/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (13)
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (13)
PUBLISHED ON : ஆக 17, 2025

சிவாஜி பிறந்ததும் அப்பாவுக்கு ஜெயில்!
க டந்த, 1996ல் அமெரிக்காவிலுள்ள, அட்லாண்டா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. சிவாஜிக்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை பார்க்க வேண்டும் என, ஆசை. அட்லாண்டா ஒலிம்பிக்சை சில நாட்கள் பார்த்துவிட்டு, ஒஹையோவில் உள்ள என் வீட்டுக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்த சிவாஜியிடம், 'ஒலிம்பிக்ஸ் எப்படி இருந்தது? துவக்க விழாவை ரசிச்சீங்களா?' எனக் கேட்டேன்.
ஒலிம்பிக்ஸ் துவக்க விழாவில், ஒவ்வொரு நாட்டு விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழுவும், தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஏந்தி, பெருமையோடு அணி வகுப்பில் கம்பீரமாய் நடந்து சென்றதைப் பற்றி மிகவும் சிலாகித்தார்.
குறிப்பாக, நம் இந்திய அணியினர் மூவண்ண தேசியக் கொடியை ஏந்தியபடி அணிவகுத்து சென்றதை பார்த்து, மிகவும் பெருமைப்பட்டதாக சொன்னார். அவருடைய தேசபக்தி, அவர் கண்களில் தெரிந்தது. வார்த்தைகளில் வெளிப்பட்டது.
நான் அவரிடம், 'சிவாஜி, நீங்க வீரபாண்டிய கட்டபொம்மன், சத்ரபதி சிவாஜி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., போன்ற கதாபாத்திரங்களில் நடிச்சிருக்கீங்க. அதேமாதிரி பாரத விலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை போன்ற படங்களில் நடிச்சிருக்கீங்க. இந்த படங்கள் எல்லாம் உங்க தேசபக்திக்கு சாட்சியாக இருக்கு.
'சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட முறையிலும் நீங்க தேசப்பற்று மிக்கவர். நிகழ்ச்சிகளில் பேச்சை முடிக்கும் போது, 'ஜெய்ஹிந்த்' சொல்வது உங்க பழக்கம். உங்களுக்குள்ளே இந்த தேசப்பற்றை உருவாக்கியது எது?' எனக் கேட்டேன்.
என் கேள்வி அவரை உணர்ச்சி பூர்வமாக்கி விட்டது. பதிலேதும் சொல்லாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். அவர் மனம், கடந்த காலத்துக்கு போய் விட்டது. மெல்ல பேசத் தொடங்கினார்...
'எங்க அப்பாவுக்கு நாகப்பட்டினத்துல ரயில்வேயில வேலை. நான், எங்க அம்மா வயித்துல இருந்தபோது, அவங்களைப் பார்க்கறத்துக்காக நாகப்பட்டினத்துல இருந்து விழுப்புரம் வந்தாரு. வழியில தன் சினேகிதர்களைப் பார்க்க நெல்லிக்குப்பம் போனாரு.
'நண்பர்கள் எல்லாருமா சேர்ந்து, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரா, ரயில் பாதையில வெடி வைக்க திட்டமிட்டாங்க. சீட்டுக் குலுக்கி போட்டா, எங்க அப்பா பேரு வந்திருச்சு...' எனச் சொல்லி நிறுத்தினார்.
எனக்கு இந்த செய்தி புதிது. சிவாஜியின் தந்தை, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அதிரடி செயலில் இறங்கியவரா? ஆச்சரியமாக இருந்தது.
சிவாஜி தொடர்ந்தார்...
'எங்க அம்மா, என்னை பெத்தெடுத்த அதேநாளில் தான், ரயில் பாதையில குண்டு வெச்சதுக்காக என் அப்பாவை போலீஸ் கைது பண்ணிட்டாங்க. பிரிட்டிஷ்காரன் துப்பாக்கி கட்டையால அடிச்சதுல இவருக்கு பின் மண்டையில பலத்த அடி. காது கேக்காம போயிடுச்சு.
'வேலுார் மருத்துவமனையில் சேர்த்தாங்க. அப்பாவுக்கு, ஏழு வருஷம் ஜெயில் தண்டனை குடுத்துட்டாங்க. அப்பனை ஜெயிலுக்கு அனுப்பவா, இந்த பிள்ளை பிறந்தான்னு என்னை பலரும் சபிச்சாங்களாம். அம்மா சொல்வாங்க. நல்ல காலம். நன்னடத்தை காரணமா நாலரை வருஷத்துலயே அவரை விடுதலை பண்ணிட்டாங்க...'
சிவாஜியின் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவமா? சிவாஜியின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரரா? இவையெல்லாம் நான் அறியாதவை.
சிவாஜி தொடர்ந்தார்...
'சின்ன வயசுல எனக்கு ரொம்ப பிடிச்ச நாடகம், 'வீரபாண்டிய கட்டபொம்மன்' தான். பரமக்குடியில, 'கதரின் வெற்றி'ன்னு ஒரு நாடகம். அதுல, கதர்கொடி ஏந்தி தேசபக்திப் பாட்டு பாடுவேன்.
'என் நடிப்பைப் பார்த்துட்டு, நாடகம் பார்த்துக்கிட்டிருந்த ஒருத்தர் தொடர்ந்து கைத்தட்டினார். அவரு யாரு தெரியுமா? பெருந்தலைவர் காமராஜர். அப்போ எனக்கு, 10 - 12 வயசு தான் இருக்கும். என் உடம்புல ஓடுறது தேசிய ரத்தம்...' என, உணர்ச்சி பொங்கக் கூறினார், சிவாஜி.
'தேசப்பற்று பற்றி நீங்க சொன்னது, ரொம்ப சுவாரசியமாக இருக்கு. நான் இன்னொரு விஷயம் உங்ககிட்ட கேட்க ஆர்வமாக இருக்கிறேன். ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச போது, நீங்க எப்படி உணர்ந்தீங்க? அந்த நாள் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?' எனக் கேட்டேன்.
'நல்லா ஞாபகம் இருக்கு...' என, ஆரம்பித்தார், சிவாஜி...
'அந்த சமயத்தில் நாங்க, பெங்களூரில் நாடகம் போட்டுக் கொண்டிருந்தோம். ஆகஸ்ட் 15ம் தேதி, பிரிட்டிஷ்காரன் நமக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறான் என, ஊரே சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தது.
'அப்பா, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நானும், சேது பாலம் கட்டின அணில் போல, சின்ன வயசில் தேசபக்தி ஊட்டும் நாடகங்களில் கொடியை கையில் ஏந்தி பாட்டு பாடி நடித்திருக்கிறேனே!
'அதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. நாடு விடுதலை பெறுவதை எப்படி கொண்டாடுவது என, எனக்கு தெரியவில்லை. ஆனால், மனசு முழுக்க சந்தோஷமும், பெருமையும் நிறைந்திருந்தது.
'சுதந்திர தினத்தை மக்கள், தீபாவளி, பொங்கல் மாதிரி இல்லாமல், நாம் எல்லாரும் இந்தியர்கள்; நாம் எல்லாம் ஒன்று என்ற உணர்வோடு கொண்டாட வேண்டும் என்பது, என் கருத்து...' என, உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.
எம். ஜி.ஆரை, தன் அண்ணன் என்றே எப்போதும் குறிப்பிடுவார், சி வாஜி. அதேபோல, இன்னொருவரையும் தன் அண்ணனாக மதித்தார், சிவாஜி. அவர் யார் தெரியுமா?
எம்.ஆர்.ராதா. அவரை குறிப்பிடும் போது, ராதா அண்ணன், ராதா அண்ணன் என்றே சொல்வார், சிவாஜி.
ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது, எம்.ஆர்.ராதா பற்றி சொல்ல ஆரம்பித்து, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு போனார், சிவாஜி.
'சிவாஜி, நீங்களும், எம்.ஆர்.ராதாவும் சேர்ந்து நடித்த படங்களைப் பார்த்திருக்கிறோம். நீங்கள் இருவரும் நாடகங்களிலேயும் சேர்ந்து நடிச்சிருக்கீங்களா?' என, ஆச்சரியமாகக் கேட்டேன்.
'ஆமாம். நாடகத்துல நடிக்கிற நாட்களில், அவர் எங்களுக்கெல்லாம் பெரிய அண்ணன் மாதிரி இருந்தார். நாடகக் குழுவில் இருக்கும் பசங்கள் மீது, அவருக்கு பாசம் அதிகம். எங்களுக்கெல்லாம் நீளமா முடி இருக்கும். அவரு தான் எங்களுக்கு தலைவாரி விடுவார்.
'ராதா அண்ணன், நடிப்புல மட்டும் புலி இல்லை; அவருக்கு நாடகத்துல அத்தனை வேலைகளும் அத்துபடி. எலெக்டிரிகல் வேலை கூட, அவருக்குத் தெரியும். வில்லன், காமெடி மற்றும் 'ஹீரோ' என, எந்த வேஷம் குடுத்தாலும் அவரு பிச்சு உதறிடுவாரு...' என, எம்.ஆர்.ராதா நினைவுகளை என்னிடம் மடை திறந்த வெள்ளமாக சொன்னார்.
'ராதா அண்ணன் தனியா நாடகக்குழு ஆரம்பித்த போது, என்னை கூப்பிட்டாரு. நானும் அவர் குழுவுல சேர்ந்து நடிச்சேன். ஆனால், தொடர்ந்து நாடகக் கம்பெனியை நடத்த முடியாத சூழ்நிலை வந்தது. விட்டு விலகி விட்டார்...' எனச் சொல்லி, ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.
'பதிபக்தி' என்ற நாடகத்தில், ராதாவுக்கு வில்லன் வேஷம். சிவாஜிக்கு பெண் பிள்ளை வேஷம். ஒரு காட்சியில், எம்.ஆர்.ராதாவைக் கீழே தள்ளி அவரை, சிவாஜி மிதிக்க வேண்டி இருந்தது. 'அண்ணனை தள்ளிவிட்டு அவரை மிதிக்க மாட்டேன்...' என, மறுத்திருக்கிறார், சிவாஜி.
அப்புறம் என்ன நடந்தது?
அடுத்த வாரம் சொல்கிறேன்.
- தொடரும்.
- எஸ். சந்திரமவுலி

