
விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வழியில் உள்ள திருத்தலம், திருக்கோவிலுார். இங்கு, மகாவிஷ்ணு, உலகளந்த பெருமாளாக திரிவிக்கிரமன் ரூபத்தில் அருள் புரிகிறார். இங்கு, கிருஷ்ணனின் அக்கா மாயாவிற்கு, தனி சன்னிதி உள்ளது.
தன் தங்கைக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை தான் தனக்கு எமன் என்பதை அறிந்த கம்சன், அவளுக்கு பிறக்கும் ஆறு குழந்தைகளை கொன்று விடுகிறான். ஏழாவதாக பிறந்த மாயாவை கொல்ல முயற்சிக்கும் போது, அவன் கையிலிருந்து நழுவி, மேல் நோக்கிப் பாய்ந்து, அவனை எச்சரிக்கிறது, அந்த குழந்தை.
'தேவகி - வசுதேவருக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ மாள்வது உறுதி...' என்கிறது.
அப்படி, துர்க்கை வடிவில் தோன்றி எச்சரித்த, மாயா, தன் தம்பி கண்ணனோடு சேர்ந்து கோவில் கொள்ள விரும்பி தேர்ந்தெடுத்த இடம் தான், திருக்கோவிலுார். இங்கே தனி சன்னிதி கொண்டிருக்கும் துர்க்கை, கண்ணனின் அக்கா என, புராணம் கூறுகிறது.
இதேபோல், சென்னை நங்கநல்லுாரில் உள்ள, உத்தர குருவாயூரப்பன் கோவிலில், பகவான் கண்ணனுக்கும், மகாமாயாவிற்கும் தனி சன்னிதி உள்ளது. இந்த இரண்டு கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜை நடைபெறும். அதன்பின் தான் கண்ணனுக்கு பூஜை நடக்கும்.

