
ராஜா டீக்கடை. அந்த ஏரியாவில் பிரசித்தம். அதை தன் மகன், ராஜா பெயரில், நடத்தி வந்தார் , அவனது அப்பா . இன்றும், பித்தளை டம்ளர் பயன்படுத்துவது தான், மற்ற கடைகளுக்கும், உள்ள வித்தியாசம்.
பிளஸ் 2 தேர்வு எழுதி காத்திருந்த ராஜாவுக்கு, குடும்பத்தின் வேறொரு சோக முடிவு குறுக்கே வந்தது.
தந்தையின் திடீர் மரணம். அம்மாவுக்கு ஏதும் புரியவில்லை. உறவுகள் பெரிதாக உதவவில்லை. அந்த, 16 வயதில், துணிந்து முடிவெடுத்தான், ராஜா. படித்து, டேபிள் சேரில் அமர்ந்து வேலை பார்ப்பது தான் கவுரவமா? ஏன் சுய தொழிலும் பெருமை தானே என்றெண்ணி, அப்பாவின் டீக்கடையை தொடர்ந்து நடந்த ஆரம்பித்தான்.
வருமானமும் திருப்தியாக இருக்க, 'ஏன் ஆள் போட்டு நடத்தலாமே...' என்ற ஆலோசனையை மறுத்தான். காலம், அவனுக்கேற்ற ஒரு பெண்ணையும் மனைவியாக்கியது. வாரிசையும் தந்தது.
அன்று கடையில் நல்ல கூட்டம்.
''அண்ணே ரெண்டு டீ...'' என, ராஜாவிடம் சொல்லி, நண்பன் முரளியின் தோளை தட்டி, ''டீ சும்மா திக்கா பைவ் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கும்,'' என்றான், விஜய்.
''உண்மை தான். பளபளன்னு டம்ளரே அசத்துதே,'' என , ஆமோதித்தான், முரளி.
தனி அறையில் தங்கி, மூன்று ஆண்டுகளாக தனியார் வங்கி ஒன்றில், வேலை பார்த்து வருகிறான், விஜய். அவனுடைய கல்லுாரி தோழன், முரளி. பெரிய சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில், வேலைக்காக எழுத்துத்தேர்வு எழுதி, நேர்காணலுக்கு செல்ல வேண்டிய நிலையில், உள்ளவன்.
டீ வந்தது.
''சூப்பர்டா,'' ஒரு வாய், 'சிப்'லேயே புகழ்ந்தான், முரளி.
''சமயத்துல ரெண்டு டீ கூட குடிப்பேன்,'' என, சிரித்தபடி சொன்னான், விஜய்.
அப்போது, ராஜாவின் மொபைல்போனில், 'காட்டுக்குயிலே...' பாடல் ஒலிக்க, எடுத்தான். எதிர்முனை பேச்சை கேட்டு, கடையிலிருந்து எட்டிப் பார்த்தான்.
பிறகு, சூடாக ஒரு டீ போட்டு, தன் உதவியாளரிடம், ''கொஞ்சம் பார்த்துக்க,'' எனச் சொல்லி, கடையை விட்டு நடந்தான்.
வி ஜயும், முரளியும் டீ குடித்து, டம்ளரை ஓரமாக வைத்து, கடையை விட்டு வெளியேறினர். கடையிலிருந்து, 100 மீட்டர் தள்ளி, ' ஆடி ' காரில் வந்தவரும், டீக்கடை ராஜாவும் பேசிக் கொண்டிருந்ததை கண்டு, ''டேய், விஜய். கொஞ்சம் நில்லு,'' என, திகைப்போடு பதட்டம் கலந்து சொன்னான், முரளி.
''என்னடா,'' என கேட்டான், விஜய்.
அந்த காரை காண்பித்து, ''அங்க பாரு அது, அந்த டீ கடைக்காரர் தானே?'' என கேட்டான், முரளி.
''அட ஆமா. இவரு, ராஜா தான்,'' என உற்றுப்பார்த்தபடி, சந்தேகமாக முணுமுணுத்தான், விஜய்.
''டேய், அதைவிட இன்னொரு, 'சர்ப்ரைஸ்' தெரியுமா? இந்த ராஜா கூட பேசிக்கிட்டிருக்கிறது யாரு தெரியுமா?'' என்றான்.
உதட்டை பிதுக்கினான், விஜய்.
''இது மிஸ்டர் பத்மநாபன். 'குளோபல் சாப்ட்வேர் சொல்யூஷன்' எம்.டி., கம் ஓனர்டா. அது , ' வேர்ல்ட் வைட் ' கம்பெனி. இவரு இந்தியாவுலேயே கொஞ்ச நாள் தான் இருப்பாரு. ஐரோப்பிய நாடுகளில் தான் வேலை. 'கூகுள்'ல போய் பாரு மிரண்டு போவ,'' என, ஆச்சரியம் குறையாமல் பேசினான், முரளி.
''அப்படியா சரி. இவரு எப்படி, ராஜாவை கூப்ட்டு வெச்சு பேசறாரு?'' என, விஜயும் வியந்தான்.
''இதைவிட இன்னொரு ஆச்சரியம். இவரோட நிறுவனத்தில் தான், நான், ' இன்டர்வியூ அட்டென்ட் ' பண்ணிகிட்டிருக்கேன். நேத்து போன ஆபிஸ்ல இவரு படம் , பெரிய போட்டோவில் இருந்தது. என்ன இருந்தாலும் இந்த டீக்கடைக்காரர்கிட்ட அப்படி என்ன பேச்சு. இந்த எம்.டி.,க்கு?''
''ஏன்டா, தெரிந்தவரா கூட இருக்கலாமே?''
''போடா அவரு எங்க. இவரு எங்க? இப்படியா கடைய தேடிகிட்டு வந்து பேசுவாரு. புரியல கொஞ்சம் இரு. இந்த டீக்கடைக்காரர், பேசிட்டு வந்ததும் விசாரிப்போம். உனக்கு பழக்கம் தானே?'' என்றான், முரளி.
''நல்ல பழக்கம் தான். கேட்கலாம். இப்ப வேண்டாம் கடையில கூட்டம் குறையட்டும் அப்பறமா வரலாம் , '' என்றான் , விஜய்.
ந ண்பர்கள் இருவரும் காரை ஆச்சரியமாக பார்த்தபடி கடந்தனர். அறைக்கு சென்ற பின்னரும், ''வா, விஜய்... எனக்கு அந்த டீக்கடைக்காரர் கூட பேசணும். ரொம்ப ஆர்வமா இருக்கு,'' என்றபடியே இருந்தான், முரளி.
''இரு கடையில கூட்டம் குறையட்டும்,'' என, ஒரு மணி நேரம் தள்ளிப்போட்டு, பிறகு கிளம்பினான், விஜய்.
கடையில், ஒருவர் மட்டுமே, டீ குடித்துக் கொண்டிருந்தார். ஓய்வாக ஒரு ஸ்டுலில், அமர்ந்திருந்தார், ராஜா.
நண்பர்கள் அவரை நெருங்கினர்.
''டீயா...'' என, கேட்டார், ராஜா.
'இல்ல... ஒண்ணு கேக்கணும்...' என்றனர்.
இருவரையும் கொஞ்சம் வியப்பாக பார்த்தவர், ''ம்...'' என்றார்.
''வந்து, காலையில உங்கள, ஒருத்தரோட காருக்குள்ள பாத்தோம். அது விஷயமா,'' என, தயங்கியபடி, கேட்டான், விஜய்.
ஏதோ யோசித்தபடி, ''சரி, அதுக்கென்ன?'' என்றார், ராஜா.
''அதுக்கென்னவா. அவரு, 'பிக் ஷாட்'டுங்க. ஆனா, நீங்க சர்வ சாதாரணமா பேசிக்கிட்டிருக்கீங்க. அவரும் டீய குடிக்கிறாரு. இதை பத்தி தெரியலேன்னா, என் மண்டை வெடிச்சிடும்ங்க. ப்ளீஸ் சொல்லுங்க. அவரை எப்படி தெரியும்?'' என, படபடத்தான், முரளி.
''தம்பி, ஏன் பதறுறீங்க? இதை போய் உலக அதிசயமாட்டம் கேக்கறீங்க?''
''ஆமாங்க, உலக அதிசயம் தாங்க. சுமார், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரருங்க அவரு. இந்தியாவுல, 100 வி.ஐ.பி.,ல, ஒருத்தரு. அவரு, 'அப்பாய்ன்ட்மென்ட்'டுக்கு லட்சம் பேர் காத்துக்கிட்டிருக்காங்க.
''அவரை நம்பி , லட்சம் குடும்பமாவது வாழ்ந்துகிட்டிருக்கு. அவரோட நீங்க, உங்க டீய அவரு குடிக்கிறாரு. இதெல்லாம் உண்மைன்னு நம்ப முடியல. சொல்லுங்க, உங்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?'' என , கேட்டான், முரளி.
''இதை நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?'' என்றார், ராஜா.
''ஐயா, ஐயா அப்படி கேக்காதீங்க. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்,'' என , கெஞ்சினான், முரளி.
''அண்ணே, ப்ளீஸ். ரொம்ப கெஞ்ச விடாதீங்க. எனக்கும் கூட ஆர்வமாத்தான் இருக்கு? ப்ளீஸ் சொல்லுங்களேன்,'' என, வற்புறுத்தினான், விஜய்.
''சொல்றேன்,'' என்ற ராஜா , தொடர்ந்தார்...
''தம்பி, பத்மநாபன பத்தி நீ சொன்னதுல பாதி தான் உண்மை. அவனோட, சொத்து மதிப்பு, 50 ஆயிரம் கோடி ரூபாயை எப்பவோ தாண்டியாச்சு. கம்ப்யூட்டர் பிசினஸ் மட்டுமில்ல. ரியல் எஸ்டேட்லயும் புகுந்தாச்சு. அத, அவனோட அம்மா பேர்ல ஆரம்பிச்சிருக்கான். இங்க இல்ல ஐரோப்பாவில்.
''இந்தியாவுல எல்லா , ' ஸ்டேட் ' லயும், ஒரு ' ஸ்டார்ட் அப் டெக்ஸ்டைல் ' ஆரம்பிக்க போறான். அவனோட அறிவுக்கும், குணத்துக்கும் சீக்கிரம் உலகத்தோட முதல், 10 பணக்காரங்கள்ல ஒருத்தனா வருவான். இது நிச்சயம்.''
கண்களை, வாயை மூடவில்லை , முரளி. என்ன அவன் இவன் என்கிறார். நடுவில் குறுக்கிடாமல் ராஜாவை பார்த்தபடி இருந்தனர்.
''சரி, எனக்கும், அவனுக்கும் என்ன தொடர்புன்னு தான யோசிக்கறீங்க. உங்களுக்கே புரிஞ்சிருக்கணுமே. புரியல? நான் பத்மநாபனோட பள்ளி நண்பன். நாங்க ரெண்டு பேரும், நல்லாவே படிப்போம்.
''அதைவிட மத்த விஷயத்துலயயும் கூட்டாளிங்க. 'கட்' அடிச்சிட்டு, சினிமா பாப்போம், கம்மாய்ல குளிப்போம், தோட்டத்துல, மாங்கா அடிச்சு சாப்பிடுவோம். தண்டவாளத்துல நடந்து போவோம். எவ்வளவோ சொல்லிகிட்டே போகலாம்.
''இதுவரைக்கும் அவன் ஜாதி, எனக்கு தெரியாது. என் ஜாதி, அவனுக்கு தெரியாது. பிளஸ் 2 முடிஞ்சிது. என்னை, மேல படிக்க சொன்னான். என் குடும்ப சூழ்நிலை, டீக்கடைல தங்கிட்டேன். அண்ணா யுனிவர்சிட்டில சேர்ந்தான், அவன். வெளிநாட்ல எம்.எஸ்., பண்ணான். அவன், வீட்ல நல்ல வசதி. எங்கயும் வேலைக்கு போக விரும்பாம, தனியா பிஸினஸ் பண்ண ஆரம்பிச்சான்.
''அவன் திறமைக்கு, அதிர்ஷ்டமும் கை கொடுக்க, 10 வருஷத்துல அசுர வளர்ச்சி. இப்ப எங்கயோ போய்ட்டான். ஆனா, என் மனசுல ஒரு ' ஸ்கூல் பிரண்டா ' தங்கிட்டான். அவனுக்கு எவ்வளவோ வி.ஐ.பி.,ங்க தொடர்பு ஏற்பட்டாலும், ' ஸ்கூல் பிரண்ட் ' ங்கிற இடத்துல, என்னை மட்டும் வெச்சிருக்கான். இதைவிட ஒரு உண்மையான நட்புக்கு வேற என்ன வேணும் தம்பி?
''எப்ப சென்னைக்கு வந்தாலும் என்னை பாப்பான். கடைகிட்ட வரமாட்டான். இது போதுமா தம்பி?'' என, சாதாரணமாக சொன்னார், ராஜா.
இதை கேட்டு, விஜயும், முரளியும் உறைந்து போயினர். கதையில் மட்டுமே கேட்கக் கூடிய விஷயமாக தோன்றியது. புராணத்தில் வேண்டுமானால், கிருஷ்ணர் - குசேலர் இருக்கலாம். இந்த, 21ம் நுாற்றாண்டில் எப்படி சாத்தியம்?
''ஐயா, இன்னொரு சந்தேகம். கேட்டா கோபப்படுவீங்களோன்னு பயமா இருக்கு?'' என, பீடிகையோடு மீண்டும் கேட்டான், முரளி.
''அட, இதுகூடவா புரிஞ்சிக்க முடியாது. உங்க நண்பர் ரொம்ப பெரிய ஆளா இருக்காரு. நீங்க ஏன் இன்னும் கடைல டீ ஆத்தறீங்க. அதத்தான கேட்க வர்றீங்க?'' என்றான், ராஜா.
''ஆமாங்க. சாரோட கம்பெனில , ' கேன்டீன் கான்ட்ராக்ட் ' எடுத்தா கூட, லட்ச லட்சமா சம்பாதிக்கலாமே?'' என, பயந்தபடி கேட்டான், விஜய்.
''கேன்டீன் மட்டுமா? ' செக்யூரிட்டி மேனேஜ்மென்ட், ஆபிஸ் மெயின்டெனென்ஸ் ' ன்னு, இப்படி எவ்வளவோ செய்யலாம். பத்மநாபன் கிட்ட கேட்கவா வேணும். அவன் தயாரா இருக்கான். ஆனா, எனக்கு என்னோட பள்ளியில படிச்ச நண்பனா தான் எப்பவும் வேணும்ன்னு, கறாரா சொல்லிட்டேன்.
''கடைய கூட, ' கார்ப்பரேட் ஆபிஸ் ' மாதிரி வெச்சுத்தரேன்னு சொன்னான். நான் மறுத்துட்டேன். இதெல்லாம் ஆரம்பத்திலேயே செய்ய துடிச்சான்.
''எனக்கு எப்பவும் அவன் தோள் மேல கை போடற, பத்மநாபன் தான் வேணும்ன்னு உறுதியா இருந்தேன். ஆனாலும், அவன் என் வீட்டுக்கு வந்து, 'ஏன்டா சின்ன, 'டிவி' வெச்சிருக்கியேன்னு, 120 அங்குல 'டிவி'ய கொண்டு வச்சான். அதுக்கே, மூணு மாசம் பேசாம இருந்தேன்.
''அப்புறம், என் பையன் ஆசைப்பட்டு, 'டிவி' பாக்கறான்னு பேச ஆரம்பிச்சேன். எங்க நட்பு இன்னும் பழைய நட்பா, உயிர்ப்போட இருக்குன்னா அதுக்கு காரணம், நான் நட்பை தவிர, வேற எதையும் எதிர்பார்க்க மாட்டேன்.
''அவனுக்கு வள்ளல் மனசு. இந்த விஷயத்துல என் மேல வருத்தம் இருந்தாலும், போகப் போக புரிஞ்சுகிட்டான்,'' என, ராஜா சொல்ல, வாயடைத்து போயினர், விஜயும் முரளியும்.
'என்னதான் உண்மையான நண்பனாக இருந்தாலும் , ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது தானே யதார்த்தம். இவர் என்னவென்றால், பணத்தில் கோடீஸ்வரனாக இருக்கும் சாப்ட்வேர் எம்.டி.,யை விட, எதையும் எதிர்பார்க்காத குணத்தில் மிகப் பெரிய மனிதராக இருக்கிறாரே?' என்று அதிசயத்தில் விழித்தனர்.
முரளி மட்டும் திகைப்பு விலகாது, மீண்டும் கேட்டான்...
''ஐயா, உங்களை புரிஞ்சுக்க முடியல. நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வது தப்பா?''
''அது தப்பில்ல. ஆனா, அதுக்கான தேவை இருக்கணும். நான் வசதியா, சந்தோஷமாத்தான இருக்கேன்? இது போதாதா? நானும், அஞ்சு படுக்கையறை வீட்ல வாழணும். 'ஆடி' கார்ல போகணும்ன்னு என் நண்பன் மாதிரின்னு ஆசைப்பட்டா அதுல, என்னப்பா நியாயம் இருக்க முடியும்?
''நட்புங்கிறது ஒரு பூ மாதிரி. அதோட வாசனையை அப்படியே சுவாசிக்கணும். அதை விட்டுட்டு, அதை கசக்கி முகர்ந்தா, பூ வாடிப் போயிரும். எங்க நட்பும் அது மாதிரி தான். நாங்க சந்திக்கும் போதெல்லாம் கூட, யார்கிட்டயும், சொல்ல முடியாத விஷயத்தை பகிர்ந்துப்போம். பள்ளியில் ஆரம்பிச்ச நட்பு கடைசி வரை தொடரணும்ன்னு, ரெண்டு பேரும் ஆசைப்படறோம்.
''நடுவுல வந்த, பணம், வீடு, கார், அந்தஸ்து எல்லாம் எப்ப வேணும்ன்னாலும் போகலாம். ஆனா, நாங்க நண்பர்கள்ங்கிற உறவுலேயிருந்து எப்பவும் பிரிய மாட்டோம். அது போதாதா எங்களுக்கு,'' என்ற ராஜா, சிறிது கலங்கினார்.
முரளியும் நெகிழ்ந்தான். இவரை புண்ணிய ஆத்மா என்று தான் சொல்ல வேண்டும். நல்லவேளை, 'எனக்கு அவரிடம் சிபாரிசு செய்ய முடியுமா?' என, கேட்காமல் இருந்தோம். அந்த துாய நட்பில், ஒரு சுயநலத்தை வைத்து, அதில் மாசு கலக்க நினைத்ததே பெருங்குற்றம் என்பதாக உணர்ந்தான், முரளி.
உடுக்கை இழந்தவன் கை போல நட்பும் உண்டு. நட்பை கற்பாக நினைத்து, எந்த ஆதாயத்தையும் தேடாத அதன் ஜீவனை மற்றும் அனுபவிக்கும் இந்த மாதிரி நட்பும் உள்ளது என்பதை, விஜயும், முரளியும் புரிந்து கொண்டனர்.
கீதா சீனிவாசன்

