
பலே மோசடி... உஷார்!
சமீபத்தில், உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று உடை மாற்றி, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தேன்.
பெண் ஒருவர், 'மன்னிக்கவும்...' என்றவாறு அருகில் நின்றிருந்த ஒரு பெண்மணியை காட்டி, 'இவங்க பொண்ணு வீட்டுக்காரங்க. வெளியூர்லயிருந்து இப்பத்தான் கல்யாணத்துக்கு வந்தாங்க. எல்லா அறையிலும் ஆட்கள் இருக்கின்றனர். உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, இவங்க உங்க அறையில தங்கிக்க உதவி செய்யுங்க...' என்றார்.
'பரவாயில்லே வந்து தங்கிக்குங்க...' என, அந்த பெண்மணியை உள்ளே அழைத்தேன்.
உள்ளே வந்தவர், 'ரொம்ப துாரம் பஸ்ல நின்றபடியே வந்ததால, களைப்பா இருக்கு. நான் இப்படி ஓரமா கீழே படுத்துக்கிறேன்...' எனக் கூறி, துாங்க ஆரம்பித்தார்.
அதன்பின் நானும் உறங்கி விட்டேன். அதிகாலை நாதஸ்வர சத்தம் கேட்டு விழித்த எனக்கு பேரதிர்ச்சி!
என் சூட்கேஸை காணவில்லை. அதில், விலையுயர்ந்த பட்டுப்புடவையும், 5,000 ரூபாயும் வைத்திருந்தேன். கீழே படுத்திருந்த அந்த பெண்மணியையும் காணவில்லை.
மண்டபம் முழுவதும் அவளையும், அவளை சிபாரிசு செய்த பெண்ணையும் தேடினேன்.
'இப்படித்தாம்மா திருட்டு கழுதைங்க சாமர்த்தியமா உள்ளே புகுந்து, பணம், நகை, புடவைன்னு கையில் அகப்பட்டதை சுருட்டிட்டு, கம்பி நீட்டிடறாங்க. நாங்கள் யாரை சந்தேகிப்பது?' என்றார், மண்டப வாட்ச்மேன்.
பெண்களே... திருமண மண்டபங்களில் இதுபோன்ற பலே திருடிகள், உறவுக்காரர்கள் போர்வையில் உலா வரக்கூடும். எச்சரிக்கையாக இருங்கள்.
பா.அனுமந்த்ரா, கோவூர், சென்னை.
ஊனம் தடையில்லை!
ச மீபத்தில், சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு, ஒரு பொருளின் விலையை, அருகிலிருந்த பெண் ஊழியரிடம் கேட்டேன். அவர், தனக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது என, சைகையால் காண்பித்து, உடனே ஓடோடி சென்று, அங்கு பணியாற்றும் சக ஊழியரை அழைத்து வந்தார். அவரிடம் கேட்டு, விபரம் தெரிந்து கொண்டேன்.
பொருட்கள் அனைத்தையும் வாங்கிய பின், 'பில் கவுன்ட்டரு'க்கு சென்றேன். அங்கு, 'பில்' போடும் ஊழியரும் மாற்றுத்திறனாளியாக இருந்தார். நான் வாங்கிய பொருட்கள் அனைத்துக்கும், 'பில்' போட்டு, அவருடைய வேலையையும் மிகச் சிறப்பாக செய்தார்.
பொருட்கள் அனைத்தையும் வாங்கி, 'லிப்ட்'டில் ஏறினேன். 'லிப்ட்' இயக்குபவரும் கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தார்.
இவ்வாறு அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும், மாற்றுத்திறனாளிகளாக இருந்தது, என் மனதுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறை, உடலில் தானே தவிர, அவர்களுடைய வேலையில் இல்லை.
மாற்றுத்திறனாளிகளால் வேலை செய்ய முடியாது என, வேலை தர மறுக்காமல், அவர்களுக்கு ஏற்றார் போல் வேலை அமைத்துக் கொடுத்தால், அவர்களுடைய வாழ்வாதாரமும் சிறக்குமே!
— எஸ்.ஆஷிக்கா, அதிராம்பட்டினம்.
சினிமா பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தேவையா?
ச மீபத்தில், தமிழ் சினிமா நடிகர் ஒருவர், கல்வி நிறுவனங்களில், திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழாக்களை நடத்தக் கூடாது என, கருத்து தெரிவித்துள்ளார். இது, வரவேற்கக்கூடியது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டு, சினிமா பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது, மாணவர்களின் நேரத்தை வீணடிக்கிறது.
கல்வி கற்பதற்காகவே, கல்வி நிறுவனங்களுக்கு வருகின்றனர், மாணவர்கள். துறை சார்ந்த வல்லுனர்களை அழைத்து, அறிவுப் பகிர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது பயனுள்ளதாக இருக்கும். சினிமா நிகழ்ச்சிகள் தேவையற்றவை.
அதேபோல், சினிமா பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது, கல்வியின் மதிப்பை குறைக்கிறது. அறிஞர்கள், விஞ்ஞானிகளுடன், நடிகர்களுக்கு ஒரே மேடையில் பட்டம் வழங்குவது, கல்வி நிறுவனங்களை வணிகமயமாக்குகிறது.
கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சினிமா நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் கவனத்தை திசை திருப்புவது கூடாது. இதை தடுக்க, உயர்கல்வித் துறை கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
சினிமா பிரபலங்களுக்கு, கவுரவ பட்டங்கள் வழங்குவதை நிறுத்தி, உண்மையான அறிவுத் திறனுள்ளவர்களை பாராட்ட வேண்டும். இதன் மூலம் கல்வியின் உயர்ந்த நோக்கம் பாதுகாக்கப்படும். செய்வரா?
— வீ.குமாரி, சென்னை.

