
ஆகஸ்ட் 22 - சென்னை 386வது தினம்
ஏ.கே.செட்டியார் தொகுத்த, 'தமிழ்நாடு நுாறாண்டு களுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்' என்ற நுாலிலிருந்து: செ ன்னப்பட்டனத்தின் இயல்பை புரிந்துகொள்ள அதிகாலையிலிருந்து, கவனிக்க வேண்டும்.
துாங்கி எழுந்து, கண்ணை நிமிட்டிக் கொண்டு, வெளிப் புறப்பட்டவுடன், வாசற்படியிலோ, வீதியிலோ முனிசிபல் டபிள் எருது சாரட்டாகிய குப்பை வண்டியின் தரிசனம் முதலில் கிடைக்கிறது. இது தான், பட்டணத்து முதல் கோபுர தரிசனம்.
அப்புறம், சாக்கடையை நோண்டிக் கிளறி விடுகிற முனிசிபல் சாக்கடை உத்தியோகஸ்தர்களையும், அவர்களுக்கு ஒருபடி உயர்ந்த சாக்கடை மேஸ்திரிகளையும், அவர்களுக்கு அடுத்தாற்போல் ஒரு கூடையும், துடைப்பக் கட்டையும் எடுத்துக் கொண்டு, வீடு வீடாய்ப் புகுந்து வீதி, வீதியாய்ப் போகும் ஒய்யார கோமளங்களையும், அவர்களின் வண்டிகளையும், அவ்வண்டிகளின் சாரதிகளான ஆணழகர்களுடைய சிறப்பையும் தரிசனம் செய்ய நேருகிறது. இது, காலை 6:00 மணி சங்கதி.
காலை, 7:00 மணியானாலோ, அங்கங்கே வேலைக்காரிகள், வேலைக்காரர்கள் கூடைகளையும், தட்டுகளையும் துாக்கிக் கொண்டு ஆப்பம், ரொட்டி சந்தைக்கடை சாமான்கள் முதலியவைகளை வாங்கப் புறப்பட, அவர்களின் வெகு வேக நடை, பசந்தான உடை, இவற்றின் வேடிக்கை சென்னப்பட்டனத்தில் ஒரு பெரும் சிறப்பாயிருக்கும்.
காலை, 8:00 மணியானாலோ, நாட்டுப் புறங்களிலிருந்து பிழைக்க வந்திருக்கிற காட்டான், மோட்டான், காக்கான், மூக்கான்களாகிய கட்டை வண்டியை பிடித்துக் கொண்டு, செட்டு செட்டாய் புறப்படும் வேடிக்கை வெகு தமாஷாயிருக்கும்.
அப்புறம், 9:00 - 10:00 மணியானாலோ, ஆபீஸ் உத்தியோகஸ்தர்கள் அடுக்கடுக்காய் புறப்படுவார்களய்யா! அவர்களுடைய டீக்கென்ன, போக்கென்ன, மீசை முறுக்கென்ன, தலைப்பாகையின் பளபளப்பென்ன, கோட்டென்ன, பூட்ஸென்ன, வெள்ளை வெளேரென்று சுண்ணாம்புச் சுவரைப் போன்ற உடுப்புகளின் ஒய்யாரமென்ன, தாம்பூலம் மெல்லும் தளுக்குச் சிங்காரமென்ன, துப்பிக் கொண்டே போகும் சோக்கு என்ன!
நாமம், பொட்டு மற்றும் விபூதி. இவைகள் அவர்கள் நெற்றியிலே அழகு தந்து துலங்கும் சுதந்தரமென்ன. வண்டிகள், ரதங்கள் புறப்படும் வரிசையென்ன. ஜட்கா வண்டிக்காரருடைய கிராக்கி என்ன, பள்ளிச் சிறுவர் - சிறுமியர் அலங்காரமாய் நடந்து செல்லும் ஆனந்தமென்ன, இவைகளெல்லாம் சிறப்பிலும், மகா சிறப்பு.
பின்னர் என்ன சிறப்பு என்பீர்களோ? அந்த கண்றாவியையும் கேளுங்கள். ஒரு ஜட்கா வண்டி, ஒரு கிழவன் மேலேறி அவன் எமலோகம் போய் சேர்ந்துவிட்டானென்ற சேதி சிறப்பு. ஒரு கோச்சு வண்டி, ஒரு பெண்மணியின் தலை மேல் ஏறி, மண்டை நொறுங்கி போச்சு என்ற சிறப்பு.
ஒரு கட்டை வண்டி, ஒரு குழந்தை மேல் ஏறியது என்ற சிறப்பு. ஒரு மோட்டார் வண்டி, சைக்கிளில் மோதிக் கொண்டது என்ற சிறப்பு. கடைசியாக, டிராம் வண்டி, ஒருவன் மேலேறி அவனை ஒரு பர்லாங் துாரம் தரையிலேயே தொங்கத் தொங்க இழுத்துக் கொண்டு போனது என்ற பேரிழவுச் சிறப்பு.
அது கடந்தாலோ, ஐகோர்ட்டு, சின்னக் கோர்ட்டுகளிலும், ரயில்வே ஸ்டேஷன்களிலும், ஜன சந்தடியின் மத்தியிலும், ஜோப்பில் கைபோடும் தகல் பாஜிகளின் சிறப்பு. இது, ஆனவுடன் ரயில் வண்டிகளின் கோஷ்டம், பஞ்சாலை யந்திரங்களின் சங்கு நாதம், வீதி வண்டிகளின் கட கட த்வனி இவை போன்ற பலவும் சேர்ந்து தலை நோவெடுத்துக் கொள்ள செய்யும் சிறப்பு.
இப்படியே மத்தியானம் கழிந்து சாயந்திரமானாலோ, காப்பி ஹோட்டல்களின் சிறப்பு. அதற்கு மேல் அன்றைய தினத்து பத்திரிகைகள் வெளியான சிறப்பு. அதைப் பார்க்க கூட்டங்கூடும் படித்த புள்ளிகள். அடுத்து, பயாஸ்கோப்பு காட்சி சிறப்பு. வெளியூராரை மயக்க ஓட்டைப் பவுண்டன் பேனாவை விற்கும் சிறப்பு.
பிறகு, பொழுது கொஞ்சம் சாய்ந்தாலோ, வெள்ளை வெளேரென்று உடுத்திக் கொண்டு தெருவாசலில் நிற்கும் தேவதைகளின் சிறப்பு. அதன்பின் தீபம் வைத்தாலோ, நாகரிக மதுக் கடைகளின் சிறப்பு. அப்பால் இரவில் உண்டு விட்டு நாடகங்களுக்கு செல்லும் சிறப்பு.
நவம்பர் 8, 1926ல் வெளியான, 'ஆநந்த குண போதினி' இதழில், இப்படி அந்நாளைய சென்னையில், மக்களின் ஒருநாள் வாழ்க்கை முறையை பதிவு செய்துள்ளார், எஸ்.ஜி.ராமானுஜ நாயுடு.
நுாறாண்டுகள் கடந்த பின்னரும் சென்னையின் நிலைமை பெரிதாக மாறவில்லை என்றே தோன்றுகிறது அல்லவா!
- நடுத்தெரு நாராயணன்

