/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - பேரிச்சம்பழம்!
/
நம்மிடமே இருக்கு மருந்து - பேரிச்சம்பழம்!
PUBLISHED ON : டிச 15, 2024

குளிர்காலம் துவங்கும் போது, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் வைரஸ்களால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம். பேரீச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் வைட்டமின்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர், நிபுணர்கள்.
பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால், உடலின் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
ஜலதோஷத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேரீச்சம் பழம். தண்ணீர், இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் துாள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்நீரை படுக்கும் முன் குடித்து வந்தால், சளி குறையும்.
குளிர் காலத்தில், நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. பேரீச்சம் பழத்தில் குளுகோஸ், ப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் நிறைய உள்ளது. இது, ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
போதிய நார்ச்சத்து இல்லாத உணவுகளை உண்ணும் போது ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க, பேரீச்சம் பழம் உதவுகிறது.
பொதுவாக, குளிர் காலத்தில், இதயம் சீராக இயங்க, அதிகமான ஆற்றல் தேவை. பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, இதயத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.
அதேபோன்று, குளிர் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மலச்சிக்கல் ஏற்படும். பேரீச்சம் பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது, நம் உடல் இயக்கத்திற்கான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.
குளிர் காலத்தில் சீரான ரத்த ஓட்டம் தேவை. அதற்கு, இரும்புச்சத்து அவசியம். ஒவ்வொரு பேரீச்சம் பழத்திலும், 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு பேரீச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து, அதை மறுநாள் காலை சாப்பிடுவதால், ரத்த சோகை குணமாகும். பேரீச்சம் பழத்தில் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் என்ற அமினோ அமில மூலக்கூறும் உள்ளது. இவை, குளிர் காலத்தில் நல்ல துாக்கத்திற்கு உதவும். துாங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன், பேரீச்சம் பழங்களை சாப்பிட வேண்டும்.
தேனில் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம், பதட்டம், உடல் சோர்வு உள்ளிட்டவை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், ஞாபக மறதி, ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்னைகள் மற்றும் சரும பிரச்னைகளை சீர்செய்யும். முதியோர் நலன் காக்கும் வைட்டமின் பி12, பேரீச்சம் பழத்தில் உள்ளது.
தொகுப்பு : ரா.திவ்யா