
இரவு சாப்பாட்டுக்கு பின், மகன், மருமகளுடன் ஹாலில் உட்கார்ந்திருந்தார், மாணிக்கம். பத்து வயது பேரனும், எட்டு வயது பேத்தியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
''நாலு நாள் விடுமுறை வருதே, எங்கே போகலாம்ன்னு, 'ப்ளான்' பண்ண வேண்டாமா?'' என்று பேச்சை ஆரம்பித்தாள், மருமகள்.
''திருச்செந்துார் போய், முருகனை தரிசனம் பண்ணிட்டு, அப்படியே கன்னியாகுமரி போய், அங்கே தேவஸ்தானம் பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு வரலாம்மா. என்ன சொல்றீங்க?'' என, தன் விருப்பத்தை சொன்னார், மாணிக்கம்.
விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் அப்பாவிடம் ஓடி வந்து, 'அப்பா... கோவிலுக்கு போக வேண்டாம். கொடைக்கானல் போகலாம். ரொம்ப ஜாலியாக இருக்கும்...' என்றனர்.
''சரி, பிள்ளைங்க ரொம்ப நாளாக சொல்லிட்டு இருக்காங்க. நாலு நாள் கொடைக்கானல் போய், சுத்தி பார்த்துட்டு வரலாம். நல்ல, 'ரிசார்ட்'டா பார்த்து, 'புக்' பண்ணிடறேன்,'' என்று, மகன் சொல்ல, மாணிக்கத்தின் முகம் வாடியது.
எப்போதுமே, அவர் ஆசைக்கு யாரும் மதிப்பு கொடுப்பதில்லை. வயதான காலத்தில் கோவில், குளம் போக வேண்டும் என்ற அவரது ஆசை, இப்படிதான் நிராசையாகப் போய் விடுகிறது. மகனை நம்பி இருக்கும் வயது. அவர் பேச்சு எடுபடப் போவதில்லை என அமைதியாக இருந்தார்.
இதை கவனித்த மருமகள், ''மாமா, திருச்செந்துாருக்கு இன்னொரு முறை போகலாம். இப்ப பிள்ளைங்க ஆசைப்பட்டபடி கொடைக்கானல் போகலாம், மாமா,'' என்றாள்.
பதில் சொல்லாமல் எழுந்து போனார், மாணிக்கம்.
''என்னங்க, மாமாவுக்கு வருத்தம் போலிருக்கு. எதுவுமே சொல்லாம போறாரு,'' என, தன் கணவரிடம் கூறினாள்.
''போகட்டும் விடு. எல்லாம் சரியாயிடும். அப்பா எப்பவும் இப்படித்தான் சின்ன பிள்ளை மாதிரி கோபிச்சுப்பாரு.''
அனைவரும் கொடைக்கானல் கிளம்பினர்.
''நான் வரணுமா என்ன, நீங்க போய்ட்டு வாங்களேன்.''
''என்னப்பா இது. உங்களை எப்படி தனியா விட்டுட்டு போக முடியும். கிளம்புங்க போகலாம்,'' என்று மகன் சொல்ல, வேண்டா வெறுப்பாக துணிமணிகளை எடுத்து வைத்தார்.
''மாமாவுக்கு, கொடைக்கானல் வருவதில் துளியும் இஷ்டமில்லைங்க. இரண்டு செட் டிரஸ் மட்டும் எடுத்து வச்சிருக்காரு.''
''சரி, நீ அவருக்கு வேண்டிய மப்ளர், சால்வை எல்லாம் எடுத்து வை. அங்கே குளிரும். அப்பாவால் தாங்க முடியாது.''
வரிசையாக குட்டி குட்டி, வீடு போல கட்டப்பட்ட அந்த, 'ரிசார்ட்' இயற்கை சூழ, அழகாக காட்சி தந்தது.
''இரண்டு அறைகளுடன் நல்லா வசதியாக இருக்குங்க. மாமாவுக்கு ஒரு அறை கொடுத்துடுவோம். 'ஹீட்டர்' கூட இருக்கு,'' என்றாள், மருமகள்.
பிள்ளைகள் இருவரும் சந்தோஷம் பிடிபடாமல், அந்த இடத்தைச் சுற்றி, சுற்றி வந்தனர்.
காலை காபி, டிபனுக்கு பிறகு, வெளியே சுற்றிப் பார்க்க அனைவரும் கிளம்பினர்.
அறையில் உட்கார்ந்திருக்கும் மாணிக்கத்திடம் வந்தாள், மருமகள்.
''மாமா, கிளம்பலையா, வெளியே போயிட்டு வரலாம். புறப்படுங்க.''
''இல்லம்மா, நான் வரலை. ஏற்கனவே பார்த்த இடம் தான். நான் வந்து என்ன செய்யப் போறேன். நீங்க போய்ட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்.''
கணவனைப் பார்த்தாள்.
''அப்பாவுக்கு வர இஷ்டமில்லைன்னா, விட்டுடு. இங்கேயே இருக்கட்டும். நாம் போய்ட்டு வருவோம். மதியம் வந்து, அவரையும் சாப்பிட அழைச்சுட்டு போகலாம்,'' என்று கூறியவன், மனைவி காதில் மட்டும் விழும்படி கிசுகிசுப்பாக, ''அப்பாவுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. அவரை ஒண்ணும் செய்ய முடியாது,'' என்றான்.
'தாத்தா... வாங்க தாத்தா, குணா குகையெல்லாம் போய் பார்த்துட்டு வரலாம்...' என அழைத்தனர், பேரப்பிள்ளைகள்.
''நான் வரலைப்பா. நீங்க அம்மா, அப்பாவோடு போயிட்டு வாங்க,'' என்று கூறி, அவர்கள் கிளம்பியதும், வெளியே வந்தார். புல்வெளியில் நடந்து, அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்தார்.
'ஒரு வயசுக்குப் பிறகு, பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு வாழ வேண்டிய சூழலுக்கு பெத்தவங்க தள்ளப்படறாங்க. அவர்களுடைய விருப்பங்களை, ஆசைகளை காது கொடுத்து கேட்கக் கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.
'என்ன செய்வது, நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அவர்கள் பராமரிப்பில் இருப்பதை நினைச்சு சந்தோஷப்பட்டு, காலத்தைக் கடத்திட்டு போய் சேர வேண்டியது தான்...' என, நினைத்து வருந்தினார்.
''சார், சென்னையில் இருந்து வந்தாங்களே, அவங்களோடு வந்தவங்க தானே, நீங்க. உங்க மகனா. எல்லாரும் வெளியே சுற்றிப் பார்க்கப் போயிட்டாங்க போலிருக்கு. நீங்க போகலையா?'' பக்கத்தில் இருந்தவர் கேட்க, நிமிர்ந்து பார்த்தார், மாணிக்கம். அங்கே அவர் வயதையொத்த ஒருவர் நின்றிருந்தார்.
''அடிக்கடி பார்த்த இடம் தான்! இங்கேயே இருப்போம்ன்னு இருந்துட்டேன். உட்காருங்க சார். நீங்களும் கொடைக்கானல் சுற்றிப் பார்க்க வந்தவங்களா?'' என, புன்சிரிப்புடன் கேட்டார், மாணிக்கம்.
''இல்லைங்க, இந்த, 'ரிசார்ட்' வச்சு நடத்தறவன். இது என்னோட இடம் தான்.''
''அப்படியா, ரொம்ப நல்லாயிருக்கு. இதை நீங்க தான் கவனிக்கிறீங்களா?''
''வேலைக்கு ஆள் இருக்காங்க. பொழுது போக, அப்பப்ப வந்து போவேன். எவ்வளவு நேரம் தான் வீட்டில் தனியாக இருப்பது,'' என்றவரின் குரலில் சோகம் தெரிந்தது.
''உங்க குடும்பம் எல்லாம் இங்கே இல்லையா?''
''எல்லாரும் இருந்தாங்க. ஆனா, இப்ப எனக்குன்னு யாருமே இங்கே இல்லை. என் மகன் குடும்பம், மனைவி எல்லாரும் ஒரு கல்யாணத்துக்கு போன போது, கார் விபத்தில் இறந்து போயிட்டாங்க.
''கல்யாணம் பண்ணிக் கொடுத்த மகள், அமெரிக்காவில் இருக்கா. இருக்கிற சொத்துக்களை காப்பாற்றி, அவள் கையில் கொடுத்துட்டு, நேரம் வரும் போது போய்ச் சேர வேண்டியது தான்.
''நாம் நினைக்கிற மாதிரி வாழ்க்கை அமைவதில்லை. பேரன், பேத்தி, மகள், மருமகள்னு சந்தோஷமாக வாழற கொடுப்பினை எனக்கில்லை. பணம், காசுக்கு குறைவில்லை. பக்கத்தில் இருந்து சாப்பிட்டியா, என்ன வேணும்ன்னு கேட்க தான் ஆள் இல்லை.
''வயசான காலத்தில் பிள்ளைகள் அருகில் வாழறது சொர்க்கம். அந்தக் கொடுப்பினை எல்லாருக்கும் கிடைப்பதில்லை,'' என்றார்.
மாலை பொழுது, ரம்மியமாக, இருக்க, ''லேக் பக்கம் போய்ட்டு வரலாம் கிளம்புங்க,'' என்றான், மகன்.
மருமகளும், பேரன், பேத்தியும் புறப்பட, தானும் கிளம்பி தயாராக வந்தார், மாணிக்கம்.
''மாமா... நீங்களும் வர்றீங்களா?'' சந்தோஷக் குரலில் கேட்டாள், மருமகள்.
''ஆமாம்மா, நானும் வரேன். என் பேரன், பேத்தியின் சந்தோஷத்தை நானும் பகிர்ந்துக்க போறேன்.''
சால்வையையும், மப்ளரையும் கொண்டு வந்து அப்பாவிடம் தந்தான், மகன்.
''போட்டுக்கங்கப்பா. குளிர் உங்களுக்கு ஆகாது. அடுத்த முறை விடுமுறை வரும் போது, கட்டாயம் எல்லாரும் திருச்செந்துார் போயிட்டு வருவோம்,'' என, சமாதானப்படுத்துவது போல் கூறினான்.
மனதில் இருந்த குறைகள் நீங்கி, தெளிவான மனதுடன் மகனைப் பார்த்து, அன்போடு சிரித்தார், மாணிக்கம்.
- பரிமளா ராஜேந்திரன்