/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: மொட்டையடித்த கிருஷ்ணர்!
/
விசேஷம் இது வித்தியாசம்: மொட்டையடித்த கிருஷ்ணர்!
PUBLISHED ON : ஆக 10, 2025

ஆக., 16 - கிருஷ்ண ஜெயந்தி
திருப்பதிக்கே லட்டா என, கேட்பர். ஏழுமலையானுக்கு பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பர். ஏழுமலையானே, தன் முந்தைய பிறப்பான கிருஷ்ணாவதாரத்தில், முடி காணிக்கை கொடுத்த வரலாறு தான், கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்...
மதுராவில், வசுதேவர்- - தேவகியின் மகனாகப் பிறந்தார், கிருஷ்ணர். ஆயர்பாடி எனும் கோகுலத்தில், நந்தகோபன்- - யசோதை தம்பதியிடம் வளர்ந்தார்.
ஒரு வயது முடிந்ததும், குழந்தைகளின் முடியை குலதெய்வம் கோவிலில், காணிக்கையாக கொடுப்பது நம்மவர் வழக்கம். கிருஷ்ணருக்கும், வயது ஒன்றானது. யசோதையும், நந்தகோபனும் இதற்காக தேர்ந்தெடுத்தது, அம்பாஜி அம்பே மா அம்மன் கோவில். குஜராத்தில் இந்த கோவில் உள்ளது.
ஆமதாபாத்தில் இருந்து, 196 கி.மீ., துாரத்தில் உள்ளது, அபுரோடு. இங்கிருந்து, 20 கி.மீ., துாரத்தில் உள்ளது, அம்பானி அம்பே மா கோவில்.
கிருஷ்ணர் வளர்ந்த கோகுலத்தில் இருந்து, 746 கி.மீ., துாரத்தில், இவ்வூர் உள்ளது. இவ்வளவு துாரம் கடந்து வந்து, கிருஷ்ணருக்கு மொட்டை போட்டிருக்கின்றனர் என்றால், கோவிலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
மகிஷாசுரன் என்ற அசுரன், தன்னை சிவ, விஷ்ணுவால் கூட கொல்ல முடியாத வரத்தைப் பெற்றான். மமதையால், தேவர்களுக்கு பல துன்பங்கள் செய்தான். வரத்தை தவறாகப் பயன்படுத்துவோரை பார்வதி தேவியால் மட்டுமே அழிக்க முடியும்.
அம்பே மா என்ற பெயர் தாங்கிய, பார்வதி தேவி, அவனை வதம் செய்தாள். பின், இத்தலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.
மற்றொரு வரலாற்றின் படி, சிருங்கி முனிவரின் வழிகாட்டுதல்படி, ராம, லட்சுமணர் இந்த அம்பாளை வணங்கி, அஜய் என்னும் ஆயுதத்தைப் பெற்றனர். இதை கொண்டு, ராவணனை அழித்தனர். ஆக, அசுரத்தனத்தை அழித்து சாந்தமே உயர்ந்தது என, உலகுக்கு உணர்த்தியவள், அம்பே மா.
இந்த கோவிலுக்கு, கிருஷ்ணரை அழைத்து வந்தனர், அவரது பெற்றோர். அம்பாளுக்கு, கிருஷ்ணரின் முடியை காணிக்கையாக செலுத்தினர். இதையடுத்து குஜராத் மக்கள், இன்று வரை இந்த அம்பாளுக்கே, தங்கள் ஆண் குழந்தைகளின் முடியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
கிருஷ்ணர், இங்கு முடி காணிக்கை செலுத்தியதால், பெண் குழந்தைகளுக்கு முடி காணிக்கை கொடுக்க அனுமதி இல்லை. இங்கு மொட்டை போடும் குழந்தைகள், கிருஷ்ணரைப் போல புத்திசாலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணர் முடி எடுத்த இடம், கோவிலில் இருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள கபார் மலை ஆகும். இந்த மலையில், மகிஷாசுரமர்த்தினி கோவில் இருக்கிறது.
இங்கே இன்னொரு விசேஷம்... அம்பாளுக்கு சிலை கிடையாது. தங்கத்தில் உருவான யந்திர வழிபாடே இங்கு உள்ளது. இதை, 'விஷ யந்த்ரம்' என்பர். யந்திரத்தை, 'மார்பிள் பிளேட்'டில் பொருத்தி அலங்கரித்திருக்கின்றனர்.
துாரத்தில் இருந்து பார்க்க, அம்பாள் முகம் போல இருக்கும். அருகில் சென்று பார்க்க விரும்பினால், பேண்டேஜ் துணியால் கண்ணைக் கட்டி அழைத்துச் செல்வர். அதீத சக்தி வாய்ந்த யந்திரம் என்பதால், இந்த ஏற்பாடு.
கிருஷ்ணர் முடி காணிக்கை தந்த இந்த கோவிலுக்கு, கிருஷ்ண ஜெயந்தியன்று சென்று வருவோமா!
தி. செல்லப்பா

