
மக்கள் நெருக்கம் மிகுந்தது கோல்கட்டா நகரம். மக்கள் கூட்டத்தை விலக்கி, ஒரு குதிரை வண்டி வேகமாக ஓடியது. வண்டியினுள் நடுத்தர வயது பெண்மணியின் மடியில், குழந்தை ஒன்று இருந்தது.
குதிரை திடீரென்று நான்கு கால் பாய்ச்சலில் வேகமாக ஓட, துாக்கியெறியப்பட்டு கீழே விழுந்தான், வண்டிக்காரன். வண்டியினுள் உட்கார்ந்திருந்த அந்த பெண் பதறி, கதறினாள்.
ஒரு கையில் குழந்தையும், இன்னொரு கையில் வண்டியின் சட்டத்தையும் பிடித்து உட்கார்ந்திருந்தாள்.
சாலையில் குதிரை வண்டி பறந்து கொண்டிருந்தது.
'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என, கத்தினாள், அந்த பெண். அவளின் குரலுக்கு எவரும் செவி சாய்க்கவில்லை.
அப்போது, ஏறத்தாழ, 15 வயது சிறுவன், அக்குரலை கேட்டான். எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என, நினைத்தான். துடிப்பு மிக்க அச்சிறுவன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல பாய்ந்து, குதிரை வந்த திசையை நோக்கி ஓடினான்.
குதிரை மீது தாவி ஏற முயன்றான். ஆனால், குதிரை துள்ளிக்குதித்து முதுகை நெளித்து, அவனை கீழே தள்ளி விட்டு ஓடியது. மீண்டும் எழுந்து, அவன் முன் போலவே முயற்சி செய்தான். முயற்சிகளை தொடர்ந்து செய்தான்.
சிறுவனின் முகம், கை, கால்கள், உடல் முழுவதும் காயங்கள். ரத்தம் கசிந்தாலும் அவன் சிறிதும் கவலைப்படவில்லை. கடைசியில் குதிரை மீது ஏறி, வண்டியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவள், பெருமூச்சு விட்டு கீழே இறங்கினாள். அதுவரை சாலையோரம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம், விரைந்தோடி வந்து வண்டியை சூழ்ந்து கொண்டது. அனைவரும், அச்சிறுவனின் மன உறுதியை பாராட்டினர்.
அவனோ எவருடைய புகழ் மொழிக்கும் மயங்கவிலை. தான் செய்தது அரும்பெரும் செயல் என்பதை பற்றி சிறிதும் நினைக்கவில்லை. பின்னர், தான் செல்ல வேண்டிய பாதையில், தன் நடையை துவங்கினான்.
அந்த வீரச் சிறுவன், விவேகானந்தர்.
**********
சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரை தெரியவில்லை.
நான் கவனித்து, ஓடிப்போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா. நானும், உங்களை மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ சினிமாவில் பாட்டு எழுதுகிறேன். என் பேர், வாலி...' என, அறிமுகப்படுத்தி கொண்டு, அவரை வணங்கினேன்.
'ஓ... நீங்க தான் வாலியா?' என, என் கைகளை பற்றினார். அவர் தொட மாட்டாரா என, தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் உண்டு. இன்று அவர், என்னை தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.
அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில் நிலையத்தில், ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினரோ, அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல், தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையை பார்த்து, அதிர்ந்து போய் விட்டேன். காலம் எப்படியெல்லாம் தன் ஆளுமையைக் காட்டுகிறது? அந்த பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.
அன்று, எழும்பூர் ரயில் நிலையத்தில், எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர், தமிழ் சினிமாவின் முதல், 'சூப்பர் டூப்பர் ஸ்டார்' எம்.கே.தியாகராஜ பாகவதர்.
இது போன்று, கண்ணகி படத்துக்கு உரையாடல் எழுதிய பிரபல எழுத்தாளர், இளங்கோவன், நடிகர் சந்திரபாபு மற்றும் நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோரின் வாழ்க்கையும் பலருக்கு பாடம் புகட்டியது.
இவர்களை விடவா நான் மேலானவன்? அன்று முதல் நான், 'நான்' இல்லாமல் வாழப் பயின்றேன்.
- இப்படி எழுதியிருந்தவர், கவிஞர் வாலி.
நடுத்தெரு நாராயணன்