sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஐ லவ் இந்தியா!

/

ஐ லவ் இந்தியா!

ஐ லவ் இந்தியா!

ஐ லவ் இந்தியா!


PUBLISHED ON : ஆக 10, 2025

Google News

PUBLISHED ON : ஆக 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அ ப்பா, எத்தனை தடவை கேட்கறது. இந்த, 'ஷோகேசில்' உள்ள அழகான கண்ணாடி பெட்டியிலே ஏதோ ஒண்ணை வச்சிருக்கியே. அது என்ன?'' என, தன் தந்தை ரத்னகுமாரிடம் கேட்டான், 10 வயது மகன் பரத்.

''ஆமாம்பா நானும் தான் பார்க்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் நேரம் வரும்போது சொல்றேன் தான் சொல்றீங்க, எப்ப தான் சொல்வீங்க,'' என, தன் அண்ணனின் கேள்விக்கு, தானும் வலு சேர்க்கும் வகையில் நச்சரித்தாள், அவரின் செல்லக் குட்டி, இந்து.

அந்த கண்ணாடி பெட்டி சம்பந்தமாக, எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை மாற்றங்கள். அவைகள் மகிழ்ச்சி கலந்த சோர்வுடன் பின்னி இருப்பதை, காபி டம்ளருடன் வந்த மனைவி, மல்லிகாவை பார்வையால் அரவணைந்தான், ரத்னகுமார்.

''சரி... அம்மா ஓ.கே.,ன்-னா, அம்மாவே ஆரம்பிக்கட்டும். நான் அப்புறம் சொல்கிறேன்,'' என்றான், ரத்னகுமார்.

''சரி சரி பள்ளிக்கூடம் கிளம்புங்க. இன்று ராத்திரி நாங்க சொல்கிறோம்,'' என, இருவரையும் சுறுசுறுப்புடன் பள்ளி செல்ல தயாராக்கினாள், மல்லிகா.

இ ரவு சுறுசுறுப்பான பிள்ளைகளை பார்த்த, மல்லிகா, ''அப்பாவே சொல்ல ஆரம்பிப்பார்,'' என்றாள்.

''சரி, சரி. நம்ப நாடு அமெரிக்கா இல்லை, இந்தியா. நான், 17 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கா வந்துவிட்டதாக, ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதாவது, உங்க அம்மாவை நான் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன், நான் இப்ப பார்க்கிற உங்க அப்பா போல் இருக்க மாட்டேன்.''

''அப்போ, 'சில்வர் ஹேர்' எல்லாம் இருக்காதாப்பா,'' என, கொஞ்சம் விபரம் தெரிந்த, பரத் கேட்டான்.

''அப்படின்னா, உனக்கு என்னை மாதிரியே கருப்பு முடியா இருக்கும் தானே,'' எனச் சொல்லி, அப்பாவை நெருங்கி உட்கார்ந்து, 'செல்லம்' என கொஞ்சினாள், இந்து.

அப்பாவிற்கும், மகளுக்கும் எப்போதுமே ஒரு தனிப்பட்ட பாசம் கொஞ்சம் அதிகம். அப்பா - மகள் உறவு வள்ளிக்கிழங்கு, கேரட் போல எவ்வளவு வளர்ந்தாலும் பூமிக்குள்ளேயே அப்பா என்ற மண்ணை அரவணைத்தே வளரும்.

அப்பா - மகன் உறவு என்பது, அப்பா என்ற மண்ணை ஆதாரமாக கொண்டு வளர்ந்தாலும் வெண்டைக்காய், கத்திரிக்காய் போல வளர்ந்த உடன் மண்ணுக்கு வெளியே வந்து, வெளி உலகத்துடன் இணைந்து தனித்தன்மையுடன் இருக்கும். இரண்டின் வளர்ச்சிக்கும் அப்பா என்ற ஆணிவேர் தான் காரணம்.

''கல்யாணம் ஆன புதிதில் கூட, நான், முரட்டு சுபாவத்துடன், கொஞ்சம் நாஸ்திகவாதம் செய்யும் இளமையுடன் தான் இருந்தேன்.''

''முரட்டுதனம்ன்னா, எங்களை எல்லாம் அடிப்பியா, அப்பா,'' என்ற இந்துவின் குழந்தைத்தனமான கேள்விக்கு, அன்று தனக்கு ஏற்பட்ட மனவலிகளை நினைத்து பார்த்துக் கொண்டாள், மல்லிகா.

அதை பார்வையாலேயே புரிந்து கொண்டவன், மல்லிகாவே தொடரட்டும் என, விழியால் கேட்டுக் கொண்டான், ரத்னகுமார்.

கணவரின் தர்மசங்கடத்தை புரிந்து கொண்டு, ''முரட்டுதனம்ன்னா, சினிமா வில்லன் போல் இல்லம்மா. சற்று முன்யோசனை இல்லாத கோபக்காரர். அப்போது, உன் தாத்தா - பாட்டி, குல தெய்வமான திருப்பதிக்கு சென்று வரலாம் என, எங்களை கேட்ட உடன், 'அதெல்லாம் எதற்கு வீட்டிலேயே இருந்து கும்பிட்டா போதாதா...' என கேட்டார்.

''உடனே, தாத்தா - பாட்டி முகம் சுருங்கிவிட்டது. நான், வாழைப்பழத்தை போட்டோவுல பார்ப்பதற்கும், வாழைத் தோட்டம் சென்று பழுத்த வாழைப்பழத்தை பார்த்து மகிழ்ந்து சாப்பிடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் என விளக்கி, உன் அப்பாவை வம்படியாக கோவிலுக்கு அழைத்து செல்வேன்.

''மேலும், உன் அப்பா சின்ன வயசிலிருந்தே அமெரிக்காவில் இருந்ததால், இந்தியா என்றாலே அவருக்கு பிடிக்காது. இந்தியா என்றால் வறுமையான நாடு, அழுக்கு பிடித்த நாடு, ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த நாடு என்றே நினைத்து, இந்தியா என, பேச்சு எடுத்தாலே முகம் சுளிப்பார்,'' என்றாள், மல்லிகா.

''அப்பா எப்படி, இந்தியா பெண்ணான உன்னை திருமணம் செய்து கொண்டார்,'' எனக் கேட்டாள், இந்து.

''நான், கும்பகோணத்து பொண்ணு தான். அப்பாவிற்கு அழுக்கு தான் பிடிக்காதே தவிர, அழகு பிடிக்கும். அதனால் தான் என்னை கல்யாணம் பண்ணிக் கொண்டார். கல்யாணம் ஆன உடன், கும்பகோணம் தெருவில் நடக்கும்போதே மற்றவர்களைப் பார்த்து முகம் சுளிப்பார். தெருவெல்லாம் பள்ளம், சேறு, குப்பை, குட்டை என, திட்டிக்கொண்டே வருவார்,'' என்றாள்.

''இப்ப மட்டும் எப்படி, இந்தியா பிடித்து விட்டது,'' என்றான், பரத்.

''ஒரு சமயம், அதாவது கல்யாணம் ஆகி, 15 நாட்களுக்கு பின், அமெரிக்கா புறப்படுவதற்கு முன் நானும், உன் அப்பாவும் சில பொருட்கள் வாங்க கடைத் தெருவிற்கு சென்றோம். வேஷ்டி கட்டி நடக்க முடியாமல் வந்த, உன் அப்பாவின் செருப்பு அறுந்து விட்டது.

''அதை அருகில் இருந்த செருப்பு தைக்கும் கடைக்கு சென்ற போது, 10 வயது சிறுவன் ஒருவன் கிழிந்த சட்டை, நிஜார் அணிந்து, செருப்பு தைத்துக் கொண்டு இருந்தான்.

''அவனை பார்த்த உடனேயே அப்பாவிற்கு முகம் மாறியது. 'ச்சே, தரித்திரம் பிடித்த ஜனங்கள், தரித்திரம் பிடித்த இந்தியா...' என, இந்தியாவையே ஒட்டு மொத்தமாக வெறுத்து, அந்த சிறுவனிடம் செருப்பை தைக்க கொடுத்தார்.

''அவன், 'செருப்பு தைக்க, இரண்டு ரூபாய். அப்படியே பாலீஷ் போட்டு தரேன் சார். 5 ரூபாய் கொடுங்க...' என்றான். உன் அப்பா அவனை பார்த்து, 'உன் ஏமாற்றும் புத்தியை என்கிட்ட காண்பிக்காதே. இரண்டிற்கும் சேர்த்து, 3 ரூபாய் தான் தருவேன்...' என பேரம் பேசி, 10 ரூபாய் கொடுத்தார்.

''அந்த செருப்பு தைக்கும் சிறுவன், 'மீதி, 7 ரூபாய் இல்லை, சார். உட்கார்ந்து இருங்க. நான் வேறு எங்காவது சில்லரை மாற்றி வருகிறேன்...' என, சென்றான். அவனுக்கு சில்லரை கிடைக்க கால தாமதம் ஆக, உடனே, 'பார்த்தாயா, 10 ரூபாயை ஏமாற்றி எடுத்து கொண்டு ஓடிவிட்டான்...' என அவனை திட்டிக் கொண்டு இருக்கும் போதே, மூச்சு இரைக்க ஓடி வந்து, மீதி சில்லரையை தந்தான், அவன்.

''உன் அப்பா வெறுப்புடன் அவனை பார்த்து, சரியாக சில்லரை உள்ளதா என எண்ணிப் பார்த்து, என்னிடம் ஒரு கேலி புன்னகையுடன் தந்தார். உடனே, நாங்களும் ரயிலில் சென்னை சென்று விமானம் பிடிக்க வேண்டுமே என்ற அவசர கதியில் வீடு வந்தோம்.

''சாப்பிட்டு விட்டு ரயில் நிலையம் கிளம்ப தயாரானோம். எல்லா பொருட்களும் சரியாக இருக்கிறதா என சரி பார்க்கும் போது, அப்பாவின் சின்ன தோல் பை காணவில்லை. வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அப்பாவின் முகம், பேய் அறைந்தது போல் ஆகிவிட்டது.

''அதில் தான் பாஸ்போர்ட், ரயில், விமான டிக்கெட், ஏ.டி.எம்., கார்டு, 50 ஆயிரம் பணம் இருந்தது. வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடிய பிறகும் கிடைத்தபாடில்லை. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், நிலை குலைந்து இருந்தோம். எல்லார் பார்வையும் அப்பா மீது சற்று கோபத்துடன் நோக்கியது.

''அப்பா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். உடனே, என்னை சுவாமி அறைக்கு சென்று, விளக்கேற்ற சொன்னார், உன் பாட்டி. கல்யாணம் ஆகி முதல் தடவையாக கணவருடன் செல்ல தடை ஆகி விடக் கூடாது. உடனே அந்த பை கிடைத்தால் அடுத்த தடவை, இந்தியா வரும்போது, திருப்பதி வருவதாக வேண்டிக் கொள்ள சொன்னார்.

''நானும் உடன் அப்பாவை அழைத்தேன். அவரும் பயணம் தடை படக்கூடாது என்ற நிலையில், அரை மனதுடன் வேண்டிக் கொண்டார்.

''அப்போது, 'சார், சார்...' என்ற குரல் கேட்க, வாசலுக்கு சென்றோம். கையில் காணாமல் போன பையுடன் நின்று கொண்டிருந்தான், அந்த செருப்பு தைக்கும் பையன். அதை பார்த்த உடன், உன் அப்பாவின் மனதில் பல மாற்றங்கள். பூஜை அறையை பார்த்து முதன் முறையாக முழு மனதுடன் சுவாமி கும்பிட்டு, பையை வாங்கி கொண்டார்.

''அந்த சிறுவன், 'அவசரத்திலே இந்த பையை, நீங்க உட்கார்ந்திருந்த, ஸ்டூல் பக்கத்தில் வைத்து மறந்து, ஆட்டோ ஏறி சென்று விட்டீர்கள். நான் எடுத்துப் பார்த்தேன். நான் மாணவன் என்பதால், அதில் உள்ள விலாசத்தை பார்த்து, ஆட்டோவிற்கு காசு தர முடியாத நிலையில், 3 கி.மீ., துாரம் நடந்தே வந்தேன். அதனால், கொஞ்சம் தாமதமாகி விட்டது...' என, தன் மீது வழிந்த வியர்வையை, தன் கிழிந்த சட்டையால் துடைத்துக் கொண்டான்.

''அதில், அனைத்தும் அப்படியே இருந்தது. உன் அப்பா, அந்த சிறுவனுக்கு, 100 ரூபாய் கொடுத்தார். அதை வாங்க மறுத்து, 'என் அப்பா உழைச்சு சாப்பிடணும். அடுத்தவங்க பொருளுக்கு ஆசைபடக் கூடாது என, அடிக்கடி சொல்லி வளர்த்திருக்கார், சார்...' என்ற சிறுவனை பார்த்த உன் அப்பாவிற்கு, அவன் அழுக்கு முகமும், அழகாக தெரிந்தது.

''உன் அப்பா முதல் முறையாக பாசத்துடன், உன் பெயர் என்ன என, கேட்டதற்கு, பரத் என்றான்,'' என, சொல்லி நிறுத்தினாள், மல்லிகா.

அப்போது, அண்ணன் பரத்தை பாசத்துடன் முத்தமிட்டாள், இந்து.

''அப்போதிலிருந்தே உன் அப்பாவிற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. இறை நம்பிக்கையுடன் நேர்மையாகவும், எளிமையாகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவை பிடித்துப் போனது.

''அதனாலேயே வரும்போது கொஞ்சம் இந்திய மண்ணை எடுத்து வந்து, பெட்டியில் போட்டு, 'ஷோகேசி-ல்' வைத்து இருக்கிறோம். அதை பார்க்கும் போது எல்லாம், இந்திய மண்ணில் இருப்பது போலவும், இந்திய மக்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்படுகிறது,'' என்றாள், மல்லிகா.

''என் தாய் நாடான இந்தியாவின் மீது இருக்கும் காதலால் தான், உனக்கும், இந்து என பெயர் வைத்துள்ளேன்,'' என்றபடியே, தன் செல்ல மகள் இந்துவை அணைத்து முத்தமிட்டார், ரத்னகுமார்.

- கே. கே. நாராயணன்






      Dinamalar
      Follow us