கள். தமிழை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். எனக்கு தமிழ் தெரியாது என்றோ, என் பிள்ளைகளுக்கு தமிழே தெரியாது என்றோ, பெருமையோடு சொல்லாதீர்கள். இது, ஒரு தமிழனாக என்னுடைய வேண்டுகோள்...' என, கைகூப்பி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

சிவாஜியின் இந்த பேச்சு, அரங்கத்தில் இருந்த அனைவரது மனதையும் தொட்டது.

'டா க்டர், எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...' என, மற்றொரு நாள், இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

அவர் கேட்ட அந்த கேள்வி, என்னை சிந்திக்க வைத்தது. சிவாஜி இப்படியெல்லாம் யோசிக்கிறாரே என, வியக்க வைத்தது.

சிவாஜி என்னிடம் கேட்டது இந்த கேள்வி தான்...

'மனிதர்கள் நல்லா இருக்கும் போது, அவர்களிடம் சகஜமாக பழகுகிறோம், பேசுகிறோம். ஆனால், அவர்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும் போது வாந்தி எடுக்கின்றனர், இன்னும் சிலருக்கு மோசமான வியாதிகள் வந்து விடுகிறது.

'அந்த சமயத்தில் எல்லாம் சக மனிதர்கள், அவர்களை நெருங்கவே தயங்குகின்றனர். ஆனால், டாக்டர்கள் மட்டும் எப்படி துளியும் அருவருப்பு இல்லாமல், அவர்களை நெருங்கி, தொட்டு சிகிச்சை அளிக்கின்றனர்? இந்த சகிப்புத்தன்மை எப்படி உங்களை போன்ற டாக்டர்களுக்கு வருகிறது?'

இந்த கேள்வியை நான், சிவாஜியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நானும் இது போன்ற கோணத்தில் யோசித்ததில்லை. எனக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை.

'உண்மையில் இது போன்று நான் யோசித்ததில்லை. கொஞ்சம் டைம் கொடுங்க யோசிச்சுப் பார்க்கிறேன்...' என்றேன்.

எனக்கு சில கருத்துக்கள் தோன்றின. அவற்றை, சிவாஜியிடம் பகிர்ந்து கொண்டேன். நான் சிவாஜியிடம் சொன்னது இது தான்...

'மருத்துவக் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கு, ஆரம்பம் முதலே மருத்துவமனை சூழல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அங்கே பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வருகின்றனர்.

'ஆண்கள், பெண்கள், ஏழைகள், வசதியானவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என, பலதரப்பட்ட மக்களும் வருகின்றனர். மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், இவர்களிடம் தான் நேரடி மருத்துவப் பயிற்சி பெறுகின்றனர்.

'மருத்துவமனைகளில் பலவித நோயாளிகளைப் பார்க்கும் மருத்துவர்களுக்கு, இயற்கையாகவே அவர்கள் மீது ஒரு அக்கறை வருகிறது; பரிவு வருகிறது. அந்த அக்கறையும், பரிவும் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும், நோயாளிகளை அருவருப்பு இல்லாமல் பார்க்க பழக்குகிறது. சிகிச்சையளிக்க தயார்படுத்துகிறது...' என்றேன்.

நான் சொன்னவற்றை கேட்ட, சிவாஜி அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.

ஒரு சில படங்களில் டாக்டராக நடித்திருக்கும் சிவாஜி, டாக்டர்களைப் பற்றி இப்படி புதிய கோணத்தில் சிந்தித்தது, என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சிவாஜி மிகச் சிறந்த நடிகர். அவருக்கு நடிப்பு பற்றி எல்லாம் தெரியும். ஆனால், உலக அறிவு இருக்குமா என்ற கேள்வி பலருக்கு எழும். சினிமா, நடிப்பு தாண்டி அவருக்கு என்ன தெரியும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கலாம்.

ஆனால், சிவாஜி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தார். அதற்கு ஒரு உதாரணம் தான், மேலே மருத்துவர்கள் குறித்து அவர் கேட்ட கேள்வி. எல்லாவற்றை பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பார்.

சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ஹாலிவுட், பிரிட்டிஷ் திரைப்படங்கள் குறித்து நன்கு அறிந்திருந்தார். அவை குறித்து மணிக்கணக்கில் பேசுவார். சினிமா மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் நாடகங்கள் மீதும், அவருக்கு நாட்டம் இருந்தது. அந்த நாடகங்கள் குறித்து பேசுவார். அவற்றை குறித்த அவரது அறிவு பிரமிக்க வைக்கும்.

கடந்த, 1996ல், அமெரிக்காவில் அட்லாண்டா நகரத்தில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. அந்த போட்டிகளை காண அமெரிக்கா வந்தார், சிவாஜி.

சிவாஜியின் ஒலிம்பிக்ஸ் போட்டி அனுபவம்...

அடுத்த வாரம் சொல்கிறேன்.



— தொடரும்

எஸ். சந்திரமவுலி







      Dinamalar
      Follow us