
வலிய வந்து, 'லிப்ட்' தருகின்றனரா... உஷார்!
உறவினர் மகனின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, வெளியூர் சென்றிருந்தேன். திருமண மண்டபத்திற்கு எதிரிலுள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார், துாரத்து உறவினர், ஒருவர்.
அவரிடம் நலம் விசாரித்து, பேசிக் கொண்டிருந்த போது, எங்களுக்கு அருகில் காரை நிறுத்திய டிரைவர், 'பஸ் ஸ்டாண்டு போறீங்களா சார்? நான் அந்த பக்கமா தான் போறேன். என் கார்ல, 'லிப்ட்' கொடுக்கிறேன். வர்றீங்களா?' என, கனிவாக பேசினான்.
அவன் பேச்சு நம்பிக்கை அளித்தாலும், அவன் கையில் இருந்த மொபைலில் வந்த ஏதோ செய்தியை அவசரமாக மறைத்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உடனே சுதாரித்து, என் உறவினரிடம், 'அந்நியர்களை நம்ப வேண்டாம், மாமா. நான் உங்களை பஸ் ஏற்றி விடுகிறேன். நீங்கள் அதிலேயே செல்லுங்கள்...' என, எச்சரித்தேன்.
உஷாரான உறவினர், அந்த கார் டிரைவரிடம், 'தம்பி, கார் பயணம் எனக்கு பழக்கமில்லை. நான் பஸ்லேயே போய்க்கிறேன்...' என, சமயோசிதமாக பதிலளித்து, அவனை அனுப்பினார்.
பின் என்னிடம், 'சீர் செய்யறதை, பணமா செஞ்சுடலாம்ன்னு, இரண்டு லட்ச ரூபாய் கொண்டு வந்தேன். இங்கே வந்து பார்த்தா, உறவுக்காரங்க எல்லாரும் நகை தான் வாங்கி வந்திருக்காங்க. அதனால், பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கிற நகைக்கடையில் நகை வாங்கி வரச் சொல்லிட்டாங்க, என் மனைவி.
'அதை எப்படியோ மோப்பம் பிடிச்சுக்கிட்டு வந்த, அந்த டிரைவர் எனக்கு, 'லிப்ட்' தர்றேன்னு ஏத்திக்கிட்டு போய், பணத்தை அடிக்க ஐடியா பண்ணியிருக்கலாம். நல்லவேளை, உன் எச்சரிக்கையால், என் பணம் தப்பிச்சது...' என்றார், உறவினர்.
வாசகர்களே... யாராவது வலிய வந்து, கார் அல்லது பைக்கில், 'லிப்ட்' தருவதாக கூறினால், ஒரு முறைக்கு இருமுறை யோசித்து, முடிவெடுங்கள்.
— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.
ஆசிரியையின் சபாஷ் முயற்சி!
ஒரு வேலை நிமித்தமாக உறவினரைப் பார்க்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
'எங்க பையனை அப்படியே ஸ்கூல்ல விட்டுட்டுப் போயிடலாம். நீங்களும் வாங்க... அங்கே இருக்கும் இன்னொரு விசேஷத்தையும் நீங்கள் பார்க்கலாம்...' எனக் கூறவே, பள்ளிக்கு உறவினருடன் சென்றேன்.
இறை வணக்கம் முடிந்ததும், மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல், உற்சாகம் ததும்ப அங்கேயே நின்றிருந்தனர். தலைமை ஆசிரியை வந்து ஏதோ கூற, அனைத்து மாணவர்களும் பலமாக சிரிக்க ஆரம்பித்தனர்.
சூழ்நிலை மறந்து, ஆளாளுக்கு இஷ்டம் போல் சத்தமாக சிரித்துக்கொண்டே இருந்தனர். சில நிமிடங்களில், தலைமை ஆசிரியை மீண்டும் ஏதோ கூற, சிரிப்பொலி அடங்கியது. பிறகு, வகுப்புகளுக்கு சென்றனர், மாணவர்கள்.
நான், உறவினரை வித்தியாசமாக பார்க்க, 'தியானம் போல் இதுவும் ஒரு வகையான மனப்பயிற்சி. மாணவர்களுக்கு மன அழுத்தம் நீங்கி, ஒருவருக்கு ஒருவர் நட்புடன் இருக்கவும், மனதை, 'ரிலாக்ஸ்' ஆக வைக்கவும் பெரிதும் உதவுகிறது.
'சிரிப்பதற்கு காரணம் எதுவும் தேவை இல்லை. குறிப்பிட்ட நிமிடங்கள் தொடர்ந்து சிரித்து அனைவரும் மகிழ வேண்டும். எனவே, தலைமை ஆசிரியை இப்படி ஒரு புத்துணர்வு பயிற்சி முறையை அறிமுகப்படுத்தி இருப்பது, மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...' எனக் கூறி முடித்தார், உறவினர்.
பல்வேறு பிரச்னைகள் மற்றும் 'டென்ஷன்' நிறைந்த இன்றைய சூழலில், இதுபோன்ற ஒரு மனப்பயிற்சி உண்மையிலேயே மனதுக்கு அருமருந்து தான். பள்ளி தலைமை ஆசிரியையின் இந்த வித்தியாசமான முயற்சியை மற்ற பள்ளிகளும் பின்பற்றலாமே!
— எம்.சுப்பையா, கோவை.
ஊழியர்களையும் முன்னேற்றும் நிறுவனம்!
நான் பணியாற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஆர்வமுடன் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள். எனவே, அவர்களது அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் முன்னேற்றும் விதமாக, படிக்க ஊக்கப் படுத்துவர்.
அவர்களுக்கு கல்வி கற்க உதவுவது மட்டுமல்லாமல், தேர்வுக்காக விடுமுறை வழங்குவது என, அனைத்து உதவிகளையும் செய்வர்.
நான் பணிபுரியும், அலுவலகம், 10 ஆண்டை நிறைவு செய்தது. இதை கொண்டாடும் விதமாக, அனைத்து கிளை ஊழியர்களையும், ஏற்கனவே பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களையும் அழைத்திருந்தனர், நிர்வாகத்தினர்.
இந்த நிறுவனம், 10 ஆண்டுகள் ஆற்றிய சாதனையையும், அதற்கு துணையாக இருந்த பணியாளர்களையும், அவர்கள் செய்த சாதனைகளையும் விளக்கினர்.
மேலும், இங்கு வேலை செய்து கொண்டே மேற்படிப்பு படித்து முன்னேறியவர்களையும் கவுரவித்தனர்.
இதில், கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறியது மட்டுமின்றி, அனைவருக்கும் வெள்ளி நாணயமும் வழங்கி கவுரவித்தனர்.
இது, புது முயற்சியாக இருந்தது மட்டுமின்றி, பணியாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது.
— ம.லோகேஷ். திருப்பூர்.

