
குடும்ப நலனை விட கொள்கையில் மிக உறுதியாக இருந்தவர், ராஜாஜி. அதற்கு ஒரு சான்று.
கடந்த, 1962ல் நடந்த பொதுத் தேர்தலில், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார், ராஜாஜியின் இளைய மகன், சி.ஆர்.நரசிம்மன்.
அந்த காலத்தில், தி.மு.க.,வுக்கும், ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கும் இடையே தேர்தல் உடன்பாடு இருந்தது. நரசிம்மனை எதிர்த்து, தி.மு.க., சார்பில், சுதந்திரா கட்சியின் ஆதரவோடு, சேலம் கே.ராஜாராம் போட்டியிட்டார்.
மற்ற எல்லா தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்தவர், கிருஷ்ணகிரியில் தன் மகனை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்தார், ராஜாஜி.
'நீ காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறாய். நானோ காங்கிரசுக்கு எதிராக, சுதந்திரா கட்சி நடத்துகிறேன். மேலும், தி.மு.க.,வுடன் தோழமை உறவு உள்ளது. உன்னை ஆதரித்து நான் பிரசாரம் செய்தால், அது என் கொள்கைக்கு விரோதமானது. என் மனசாட்சி இடம் தராது.
'எனவே, கிருஷ்ணகிரி தொகுதியில் உனக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரமாட்டேன்...' என்று உறுதிபடக் கூறினார், ராஜாஜி.
சொந்த மகனாக இருந்தாலும், தன் கொள்கையில், இம்மி அளவும் மாறவில்லை. சொந்த மகன் என்ற குடும்ப பாசம் அவரிடம் எடுபடவில்லை. முடிவு வெளியான போது, நரசிம்மனை எதிர்த்துப் போட்டியிட்ட, கே.ராஜாராம், 8,000க்கும் கூடுதலான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அத்துடன் நரசிம்மனின் அரசியல் அத்தியாயமும் முடிவுக்கு வந்தது.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார், பெர்னாட்ஷா.
ஒருநாள் வகுப்பறையில், மாணவர்களிடம், 'உங்களில் யாருக்கெல்லாம் சொர்க்கம் செல்ல ஆசை?' என்று கேட்டார், ஆசிரியர்.
அனைத்து மாணவர்களும் சொர்க்கம் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால், 'ஐயா எனக்கு சொர்க்கம் செல்ல விருப்பம் இல்லை...' என்றான், சிறுவன் பெர்னார்ட்ஷா.
'ஏன்?' என்றார், ஆசிரியர்.
'இவர்கள் அனைவரும் சொர்க்கத்துக்கு வந்தால், சொர்க்கம் சொர்க்கமாக இருக்காது...' என பதிலளித்தார், பெர்னாட்ஷா.
****
என்.எஸ்.கிருஷ்ணனின் சொந்த நிறுவனமான, அசோகா பிலிம்சின், கணக்கு வழக்குகளுடன் வருமான வரித்துறை அலுவலகம் போனார், அவரது மேனேஜர்.
நிறைய இடங்களில் தர்மம், தர்மம் என்று எழுதியிருந்ததை பார்த்து, துறை அதிகாரி, ஹனுமந்த ராவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. 'இதை எப்படி நம்புவது?' என்று கேட்டார்.
'நீங்க நேரா போய் செக் பண்ணிப் பாருங்க...' என்றார், மேனேஜர்.
கொஞ்சமும் தாமதிக்காமல், ஜட்கா வண்டியில், அசோகா பிலிம்ஸ் அலுவலகம் சென்றார், ஹனுமந்த ராவ்.
வெற்றிலைப் பாக்குப் பெட்டியுடன் வெளியே வந்த, என்.எஸ்.கே.,விடம், 'என் பொண்ணுக்கு கல்யாணம், செலவுக்கு 1,000 ரூபாயாவது வேணும். கல்யாணமே நின்னு போயிடும் போல இருக்கு...' என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டார்.
'ஆயிரம் ரூபாய்காக ஒரு நல்ல காரியம் நிற்க வேண்டாம். கொஞ்சம் பொறுங்க. என் மேனேஜர் இன்கம்டாக்ஸ் ஆபிஸுக்கு போயிருக்கார். வந்ததும் நீங்க கேட்ட பணத்தை வாங்கிட்டு போங்க...' என்றார், என்.எஸ்.கே.,
இன்னார் என்று அறியாமல், தான் கேட்ட உடனேயே, 1,000 ரூபாய் தரும் மனிதனைப் பார்த்து, அதிசயித்து நின்றார், ஹனுமந்த ராவ்.
'உங்களுக்கு கிருஷ்ணன் என்ற பெயரைவிட, கர்ணன் என்ற பெயர் தான் பொருந்தும்...' என்று வாழ்த்திச் சென்றார், அந்த அதிகாரி.
நடுத்தெரு நாராயணன்